இயேசுவின் பிறப்பும் மனிதத்தின் சிறப்பும்
- சேவியர் தமிழ்நாடு
இயேசுவின் பிறப்பைக் காலம் காலமாக மக்கள் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள். சிலருக்கு கிறிஸ்து பிறப்பு என்பது பாடல்களைப் பாடி மகிழும் காலம். சிலருக்கு நன்றாக உண்டு மகிழ்ந்திருக்கும் காலம். சிலருக்கு குடும்பத்தோடு வெளியூர் சென்று பொழுதைக் கழிக்கும் விடுமுறைக் காலம். சிலருக்கு அலங்காரங்களோடு ஆலயத்துக்குச் செல்லும் காலம். சிலருக்கு நட்சத்திரங்கள் தொங்கவிட்டு, குடில் அமைத்து, கிறிஸ்மஸ் மரங்களை வைத்து மகிழும் காலம்.
விழாக்காலங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக வசீகரிக்கின்றன. எந்த ஒரு விழாவையும் அதன் முழுமையான புரிதலோடு கொண்டாடுவதே சிறந்த வழியாகும். அதற்கு அந்த விழா என்ன சொல்கிறது ? அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.
கிறிஸ்து பிறப்பு என்பது, இயேசுவின் பிறந்த நாள் விழா ! ஒரு பிறந்த நாள் விழாவை ஏன் உலகமே கொண்டாட வேண்டும் ? காரணம் பிறந்த நபர் அப்படிப்பட்டவர். அவர் சிரமேற்கொண்ட பணி அப்படிப்பட்டது. இயேசு என்பதற்கு பொருள் விடுவிப்பவர் என்பது தான்..
இயேசுவின் வருகைக்கும், வாழ்க்கைக்கும் இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று உடல் சார்ந்தது, இன்னொன்று ஆன்மா சார்ந்தது. இயேசு தனது பணியை இரண்டு வகைகளிலும் செயல்படுத்தினார். ஒன்றை விடுத்து இன்னொன்றை மட்டும் எடுப்பவர்கள் இயேசுவின் பணியை அரைகுறையாய் அறிந்து கொண்டவர்கள் தான்.
இயேசுவின் வருகையின் முக்கியமான நோக்கம் மனிதநேயமே ! மனிதன் மீது கொண்ட அன்பினால் இயேசு மனிதனாகப் பிறந்தார். மனிதனாய் வளர்ந்தார். மனித பலவீனங்களோடு பயணித்தாலும் அதையெல்லாம் இறையருளால் மேற்கொண்டார். மனித நேயத்தை மறுதலிக்கின்ற எந்த ஒரு மனிதனும் விண்ணகம் நுழைய முடியாது என அடித்துச் சொன்னார்.
இன்னும் சொல்லப் போனால் இரண்டு பாவங்களை மிக முக்கியமானவையாக இயேசு சொன்னார். ஒன்று ஏழைகளை உதாசீனப்படுத்துவது, அவர்களுக்கு உதவாமல் இருப்பது, அவர்களுக்கு ஆறுதல் அளிக்காமல் இருப்பது. இன்னொன்று பிறரை மன்னிக்க மறுப்பது. இந்த இரண்டு பாதைகளிலும் நடப்பவர்கள் நிச்சயம் விண்ணகம் சென்று சேர்வதில்லை என இயேசு அடித்துச் சொன்னார்.
இயேசுவின் வருகை, அன்பைப் பிரகடனப் படுத்தியது ! தன்னைப் போல பிறரை நேசிப்பதே இறைவனின் கட்டளை என்றார். தன்னைப் பின்பற்ற வேண்டுமெனில் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றார். பகிர மறுக்கும் மனம் இருப்பவர்கள் பரமனை நெருங்க முடியாது. செல்வந்தன் விண்ணகம் நுழைவதை விட ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் என்றார்.
கிறிஸ்மஸ் சொல்லும் இன்னொரு பாடம் தாழ்மை ! இயேசு பிறந்தபோது மாடுகள் உணவு உண்ணும் தீவனத் தொட்டியில் தான் அவர் கிடத்தப்பட்டார். அந்த அளவுக்கு அவரது வருகை தாழ்மையின் தளத்தில் இருந்தது. எளிமையான உடையுடன், எளிய பெற்றோருக்குப் பிறந்தார் இயேசு.
இயேசுவின் வருகை நமக்குச் சொல்வது, நாம் மனித நேயத்தை சிரமேற்கொண்டு தீவிரமாய் செயலாற்றுபவர்களாக இருக்க வேண்டும். மதமா, மனிதமா எனும் கேள்வி வந்தால் தயங்காமல் மனிதம் என்று சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், நிராகரிக்கப்பட்டோர் இவர்களின் சார்பாய் நிற்க வேண்டும். போன்ற வாழ்க்கை விழுமியங்களைத் தான். இவற்றை மறுதலிக்கும் போது நாம் இயேசுவின் வருகையை எதிர்க்கிறோம்.
பாட்டுப் பாடிக் கொண்டே இருப்பதையோ, அலங்காரங்களில் அமிழ்ந்து கிடப்பதையோ, நண்பர்களோடு மகிழ்ந்திருப்பதையோ, ஆலய வழிபாடுகளையோ கூட இயேசு முன்னிலைப்படுத்தவில்லை. கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் மரம், நட்சத்திரம், குடில் என எல்லாமே கிறிஸ்மஸ் எனும் உன்னத தினத்தின் அர்த்தத்தை மறைப்பதற்காய் உருவான மதில் சுவர்களே !
கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தம் மனிதனில் இயேசுவைக் காண்பதில் இருக்கிறது. தொழுவில் பிறந்த இறைவனை சக மனிதனின் பழுவில் சந்திக்கும் போது கிறிஸ்மஸ் அர்த்தம் பெறுகிறது. கிறிஸ்மஸ் சொல்லும் அன்பின் பாடத்தை அறிந்து கொள்வோம். இயேசு பிறந்ததன் இன்னொரு நோக்கம் மனுக்குலத்தின் பாவங்களைச் சிலுவையில் சுமந்து தீர்ப்பது. அது இலவசமாய் நமக்குக் கிடைக்கும் மீட்பு. அது கிறிஸ்தவத்தின் நுழைவுச் சீட்டு.
அதன் பின், கிறிஸ்துவின் அன்பின் பணிகளை அயராது செய்பவர்கள் தான் விண்ணகத்தில் இறைவனால் அழைத்துச் செல்லப்படுவார்கள். கிறிஸ்மஸின் உண்மை அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். விழா நாட்கள் மனிதம் விழா நாட்களாய் இருக்க உறுதி எடுப்போம்.
624 total views, 9 views today