என்ரை அவருக்கு ஜின்ஞர் எல் எண்டால் காணும்!
- கே.எஸ்.சுதாகர்.அவுஸ்திரேலியா.
சந்திரசேகரம் குளிருக்கு இந்தமுறை என்றுமில்லாதவாறு ஓவரா அடித்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும் மனைவி மரகதத்திற்கும் நடந்தது சண்டை அல்ல, யுத்தம். போத்தல்கள் தாறுக்கு மாறாக பறந்து பறந்து விழுந்து வெடித்தன. ஹோல் முழுவதும் உடைந்த போத்தில் துண்டுகளும், மதுபான நாத்தமுமாக இருந்தது. வில்லங்கம் விவாரத்து வரைக்கும் போய்விடுமோ எனப் பயந்து ஒடுங்கிப்போயிருந்தார் சந்திரசேகரம். இருவரும் உரப்பாகக் கத்தியதில் களைத்துப் போய்விட்டார்கள். வெளியில சரியான குளிர். வயசும் போட்டுது. சாதுவாக முனகினார் சந்திரசேகரம். குளிரும் வயசும் உங்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா? மரகதம் திருப்பிச் சொல்ல வாயை மடக்கி மூடினார். இதற்கொரு தீர்வு விரைவில் எட்டப்படவேண்டுமென்று மனதைச் சுழலவிட்டார் சந்திரசேகரம்.
சந்திரசேகரத்திற்கு மாலை வேலை. மரகதத்திற்கு பகல் வேலை. மரகதம் வேலைக்குப் போன பிற்பாடு கூகிளைத் துணைக்கு அழைத்தார் சந்திரசேகரம். மதுபான வகைகளுடன் கலந்து குடிப்பதற்கு ஜின்ஞர் எல் திறம் சாமான் என்று கண்டுபிடித்தார். ஜின்ஞர் எல் என்று சொல்லப்படும் இஞ்சி சர்பத்துடன் விஸ்க்கி, வோட்கா போன்றவற்றை என்ன என்ன விகிதத்தில் கலந்தால் சுவையாக இருக்கும், ஜின்ஞர் எல் கொக்ரெய்ல் எப்படித் தயாரிப்பது போன்றவற்றை கூகிள் அவருக்கு விலாவாரியாகக் கற்றுக் கொடுத்தது. பிறகென்ன! கற்றுக்கொண்டவற்றை நடைமுறையில் சாத்தியமாக்குவற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.
கடைக்குச் சென்ற அவர் ஜின்ஞர் எல்,ஜின்ஞர் பியர் போன்றவற்றை முதலில் வாங்கினார். மறக்காமல் ஒறேஞ் யூஸ், அப்பிள் யூஸ் வாங்கிக் கொண்டார். அடுத்துவந்த சனிக்கிழமை, “மரகதம்… இந்த நாலிலை உனக்கு எது பிடிச்சிருக்கு எண்டு குடித்துப் பாத்துச் சொல்லு” என்று கேட்டார். மரகதத்திற்கு ஜின்ஞர் எல் துப்பரவுக்குப் பிடிக்கவில்லை. ஜின்ஞர் பியர் கொஞ்சம் பரவாயில்லை என்றார்.
எனக்கு யூஸ் மாத்திரம் போதும். மரகதம் சொல்ல சந்திரசேகரம் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். மறுநாள் கடைக்குச் சென்ற சந்திரசேகரம் இரண்டு டசின் ஜின்ஞர் எல், இரண்டு யூஸ் போத்தல்கள் வாங்கி வந்தார். ஒவ்வொருநாளும் ஜின்ஞர் எல் குடிக்கும்போது, “மரகதம்… ஜின்ஞர் எல் சுப்பரா இருக்கு. கொஞ்சம் குடிச்சுப் பார்” என்று நோட்டம் விட்டார். மரகதம் அதைத் தொடவும் இல்லை, பார்க்கவும் இல்லை. சக்சஸ் என்று தனது மூளையை மெச்சிக் கொண்டார் சந்திரசேகரம்.
அதற்கடுத்து வந்த திங்கள் கடைக்குச் சென்ற சந்திரசேகரம், விஸ்க்கி, வோட்கா போன்றவற்றுடன் அளந்துவிட மெசரிங் கப் ஒன்றும் வாங்கிக் கொண்டார். கராஜ்ஜிற்குள் இருந்து தனது பரிசோதனை முயற்சிகளை ஆரம்பித்தார். கச்சிதமாக வந்த குடிவகைகளை ஜின்ஞர் எல் போத்தல்களுக்குள் விட்டு மூடிகளால் இறுக மூடி கராஜ்ஜின் கரையோரமாக வைத்தார். வெற்று மதுபானப் போத்தல்களை கவுன்சில் எடுக்கும் பின்னிற்குள் அடியே தள்ளி, வெற்று காட்போர்ட் பெட்டிகளை மேலே போட்டு மூடிவிட்டார். கராஜ்ஜிற்குள் மரகதம் வருவது குறைவு என்பதால் அங்கேயே குடித்துப் பழகினார். உளறிக் கொட்டினார். ஒன்றும் நடக்காமல் போகவே மெல்ல மெல்ல தனது நாடகத்தை வீட்டிற்குள்ளும் அரங்கேற்றினார்.
மரகதம்…. கொஞ்சம் ஜின்ஞர் எல் குடிக்கின்றீரா? எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கோ. இப்பதான் நல்ல பிள்ளையா மாறியிருக்கிறியள். கண்ட கண்ட கன்றாவியளைக் குடியாமல் உப்பிடி நல்லதுகளைக் குடியுங்கோ…
மரகதம்… கொஞ்சம் சைட் டிஷ் ஏதாவது… உருளைக்கிழங்குப் பொரியல், சிக்கன் வறுவல்…
உதுக்கேன் சிக்கன் வறுவல்? முந்தி மது வகையளோடை சாப்பிட்டுச் சாப்பிட்டு பழகிப் போச்சு சரி… பாவமாக் கிடக்கு. செய்து தாறன்.
இப்போதெல்லாம் தனது தயாரிப்புகளில் கொஞ்சம் வீரியம் குறைந்தவற்றை வீட்டிற்குள் உள்ள குளிரூட்டியிலும் வைக்கத் தொடங்கிவிட்டார். வீட்டிற்குள் அளவாகவும், மரகதம் இல்லாத வேளைகளில் கராஜ்ஜிற்குள் அதீதமாகவும் ஜின்ஞர் எல் பருகினார். குளிர் காலத்தில் ஆரம்பித்த இந்த விளையாட்டு கோடைக்கும் தாவியது.
ஒருநாள் சனிக்கிழமை காலை மரகதத்தின் சினேகிதி மாலா தொலைபேசி எடுத்தார். மரகதம்… வீட்டுத்தோட்டத்திலை செய்த மரக்கறியள் கிடக்கு. உதிலை ஒருக்கா கொண்டந்து தந்திட்டுப் போறன். வாப்பா வா. நான் சரிகமப பாத்துக் கொண்டிருப்பன். வந்தவுடனை ரெலிபோன் செய் அல்லாட்டி ஹோலிங்பெல்லை அமத்து. மாலா வந்துவிட்டாள். மரகதம் ரிவியைப் போஸ் இல் விட்டுவிட்டு மாலாவை வரவேற்றாள். அப்பப்பா… வெளியிலை சரியான வெய்யில். கூலா ஏதாவது இருந்தாத் தா. குடிப்பம் அப்பிள் யூஸ்… ஒரேஞ் யூஸ்… எது வேணும்? ஜின்ஞர் எல் வைச்சிருக்கிறியா?
ஓ… நீயும் ஜின்ஞர் எல் குடிப்பியா. என்ரை புருஷனுக்கு ஜின்ஞர் எல் எண்டா உசிரு தெரியுமா?” சொல்லிக்கொண்டே குளிரூட்டியைத் திறந்து ஜின்ஞர் எல் போத்தல் மூடியைத் திருகினார். அது படக்கெனத் திறந்து கொண்டது. மாலாவைக் கண்டுவிட்ட புளுகத்தில் மரகதம் அதைக் கவனிக்கவில்லை. இஞ்சி சர்பத் அருந்தும்போது, ஏதோ மாறுதலாக இருக்கவே மாலா மரகதத்தைப் பார்த்தாள். மரகதம் அப்பிள் யூசைப் பொசுக்குப் பொசுக்கெனக் குடித்தபடி இருந்தார். சரி… ரிவியைக் கொஞ்சம் போடு. எனக்கும் சரிகமப நல்ல விருப்பம்.
என்ரை அவர் குடிகிடியெல்லாம் இப்ப விட்டிட்டார் தெரியுமோ? நான் தான் இப்ப கொஞ்சம் குடிகாரியா மாறிட்டன். சில நேரங்களிலை ஜிஞ்ஞர் பியர் குடிப்பன். அதில கொஞ்சம் அல்ககோல் இருக்கல்லோ?” மரகதம் சொல்லியபடியே மாலாவைப் பார்த்தார். மாலாவின் கால்கள் தாளமிட அவர் ஏதோ ஒரு சுகானுபவத்தில் மூழ்கி இருந்தார்.
இன்னும் கொஞ்சம் ஜின்ஞர் எல் தாறியாடி. படு சுப்பராக் கிடக்கடி…” மாலா மீண்டும் வாங்கிப் பருகினார். மரியாதை கொஞ்சம் குறைவாக இருந்தது.
நீயும் கொஞ்சம் குடியன் மரகதம். இந்த ஜின்ஞர் எல் கொஞ்சம் வித்தியாசமாக் கிடக்கு. உன்ரை புருஷன் எங்கை வாங்கிறாரோ தெரியேல்ல…அடுத்த தடவை மாலாவுக்குக் குடுக்கும்போது தானும் கொஞ்சம் பருகிப் பார்த்தார் மரகதம். அவருக்கும் அது பிடித்துப் போயிற்று. சந்தைக்குப் போயிருந்த சந்திரசேகரம் வீட்டிற்கு வந்தபோது, மரகதமும் மாலாவும் ரிவிக்கு முன்னால் கை கோர்த்து ஆடிக்கொண்டிருந்தார்கள். ரிவியில் ஹகொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்’ பாடல் போய்க் கொண்டிருந்தது. இஞ்சாருங்கோ அடுத்தமுறை ஜின்ஞர் எல் வாங்கேக்கை எனக்கு ஒரு டசின், மாலாவுக்கு ஒரு டசின் கூடவா வாங்குங்கோ.” என்றார் மரகதம்.
587 total views, 6 views today