சீசீரீவி கமராக்களினுடைய கண்காணிப்பின் கீழ் தனித்து வாழுகிற சில முதியவர்கள்!

இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில்தான்
முதியோர் எண்ணிக்கை அதிகம்?
-சர்மிலா வினோதினி இலங்கை.
எங்களுக்கே தெரியாமல் மிக மிக விரைவாக வளர்ந்துவிடுகிறோம், எங்களுக்காக உழைத்த அப்பாவும் அம்மாவும் தேகம் தேய்ந்து மெல்லவே தள்ளாடத் தொடங்கி விடுகிறார்கள். மெல்லிய நடுக்கத்தோடு அவர்கள் உதிர்க்கிற வார்த்தைகளைக் கேட்பதற்கு எங்களின் உலகத்தில் நேரப்பற்றாக்குறை என்று சொல்லிக்கொள்ளுகிறோம். ஆனால் அவர்களின் நிலை? அவர்கள் எங்களிடம் எதிர்ப்பார்க்கிற ஆதரவினையும் பாதுகாப்பையும் வழங்குகிறோமா?
அன்றைக்கு ஒருநாள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்புறமுள்ள வீதியில் நடந்துகொண்டிருந்தேன், எனக்கு முன்னால் ஒரு முதியவர், வெள்ளை வேட்டியும் மென் நீலநிற சேட்டும் அணிந்திருந்தார். நேர்த்தியான தோற்றம், ஓய்வூதியராக இருக்கவேண்டும் கல்வியின் களை அவருடைய தோற்றத்தில் தெரிந்தது, அருகில் வந்தவர் இரத்த பரிசோதனைக்கூடத்தின் அமைவிடத்தை விசாரித்தார். முன்னுள்ள இடத்தை காட்டிவிட்டு நகர்வதற்குள் அவருடைய கால்களில் தள்ளாட்டம், விழப்போகிறாரோ என்று சுதாகரிப்பதற்குள் வீதியில் சரிந்துவிட்டார். ஓடிச்சென்று கைகளை பிடிப்பதற்கு முன்னர் அருகில் வைத்தியசாலை வாயிலில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒரளவிற்கேனும் நிலத்தில் விழாமல் தாங்கிக் கொள்ளவே தள்ளாடியபடி மெல்ல எழுந்து பரிசோதனைக்கூடத்தை பார்த்தார். நான் பாதுகாப்பு உத்தியோகத்தரைப் பார்த்தேன், அவருக்கும் அந்தப் பார்வை புரிந்திருக்க வேண்டும் நான் அழைத்துச் சென்று பரிசோதனை நிலையத்தில் விடுகிறேன் என்றபடி அந்த முதியவரின் கைகளைப் பிடித்தபடி பிரதான வீதியைக்கடந்து நடக்கத் தொடங்கினார். காரியம் முடிந்தது, அந்த முதியவர் பத்திரமாக அழைத்துச் செல்லப்படுகிறார் என்கிற திருப்தியில் நான் மேற்கொண்டு நடக்கத்தொடங்கினேன். ஆனால் அலுவலகம் சென்று சேர்கிற வரையும் அந்த முதியவரின் காலை என்னை ஆக்கிரமித்துக்கொண்டது.

அனேகமாக இரத்தமோ, சிறுநீரோ அல்லது வேறு ஏதோ ஒரு பரிசோதனை செய்வதற்காக உணவைத் தவிர்த்து வெறும் வயிற்றோடு வந்திருக்க வேண்டும், அதனால் ஏற்பட்ட களைப்பாகக்கூட இருக்கலாம், அல்லது உயர் இரத்த அழுத்தமோ, சுள்ளென்ற காலை வெய்யிலைப் பொறுக்க முடியாத தேகமோ, எதுவோ ஒன்று அவரை சோர்வடையச் செய்து மயக்க நிலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஆனால் இந்தத் தள்ளாத வயதில் எதற்குத் தனியாக வந்தார்? பிள்ளைகள் இல்லையா? அவர்களுக்கு வேறு அலுவலக வேலைகளோ? அல்லது பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டிலோ? உள்ளூராயின் பேரனோ பேத்தியோ இல்லையா இந்தத் தாத்தாவின் கரங்களை ஆசுவாசமாய் பற்றி அழைத்துவர? ஒருவேளை அவர் திருமணமே செய்யவில்லையோ? யாருமற்ற தனித்த வாழ்வோ? வாலிபம் ஒடுங்கிய முதுமையின் தனிமையை சூடிக்கொண்ட முதியவரோ? இப்படி பல விடையற்ற கேள்விகள் மனதிற்குள் சுழன்றுகொண்டே இருந்தன, விடை மட்டும் கிடைக்கவில்லை.
இலங்கையில் வடமாகாணத்தில் அதுவும் யாழ்ப்பாணத்தில்தான் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகச் சொல்கின்றன புள்ளி விபரங்கள். இவற்றில் அனேகருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள். இங்கிருக்கிற பெற்றோர்களில் சிலர் இங்குள்ள பிள்ளைகளோடும் சிலர் சீசீரீவி கமராக்களினுடைய கண்காணிப்பின் கீழ் தனித்து வாழுகிற தம்பதிகளாகவும் இன்னும் சிலர் சுமார் ஒருலட்சம் வரை பணம் கட்டுகிற முதியோர் காப்பகங்களிலும், இவை எவற்றுக்கும் வழி கிடைக்காதவர்கள் அரச முதியோர் இல்லங்களிலும் என்று காலத்தை கழித்து வருகிறார்கள். இப்படியாக தனித்து வாழ்கிற முதியவர்களிடத்திலே நோயும் முதுமையும் பின்னிப்பிணைந்து இயங்குகின்றன என்கிறார் புவியல் துறை பேராசிரியர் குகபாலன் அவர்கள்.
வடபுலத்து தமிழ்ச் சமூகத்தின் முதியோர் வாழ்வியலை விளங்கிக் கொள்ளுவதற்கான ஒரு இடமாக திகழ்வது யாழ் போதனா வைத்தியசாலை. இங்கு சிகிச்சைக்காக வருகிற நோயாளர்களில் குறிப்பாக மருத்துவ விடுதிகளில் தங்கி இருந்து சிகிச்சை பெறுகிற முதிய பெற்றவர்களில் அனேகமானவர்கள் தனித்த வாழ்விற்கு தள்ளப்பட்டவர்களாக இருப்பதை காணமுடியும். இந்த முதிய பெற்றவர்களுடைய பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் அல்லது கனடா அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் வசித்துவர இங்கு தமக்கான உதவிகளை அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியோடு நிறைவேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருகிறார்கள். சிலருக்கு அவர்கள் தமது பயணங்களுக்காக தொடர்ந்து பயன்படுத்திவருகிற முச்சக்கர வண்டிச் சாரதிகள் உதவி புரிவதையும் அவதானிக்க முடியும்.
தர்க்க ரீதியாக உரையாடுகிறபோது நாங்கள் எல்லா வசதிகளையும் பெற்றவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக் கிறோம் என்று பிள்ளைகள் கூறமுடியும். ஆனால் என்னதான் வசதிகள் இருந்தாலும் வாய்ப்புக்கள் இருந்தாலும் முதிய வயதில் பெற்றவர்கள் தேடுவது பிள்ளைகளின் அன்பான இரண்டு வார்த்தைகளையும் ஆதரவான தோள்களையும், இடையிலே பேரப்பிள்ளைகளின் கூச்சல்களையும் சேட்டைகளையும் மட்டும்தான்.
எங்களுடைய உலகமாக இருந்தவர்கள் எங்களது அப்பப்பா, அப்பம்மா,தாத்தா,அம்மம்மா என்கிற பெட்டகங்களே! இவ்வளவு வளர்ந்தபிறகும் படுக்கையில் இருக்கிற அம்மம்மாவிடம் இரகசியம் பேசுவதைப்போல திருப்தியான பொழுதுகள் வேறு எவையும் இல்லை.
எங்களுடைய சிறு வயதுகளை அலங்கரித்தவர் ஐயா. அதாவது அப்பாவின் தகப்பனார், அவரை ஐயா என்றுதான் நாங்கள் அழைப்பது வழமை, நல்ல கருத்த தேகத்தில் ஒரு சால்வை, இடையில் சுற்றிக் கட்டிய நான்கு முழ வேட்டி என்று கம்பீரச் சிரிப்போடு நடக்கும் அவருடைய இடையும் தோள்களும்தான் எங்களுடைய பல்லக்கு. இப்படியாக எங்களை தூக்கிக்காவிய தேகம் ஓய்வு எடுக்க உறங்குகிற போதுகூட சின்னச் சின்ன தொந்தரவுகளை கொடுப்பதில் நாங்கள் கில்லாடிகளாய் இருந்தோம். ஐயா வழமையாகத் தூங்குகிற ஒரு கருங்காலி வாங்கு இருந்தது. இரண்டு சீரிய பலகைகள் பொருத்தப்பட்ட அந்த வாங்கின் நடுவில் மெல்லிய கீற்றாக நீளத்திற்கு மெல்லிய ஒரு இடைவெளி இருக்கும். இரண்டு பலகைகளின் இடையில் தெரிகிற அந்த துவாரத்தின் வழி மெல்லிய நெல்லிமரத்தின் காம்புகளை கீழிருந்து மேலாகச் செலுத்தி அவருடைய முதுகில் குத்துகிறபோது சீ!சீ என்றபடி தூக்கம் கலைந்து எழுந்து என்னடா செய்யிறியள் என்று எங்களை முறைப்பாரே தவிர ஒருபோதும் அடித்ததில்லை. அவற்றை இப்போது நினைக்கிறபோது மெல்லிய புன்னகை ஒன்று உதட்டோரம் அரும்பி மறைகிறது.
ஆக இப்போது நாங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், அது முதுமையை புரிந்து கொள்ளுவதும் முதுமை வளத்தை இளையவர்களின் இன்ப உலகிற்கு வழிகாட்டிகளாக்கிக் கொள்வதும்தான். வாழ்வின் நிறைந்த அனுபவத்தை கொண்டிருக்கிற முதியவர்கள் சிறு பிள்ளைகளின் உளவியலை நன்கு அறிந்தவர்களாக இருப்பதோடு பேரப்பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்துகிறவர்களாகவும் மாறிப் போவார்கள். நவீன மயமான வாழ்வியலில் ஓடிக்கொண்டிருக்கிற இந்த உலகத்தில் மனிதநேய உணர்வுகளையும், அறம் துய்க்கும் சமூக வாழ்வையும் இளையவர்களுக்கு கற்றுக்கொடுக்கக் கூடிய முதுமையின் கனதியை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுகிறபோது முதுமையும் இளமையும் சேர்ந்தே இன்புறும்.
553 total views, 2 views today