மூத்த குழந்தைகள்.
- மாலினி மாயா கனடா
மூத்த குழந்தைகளும் எனது வாழ்வியலும். தினமும் நான் சந்திக்கும் என் அன்பிற்கும்,மதிப்பிற்குரியவர்களின் வரலாறு. வாழ்ந்து முடிக்கும் முன் நாம் என்ன செய்கின்றோம் என்பதில் தொடங்கி அதனை செயற்படுத்துவதுவரை நமது அன்றாட வாழ்க்கை சுழன்று கொண்டே இருக்கின்றது. அனுபவமே நமது சிறந்த வழிகாட்டி. இதற்கு நாம் முதலில் நம் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்.
எண்ணம்,மனசு,செயல்.
இவை மூன்றும் நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒன்று. ஆனால் அந்த எண்ணம் நல்லதாக இருக்குமானால்
நமது செயலும் அழகாகிவிடும்.
பிறப்பு உண்டேல் இறப்பு ஒருநாள் நிட்சயம். நாம் வாழும் பொழுதே நம் மனசுக்கு விசுவாசமாய் இருக்க வேண்டும்.காலம் கற்றுத் தந்த பாடமாக மிஞ்சி இருக்கும் வாழ்வை அழகாக்குவோமே. முதுமை எல்லோருக்கும் வருவது இயற்கைதான். ஆனால் அதிலும் தனித்து விடப்படும் யாராக இருந்தாலும், (ஆண்,பெண்) அதிலும் மூத்த குழந்தைகளின் நிலை மிகவும் கவலைக்குரியவிடயமாக பார்க்கிறேன்.
அவர்களிற்கும் எனக்கும் இடையிலான உறவு இற்றைவரை 28 வருடங்களாக தொடர்கிறது. காரணம் ஒருவருடைய வாழ்க்கை மாறும் பொழுது தனிமை எவ்வளவு கொடுமை என்பதை அனுபவரீதியாக பார்க்கிறேன். அதனால் வரும் வலிகள்,வேதனை,விரக்தி, தற்கொலை,பிரிவு,மனச்சிதைவு,பயம்,ஏக்கம் என கூறிக் கொண்டே போகலாம்.
1995 தொடங்கிய பயணத்தில் புலம்பெயர் நாட்டில் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்வதை கண்டு அவர்களிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வில், மூத்த குழந்தைகள் நான்கு சுவர்களிற்குள் அடைபட்டு இருக்காமல் வெளியே தமக்கான தேவைகளை, தமக்குப் பிடித்த விடயங்களை செய்வதற்கு வழி வகுத்து அவர்களோடு மனம் விட்டு உரையாடி அவர்கள் சுயமாக இயங்க வழிகளை அமைத்து கொடுப்பது நமது கடமை.
ஈழத்தில் மூத்த குழந்தைகள் வாழ்ந்த வாழ்க்கை வேறு. புலம்பெயர் தேசத்தில் வாழும் அனேக மூத்தவர்களின் நிலை மிகவும் மனவேதனைக்குரியதே. பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள்,தாமாகவே தனிமையை விருப்பி சென்றவர்கள், தமக்கு உதவிக்காக அழைத்து பின்னர் அவர்கள் உணர்வுகளை புரியாமல்,அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யாத நிலையில் வெளியேறியவர்கள் என பலவகையில் மனநிலை இருப்பவர்கள் அதிகம்.
பிள்ளைகளால் பராமரிக்கப்படுபவர்களை விரல் விட்டு எண்ணலாம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இங்கே எனது கருத்தை பகிர்கிறேன். நாம் வாழும் காலம் கொஞ்சமே அது எவ்வளவு காலம் என்பது எவருக்குமே தெரியாத ஒன்று. நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய நமது பெற்றோரை நாம் தான் வாழும் காலம் நம்மால் முடிந்தவரை அக்கறை எடுத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சுயநிலையில் இருக்கும் போதே அவர்களோடு மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் உங்களோடு சற்று நேரம் உரையாட மட்டுமே விரும்புவர்.
புலம்பெயர்தேசத்தில் அதே மனநிலையுடன் இருக்கும் இவர்கள் மிகுந்த சிரமமாக ஆரம்ப காலகட்டத்தில் இருந்தார்கள். ஆனால் இன்று பல பல மாற்றங்கள். அவர்களிடம் இருக்கும் அனுபவம்,திறமைகளை வெளிக்கொணர்ந்து ஆடல்,பாடல்,யோகாசனம், நாடகம்,சுற்றுலா,ஒன்று கூடல் என பலதரப்பட்ட நிகழ்வுகளை செய்து தமது சின்னச் சின்ன மகிழ்ச்சியினை பல மேடை கண்டு மகிழ்வாக கொண்டாடுகின்றனர். எல்லோருக்கும் தாய்,தந்தை ஒருவர்தான். ஆனால் நான் தேடிய உறவுகளோ எண்ணிலடங்கா. இதற்கு காரணம் நாம் வாழ்ந்து முடிக்கும் முன் நம்மிடம் இருக்கும் நல்லவற்றை கொடுத்துச் செல்ல வேண்டும்
பணத்தால் விலை பேச முடியாத ஒன்று உதவும் மனமும்,அன்பு தான். அதனை நாம் வாழும் காலம் நம் மூத்த குழந்தைகளிற்காக கொடுத்துச் செல்வோமே.
விதை மரமாகிறது. அதில் கிளைகள்,பூக்கள்,காய்,பழம் என்று பூத்துக் குலுங்குகிறது. எவ்வளவிற்கு அந்த மரம் அழகாய் இருக்கிறதோ அதன் வேரும் ஆழமாக,திடமாக வேரூன்றி இருக்கும். அதே போலத்தான் நமது மூத்த குழந்தைகளும். இன்று அவர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்ச்சி,பயிற்சி தமக்கான முயற்சி அதனால் வரும் மகிழ்ச்சியினை காண்கிறேன். உடலில் வலு இருக்கும் வரை முயற்ச்சியை கைவிடாதீர்கள் உங்களிற்குப் பிடித்ததை செய்யுங்கள். உடற்பயிற்ச்சி செய்யுங்கள்.இயற்கையை நேசியுங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
உங்கள் பிள்ளைகள் வளர்ந்து அவர்கள் பாதையில் சென்று விடுவார்கள். நீங்கள் அதற்காக வருந்த வேண்டாம்
உங்களிற்கான பாதையில் செல்லுங்கள். நீங்கள் நீங்களாக இருங்கள்.
இன்று எனது பார்வையில் மூத்த குழந்தைகளின் வாழ்விற்கான தேவைகளை பூர்த்தி செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் உடல் தளர்ந்த நிலை வரும்போதோ,இல்லை தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலையிலோ அதனை கண்டறிந்து தயவு செய்து அவர்களுக்கு உதவுங்கள். அவர்கள் உங்களிடம் பணத்தை எதிர்பார்க்க மாட்டார்கள். உங்கள் மலர்ந்த முகம் காண,அல்லது பேச மட்டுமே விரும்புவார்கள். நமக்கும் முதுமை ஒரு நாள் வரும் அதை மறந்துவிட கூடாது. அந்த நேரம் நம்மை பராமரிக்கவோ,இல்லை பேசவோ யாருமில்லா நிலை வரும்போது இருக்கும் வலி மரணவலி. அந்த நிலையை நமது பெற்றோருக்கு நாம் கொடுக்கலாமா? சிந்தியுங்கள் ,செயலாற்றுங்கள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் ஒருமனிதனை வாழ வைக்கும் இந்த உண்மையை தெரிந்து கொண்டாலே நமக்கான மகிழ்ச்சி வந்துவிடும். இந்தப் பக்குவத்தை அடைந்து விட்டால் எந்த துன்பமும் உங்களை நெருங்காது.
வாழும் காலம் கொஞ்சமே அதனை அழகாக்கி செல்வோமே.
729 total views, 2 views today