எங்கட ஆச்சி.02.

எங்க வீட்டுக் குப்பம்மா

  • காரைக்கவி கந்தையா பத்மநாதன்- இலங்கை.

எங்கட வீட்டில குப்பம்மா எண்டொரு பசு நிண்டது. அது கண்டா இருக்கேக்கையே வாங்கியந்து வளத்தனாங்க. ஆச்சியிட்டை கைத்தீன் வாங்கித் திண்டு திண்டு ஊர்வழிய திரியிற நாம்பன்களுக்கு கண்ணைப்பறிக்கிற மாதிரி நல்ல வடிவா லட்சணமா வளந்து வந்திட்டாள்.

உப்பிடி வளந்தவள் மற்றப்பசுக்கள் மாதிரியே சாமத்தியப்பட்டுட்டாள் எண்டது ஒரு நாள் பறுவம் அண்டைக்கு அவள் குமுறிக் குமுறி அழத்தான் எங்களுக்கு விளங்கினது.

ஆச்சி அப்புவிட்டை உவள் மாட்டைத்தேடி அழுகிறாள் கொண்டே எங்கேயும் மாட்டுக்கு விட்டுக்கொண்டு வாங்கோ இல்லாட்டில் கட்டறுத்து கந்தறுந்து போடுவாள் எண்டு எச்சரிக்கை விட்டா.

முந்தி எங்கட ஊரில உந்த மாட்டுக்கு விடுகிற ஆட்டுக்கு விடுகிற ஆக்கள் இருந்தவை. அவையிட்ட நல்ல வாட்டசாட்டமான நாம்பன்களும் கிடாயளும் டபிள்யூ டபிள்யூ எவ்வில றெஸ்லிங் செய்யிறவங்கள் மாதிரி நிப்பினம். குப்பம்மா மாதிரி கத்திக் குழறுகிற பசுக்களை மறியளைக் கொண்டு போனா அங்கை நிக்கிற நாம்பன்கள் கிடாயள் ஒருமாதிரி அவையைச் சாந்தப்படுத்தி அனுப்பிவிடுவினம்.

குப்பம்மா மாதிரி முதன்முதலா உப்பிடிச்சாந்தம் அடையிற மனிசருக்கெண்டு சாந்தி முகூர்த்தம் வைப்பினம் அது இரகசியமா நடக்கும்.

ஆனா குப்பம்மா மாதிரி ஆக்களுக்கு உது பரகசியமா பட்டப்பகலில் ஆக்கள் பாத்துக் கொண்டு நிக்க வெட்ட வெளியில நடக்கும். ஆனா குப்பம்மா மாதிரியானவை கோல்பேசில இல்லாட்டில் பண்ணைப் பாலத்தில மினக்கெடுகிற ஆக்கள் மாதிரி உதுகளுக்கெல்லாம் வெக்கப்படாயினம்.

அப்பு சுருட்டுக்கொட்டில் வேலைப் பிராக்கில குப்பம்மான்ரை கத்தலைக் கவனிக்கேல்லை. அவளும் ஆத்திரம் தீருமட்டும் வைக்கல் தவிடு புண்ணாக்கு ஒண்டையும் தின்னாம கத்திக்குழறி அடங்கிப்போனாள்.

ஆனாலும் கட்டாயம் அவளுக்கு அப்பு விலையும் ஆச்சியிலையும் கடும் கோவம் இருந்திருக்கும். இரு இரு உந்தச் சீலம்பாயளுக்குச் செய்யிறன் வேலை எண்டு மனசுக்கை கறுவியிருப்பாள். ஒரு நாள் நிண்டாப்போல குப்பம்மாவைக் காணேல்லை. ஆச்சியும் அப்புவும் வயல்சாடுவாய் வளவுகள் எல்லாந்தேடிக்களைச்சுப் போச்சினம்.

பக்கத்தில கதிரவேலு மாமாவின்ரை செங்காரி நாம்பனையும் காணேல்லை எண்டு பேந்துதான் அறிஞ்சம். எனக்கு உவை ரெண்டு பேரும் ஒண்டா மேஞ்சு கொண்டு திரியேக்கையே ஒரு சமுசியம் இருந்தது.

அப்ப அந்த நேரம் பாத்து வெளிநாட்டால வந்த எங்கட சொந்தக்காரர் ஒருத்தர் உதைக் கேள்விப்பட்டுப் போட்டு அதுகள் எங்கையும் டேற்றிங் போயிருக்கும் கொஞ்ச நாளையில சலிச்சுப் போய் திரும்பி வந்திடும் எண்டார். அவர் சொன்ன மாதிரியே ஒருநாள் செங்காரியும் குப்பம்மாவும் தனித்தனிய ஆளொரு பக்கத்தால வந்து சேந்திச்சினம். அவை ரெண்டு பேருக்கையும் ஏதோ மிஸ் அண்டஸ்ராண்டிங் வந்திருக்க வேணும் எண்டு நினைச்சன் எண்டாலும் ஒருத்தரிட்டையும் சொல்லேல்லை.

ரெண்டும் முந்தின மாதிரி சேர்ந்து மேயப்போற வாறதை நிப்பாட்டிப்போட்டினம்.

கொஞ்ச நாளைக்குப் பிறகு நிண்டாப்போல குப்பம்மா பேந்தும் காணாமல் போனாள். பேந்து பழையபடி அப்புவும் ஆச்சியும் தேடித் தேடிக் களைச்சுப்போய் இருக்க வந்த ஒருத்தர் சொன்னார் உங்கட குப்பம்மாவை புன்னாலை வெளியில நல்ல நீக்ரோ மாதிரி வாட்டசாட்டமான நாம்பன் ஒண்டோட திரியக்கண்டன்.

அவை ஒண்டாச் சீவிக்கினம்போல அதாவது லிவிங் ரு கெதர் மாதிரி இருக்கு எண்டார். ஆச்சி உதென்ன இழவாக்கிடக்கு காலாகாலத்தில நான் சொன்ன மாதிரி சின்னத்துரையிட்டைக்கொண்டே மாட்டுக்கு விட்டிருந்தால் உவள் உப்பிடி ஓடுகாலியா வந்திருப்பாளே எண்டு அப்புவைப் பேச அப்பு வழக்கம்போல திருதிருவெண்டு முழிச்சார்.

கொஞ்ச நாளைக்குப் பிறகு பாத்தா குப்பம்பா வயித்தைத் தள்ளிக்கொண்டு வந்தாள். உடனை ஆச்சி அடி குப்பைச்சி எங்கையிடி திரிஞ்சு போட்டு வாயும் வயிறுமா வந்து நிக்கிறாய் எண்டு பரியரிக்கத் துடங்கினா.

பின்னேரம் சுருட்டுக்கொட்டிலால வந்த அப்பு உதைப்பாத்துப்போட்டு குப்பம்மா வலு கெட்டிக்காரி எனக்கு செலவு ஒண்டும் வைக்கேல்லை . இல்லாட்டில் சின்னத்துரைக்கு அம்பது ரூபா அழுதிருக்க வேணும் எண்டு ஆனந்தப்பட்டார்.

ஆனா அப்பு பாவம் அவருக்கு உந்த அம்பது ரூபாவை லாபமாக்கினது கதிரவேலற்றை செங்காரியோ இல்லாட்டில் கடைசியில கொண்டு திரிஞ்ச கறுவலோ எண்டு கடைசிவரையும் தெரியாது. நன்றி : தமிழர் பொருண்மியம்.

719 total views, 12 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *