‘முச்சக்கர வண்டி நூலகம்’
– வ.வடிவழகையன் இலங்கை.
சாவகச்சேரி நகர் கழிந்தபோது, பேருந்துக்கு சமாந்தரமாக புகையிரதமும் பிந்தியும் முந்தியும் தனது தடத்தில் வந்துகொண்டிருந்தது. சாவகச்சேரி நகர் கழிந்த போது புகையிரத இருப்புப் பாதையை குறுக்கறுத்து வந்து பிரதான வீதியில் ஏறும் பாதுகாப்பற்ற கடவைகளில், புகையிரதம் அப்பகுதியைக் கடக்கும் வரை, அப்பகுதி மக்கள் வீதியை மறித்து கயிறுகளால் கட்டி வீதியை மறித்து வைத்திருந்ததையும், புகையிரதம் கடந்ததும் கயிறுகளை அவிழ்த்துவிட்டு சென்றதையும் பேருந்திலிருந்து அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அந்நேரத்தில் வீதியைக்கடக்க வந்த மாணவர்களும் பொதுமக்களும் காத்து நின்று புகையிரதம் கடந்ததும் பயணித்தனர். இந்த விதமாக மிருசுவில், எழுதுமட்டுவாழ் வரை இடைக்கிடை இச்செயற்பாட்டினைக் காணக்கிடைத்தது. கடந்த காலத்தில் இப்பகுதிகளில் புகையிரத மனித விபத்துக்கள் நடைபெற்றதை தவிர்க்கும் நோக்குடன் பொதுமக்களாக தன்னார்வத்துடன் ஈடுபடுகிறார்கள் போலும்… நல்லது செய்வதற்கு காசுபணம்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.
கிளிநொச்சியில்….
மாலையில் மாகாண பண்பாட்டு விழா முடிவுற்ற கையோடு இயல்வாணன் அவர்களும் நானும் அருகில் இருந்த காண்பியக்கூடத்திற்கு சென்றோம். அங்கு புகைப்படங்கள், ஓவியங்கள், தமிழர்களின் வாழ்வியல் பயன்பாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அருகில் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனையும் நடந்து கொண்டிருந்தது. அதில் இரு புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். புறப்படும் போது வாசலில் பார்த்தால் ஆச்சரியமொன்று நின்றுகொண்டிருந்தது.
ஆம்! அந்த ஆச்சரியம் ஒரு முச்சக்கர வண்டி. அதில் நடமாடும் நூலகம் என்று எழுதப்பட்டு அந்த ஆட்டோ அதற்காகவே வடிவமைக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அடடே! என்று ஆச்சரியப்பட்டவாறே எப்படி இப்படி ஐடியா வந்தது? யார் இதைச் செயற்படுத்துகிறார்? என்று அறிய முற்பட்ட போது அருகில் தென்பட்ட நபர், தே.பிரியன்.
அவரிடம் இது தொடர்பாக வினவியபோது தெரிந்து கொண்ட விடயங்கள்:
இந்த ஆட்டோவை நடமாடும் நூலகமாக ஆக்கி வன்னி மாணவர்களுக்கு நூலக சேவையை வழங்க நிதி அனுசரணை செய்துகொண்டிருப்பவர் தற்போது சிங்கப்பூரில் வாழும் கலைவாணி என்ற பெண்மணி.
இந்த நூலகம் வன்னியில் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் தனது சேவையை நடத்துகிறது. தே.பிரியன் என்பவரே இதனை இயக்கி வருகிறார். மாதாந்தம் இருபது வரையான பாடசாலைகளுக்கு இந்நூலகத்தின் சேவை எட்டுகிறது. வன்னிப் பாடசாலைகள் அதிக தூரமுள்ள கிராமங்களில் அமைந்திருப்பதால் மாதாந்தம் ஏறத்தாழ ரூபாய் ஒரு இலட்சம் வரை இயக்குபவர் ஊதியம் மற்றும் எரிபொருருக்கான செலவீனமாக ஏற்படுகிறதாம். அதனை கலைவாணி அவர்களே ஏற்றுக் கொள்கிறார்.
குறித்த பாடசாலைகளுக்கு செல்வதற்கு முன்னரே நாள் நேரம் குறிப்பிட்டு கல்வித் திணைக்கள அனுமதி பெற்று அப் பாடசாலைக்கு செல்கிறது நூலகம்.
நூலகத்தின் வருகையை எதிர்பார்த்திருக்கும் பாடசாலையில், நூலக பாடவேளை அல்லது பாடம் இல்லாத பொழுதுகளில் மாணவர்கள் இந்நூலகத்தில் நூல்களைப்பெற்று மரங்களுக்குக் கீழிருந்தே வாசித்து விட்டு உடனே நூலகத்தில் வைத்துவிடுகிறார்கள்.ஏனெனில் அடுத்த நாள் இந்நூலகம் இன்னோர் பாடசாலைக்குச் செல்ல வேண்டுமல்லவா? அநேகமாக ஆறாம் வகுப்பிற்கு உட்பட்டவர்களுக்கான நூல்களே இதில் உள்ளன.
இப்படியான நூலகங்கள் 1960 ஆண்டுக்கு முன்னரே இங்கிலாந்து அமெரிக்கா சீனா போன்ற நாடுகளில் இருந்துள்ளது. அங்கு பேரூந்தினை நூலகமாக வடிவமைத்து உள்ளிருந்தும்,வாசிக்கலாம் எடுத்தும் செல்லலாம் என அதற்கமைய வடிவமைத்து இருந்தார்கள். அன்று வாசிப்பு என்றால் புத்தகம் என்ற ஒன்று மட்டுமே இருந்தகாலம். அது மிக அவசியமாகப்பட்டது. இலங்கையில்; புத்தகங்கள் இன்றும் பெரும் சொத்தாகவே உள்ளது. எனவே இன்று நூலகம்பற்றிய ஒரு விழிப்புணர்வை இந்த நடமாடும் நூலகம் ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
எனது அவதானிப்பின்படி ‘முச்சக்கர வண்டி நூலகம்’ இதற்கான நூல்களின் தேவைப்பாடு இன்னும் தேவையாக உள்ளது. மாணவர்களுக்கான நூல்களை இதற்கு அன்பளிக்க விரும்புபவர்கள் அல்லது இதனை விஸ்தரிக்கும் நல்லெண்ணம் கொண்டோர் தே.பிரியனின் கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். 094 0766819221
அன்னசத்திரம் ஆயிரம் வைத்தலிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறப்பல்லவா?
494 total views, 6 views today