அப்பவும், இப்பவும் என் பக்கத்து சீட் அவள்!

-மாதவி.

அப்ப எல்லாப் பெண்களும்; அழகுதான்,ஆனால் அவள் எனக்குப் பேரழகி அவ்வளவுதான்.
பாடசாலையில் படிக்கும் காலத்தில்,படிப்போடு,சங்கீதம்,பரதநாட்டியம், இரண்டிலும், அவள் உச்சம்.பாடசாலை நிகழ்ச் சிகள் அனைத்திலும், இருப்பாள்.

காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் போது, ஒலிபெருக்கியில் தேவாரம் அவள்தான், பாடுவாள். திங்கள் முதல் வெள்ளி வரை அவள்தான். அந்த ஒரு சில நாட்களைத்தவிர.

தேவாரம் பாடத் தொடங்கியதும்,யார் நடந்து வந்துகொண்டு இருந்தாலும், அந்த இடத்தில், அதிபராக இருந்தாலும் அவர் அகலாது நிற்கவேண்டும். இது எமது பாடசாலை ஒழுங்கு முறையில் இருந்தது. நான் அவள் பாடி முடிந்த பின்பும் ஒரு நிமிடம் நிற்பேன். ஆண்டவனை நினைத்து அல்ல, அவளை நினைத்து. எனக்கு பாடசாலையின்; ஒழுங்கு முறையில் அது மிகவும் பிடித்து இருந்தது.

பொதுவாகக் கலைஞர்களுக்கு ஒரு வசதி, அவர்களை யார் வேண்டுமானாலும், ரசிக்கலாம், பார்க்கலாம், எவரும் அதனை பிழையாக எடுக்க மாட்டார்கள்.

இல்லை என்றால் ஆண்களின் அறைகளில், கே.ஆர்.விஜயா,காஞ்சனா,லக்ஷ்மி, ஷோபா, சில்க்சிமிதா, என்றும், பெண்களின் அறையில், ரஜினி, கமல், மோகன், மைக்கல் ஜாக்சன் என்றும் எவரும் புகுந்திருக்க முடியாது அல்லவா.

கே.பாலச்சந்தர் அவர்களின் ‘சொல்லத் தான் நினைக்கிறேன்” படம் வந்து, அந்தப்பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவிய காலத்திலும், சொல்லாமல் போன காதல் தங்களதுதான்; என பலர் நினைப்பதுபோல, நானும் தான் நினைக்கின்றேன்.

ஒரே பாடசாலை, ஒரே வகுப்பு, இருந்தும், கதைப்பது குறைவு. அப்போ ஒரு ஆணும், பெண்ணும், அதிகமாகக் கதைத்தால் காதல் மட்டும்தான் காரணம் என்றான ஒரு காலமது.

இப்பொழுது எல்லாம் ஒருவர் எங்கு நிற்கிறார், ஏது செய்கிறார் என்பதைப் பார்க்க அப்ஸ் நிறைய உண்டு. ஆனால் எந்த அப்ஸ்சும் இல்லாத காலத்திலும், அப்போது எனக்கு அவள் எங்கு நிற்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை நானும் அறிவேன்.

அது ஆச்சரியம் தான். ஆனாலும் உண்மை. வேண்டும் என்றால் உங்கள் வாழ்வோடு உரசிப்பாருங்கள், அது உண்மை என்பதை உணர்வீர்கள்.

எனக்கு அவள் மீது ஒரு கோவம். அது ஏன் எல்லா மாணவர்களுடனும் ஒரு சிரிப்பு என்றாலும், உதிர்வாள், என்னைக் கண்டால் எதுவுமே இல்லை. என்னைக் கண்டதும் என்ன உதிர்ந்து போகிறாளா?

நான் தான் அவளைப் பின் தொடர்ந்தேன்.எந்த நிகழ்ச்சியில் எந்தப்பாடலுக்கு அவள் ஆடினாள், என்ன உடை,யாவும்
தெரியும்.

ஏன் அந்தப்பாடலை இப்ப கேட்டாலும், அவள்தான் என் மனதில் ஆடுவாள். இப்படியாக அன்று, நான் தனியாகப் பேசி. தனியாக இரசித்தவன்.

இன்று அறுபது வருடங்களின் பின் விமானத்தில் அவள் என்பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.

எல்லோரும் ஏறிவிட்டார்கள், எனக்கு பக்கத்து சீட் காலியாக இருக்கிறது. அப்பாடி என எண்ணி இருந்த எனக்கு இப்படியாக ஒரு பேசாமடந்தை என்னருகில் வந்து அமர்ந்தது, ஆச்சரியம் என்பதைவிட ஆனந்தமாகவும் இருந்தது.

அவள் பலரைப் பரதக்; கலைஞர்களாக உருவாக்கி வருவதால், எப்ப என்ன செய்கிறாள் என்பதை, முன்னைரை விட இலகுவாக அறியமுடிந்தது. அதானால் அவளைக் கண்டதும் கண்டுகொண்டேன் யார் அவள் என்று. அருகில் அமர்ந்தவள், சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு,கண்ணை மூடிக்கொண்டாள்.

அதனால், நானும் அவளை ஒரு கணம் சுகமாகத் திரும்பிப்பார்த்தேன். அவள் உதடுகள் மெதுவாக அசைந்தன.
அந்த உதட்டு அசைவில், அறுபது வருடங்களுக்கு முன் பாடிய தேவாரம் அது என்பதை இப்பவும் உணரமுடிந்தது.
நான் முன்பு அவள் தேவாரம் பாடும்போது என்ன செய்தேனோ அதே இடத்தில் நிற்பதுபோல் உணர்ந்தேன்.

ஒன்பது மணி நேரப் பயணம், அவள் ஒரு வார்த்தையும் பேசமாட்டாள், என அறிந்து, நானும் கண்ணை மூடினேன்.

கண்ணன்!
அந்தக் காயத்தின் தழும்பு இப்ப இன்னும் பெரிதாக முகத்தில் தெரியுது என்றாள். நான் குரல் வந்த பக்கம்திரும்பினேன்.
அது அவள் தான்.

கிரிக்கெட் விளையாடும் போது பந்து பட்டு முகத்தில் வந்த காயம் அது.
கண்ணன் நீங்கள் இரண்டு வாரம் பாடசாலைக்கு வரவில்லை. பிறகு நீங்கள் பாடசாலைக் கலை விழாவில் மீண்டும் கண்டேன். ஆனால் நீங்கள் வருவீர்கள் என்று அப்போ எனக்கு தெரியும். உங்கள் தங்கையிடம், நீங்கள் எப்படி வருவீர்கள்? என்று கேட்டேன். அண்ணாவுடன் வருவேன் என்றாள். நீங்கள் சுகமா இருக்கிறீங்கள் என்பதை ஒரே கேள்வியில் பதிலாக எடுத்திட்டேன்.

அட அன்று இரத்தம் சொட்டச் சொட்ட வகுப்பறையில் நின்றபோது எட்டியும் பார்காதவளாக இருந்தாள். இப்போ…

ஏய கொஸ்ரஸ். உங்களுக்கு என்ன யூஸ் வேண்டும் என்றாள். நானும் அவளும் ஒரே நேரத்தில் அப்பிள் யூஸ் என்றோம்.

வாழ்வில் இருவரும் ஒன்றாகச் சொன்னது இதுதான், என நான் எண்ணும் போதே அவள் தொடர்ந்தாள்.

விமானத்தில் தந்த கச்சான் கடலை. இது என்ன கடலை, பத்துக்குகூட இல்லை, இது பத்துமா உங்களுக்கு என்றாள்.
கண்ணன் உங்களுக்கு பத்துமா இது. கொஞ்சம் ஊண்டியே, ஒரு பூடகமாகக் கேட்டாள். கண்ணன்! நீங்கள் கடதாசியில் சுருட்டிவைத்த கச்சான் கடலையை அப்போ யாரோ எடுத்துவிட்டார்கள் என்று வகுப்பெல்லாம் தேட, பின் அவை உடைச்சு கச்சானாக அதே சுருளுக்குள் இருக்க,எந்த மந்திரவாதி இப்படிப் பண்ணியது என்ற பக்கத்தில் உங்கள் நண்பனைக் கேட்க,எனக்கு எப்படி தெரியும் என்று அவன் கத்த, நீங்கள் முழிக்க….

இப்பவும் நான் அதே முழியோடு இருக்க, அவள் சொன்னாள். கச்சானை எடுத்து உடைத்து வைத்த, அந்த மந்திரவாதி அது தான்; என்றாள்.

ஒரு கணம் என்னை வடிவாகப் பார்த்தாள், அட உங்கள் சேட்டுக்கு பொக்கற் இல்லை.இருந்தால் பேனா மை எப்பவும் முன்பு இருக்குமே!என்றாள். நான் இன்னும் மாதவியுடன் ஒரு வார்த்தை பேசவில்லை. முடியவும் இல்லை. அவள் விடாது பேசிக்கொண்டு இருக்கிறாள்.

கண்ணன் ஒரு முறை ரவுணுக்கை உங்கள் பாட்டாச் செருப்பு அறுந்துபோக, ஒரு பாட்டி வந்து செருப்புக்கு குத்த ஊசிதந்ததே! அந்த ஊசியை என் உள்பாவாடையில் இருந்து கழட்டிக்கொடுத்ததே நான் தான் என்றாள்.

மாதவி! இப்படி என் அசைவுகள் ஒவ்வொன்றும் உனக்கு தெரிந்து இருக்கு, என்மீதான உன் ஆசையை நான் தெரிந்து இருக்க வில்லை, என்று சொல்ல வாய் திறக்க,அதற்கும் அவள் விடவேயில்லை,.. தொடர்ந்தாள்.

கண்ணன் உங்களுக்குத்தான் கணக்கு நல்லா வருமே, ஏன் அண்டைக்கு (அண்டைக்கு என்றால் அறுபது வருடங்களுக்கு முன்.) அந்த கணக்கு வாத்தியார் கேட்க தெரியாது மாதிரி நின்ற நீங்கள். எனக்கு தெரியும் அடுத்தது என்னைக் கேட்டால் நான் சொல்லட்டுமே என்றுதானே.

ஆனால் எனக்கும் விடை தெரியும் நீங்கள் சொல்லவில்லை, என்று, நானும் சொல்லவில்லை. வாத்தியார் எங்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று பொருஞ்சு தள்ளினார்.

கண்ணன்! என்னடா கண்ணன்!! கண்ணன்!!! என்று தினமும் பேசும் ஒருவருடன் போல் பேசுகிறேன் என்று நினைக்கிறீங்களா? என்னுடைய மகனை நான் கண்ணன் என்றுதான் கூப்பிடுவேன் என்றாள்.

நான் என் மகளை மாதவி என்று அழைப்பதை அவளுக்கு சொல்ல விருப்பமில்லை. ஏன் என்றால், கண்ணன் என்று அவள் கூப்பிடுவது என் நினைவாக இருக்காது, ஏன் என்றால் அது எல்லா அம்மாக்களும், பிளைகளை, குஞ்சு, குட்டி, என்பதுபோல் கண்ணன் என்று அழைப்பதும்; புதுசு இல்லை.

நான் மாதவி என்றது பிறருக்குக் கோவலன் மாதவி என்றாகத் தெரிந்தாலும், எனக்கு பக்கத்தில் இருப்பவர்தான் அந்த மாதவி.

கதைப்பாளோ கதைப்பாளோ என எண்ணிய மாதவி,இப்போ கதைத்துக்கொண்டே இருக்கிறாள்.

அந்தக்காலத்து பெண்கள் எல்லாம் ஒரு வயதுக்குப்பின், ஆண் பெண் என்ற உணர்வு நீங்கி, மனிதர்கள் நாம் என்ற உணர்வோடு எல்லோருடனும் கதைப்பார்களோ.

ஆனால் ஒன்று! வார்த்தை தடுமாறித்தன்னும் ஒரு வார்த்தை உங்களை விரும்பினேன் என்று நேரடியாக அவள் கூறவேயில்லை. அது பெண்களுக்கே உரிய பண்புதான்.

உங்களுக்கு கச்சான் பிடிக்கும்தானே. தான் கொண்டு வந்த கச்சான் கடலை பைக்கற்றை உடைத்து எனக்கு நீட்டுகிறாள்.

அன்றும் அவள் பக்கத்து சீட்தான். இப்பவும் அவள் பக்கத்து சீட்தான்.
அப்போதும் எட்டி நீட்டுற தூரம்தான். இப்பவும் அப்படித்தான். பெற்றுக்கொண்டேன்.

சாமி தந்த இந்த வரத்தை, அப்ப தரவில்லையே என எண்ணமுடியவில்லை. காரணம், எம்மைப் பிரித்தாலும் இருவருக்கும் அழகிய வாழ்வைத் தந்ததுதான்.

பின்.குறிப்பு : அன்று பாடசாலையில் அதிகம்பாடிய தேவாரமும், இன்று விமானத்தில் என்னைக் கண்டதும் முதல் இதழுக்குள் உச்சரித்த தேவாரமும் இதுதான். திருஞானசம்பந்தரின் ‘காத லாகிக் கசிந்து கண் ணீர்மல்கி….’

619 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *