“ நிற்கக்கூட நேரமில்லை நேரம் பறக்கிறது “

-பிரியா.இராமநாதன் இலங்கை.

நாமெல்லாம் தற்போது அடிக்கடி சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை .பதினைந்து இருபது வருடங்களுக்கு முன்புவரை ஒரு வருடம் என்பது மிக நீண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாகவே உணர்ந்திருப்போம் நாம். கலண்டர்கள் அழுக்கடைந்து, கிழிந்த நிலையில் நாட்களின் நகர்வுகளைக் காட்டிக்கொண்டிருந்த காலம் மறைந்து போய், சுவற்றில் மாட்டிய கலண்டர்கள் புத்தம் புதிதாகவே இருக்க ஆண்டுகள் மட்டும் ரொக்கெர்ட் வேகத்தில் பறந்துகொண்டிருக்கின்றது என்றால் மிகையில்லை .

காலையில் எழுந்தது முதல் இரவு நித்திரைக்குச் செல்லம்வரையிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றோம்,ஆனாலும் செய்துமுடிக்கவேண்டிய வேலைகள் ஏராளமாக எஞ்சியிருக்கின்றதே என நம்மில் அநேகர் புலம்பிக்கொண் டேயிருப்போம் இல்லையா? உண்மையில், நேரத்தை திட்டமிட்டு சரியாக பயன்படுத்துபவர்களால் மட்டுமே இனி எதிலும் வெற்றிபெற முடியும். அதை பயன்படுத்த தெரியாதவர்கள் ‘நேரம்’ இல்லையே என்று கூறி, தங்களையே வதைத்துக் கொள்ளவேண்டியதுதான். “ நேரமின்மை “ என்பது வாழ்க்கையில் வரும்பட்சத்தில், ஒரு நாளைக்கு ஐம்பது மணி நேரம் கொடுத்தாலும் போதாது என்றுதான் வார்த்தை வரும். இருக்கின்ற நேரத்தை நல்ல முறையில் திட்டமிட்டு, தேவைக்கேற்றபடி,நேரம் நம்மை நிர்வகிக்க முடியாமல், நேரத்தை நாம் நிர்வகித்தால் மட்டுமே தப்பிக்கொள்ளவியலும்.

தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து வசதிகள், பொருளாதார மேம்பாடு என எல்லாவற்றிலும் முன்னிலை யடைந்திருக்கும் சூழ்நிலையில் (எல்லாம் இருந்த இடத்திலேயே கிடைக்கும்போது) நமக்கான வேலை எல்லாம் விரைவாக முடிக்கும் சூழ்நிலை இருந்தும், குடும்பப் பெண்களோ அல்லது வெளிவேலைகளில் ஈடுபட்டிருக்கும் ஆண் பெண் இருப்பாளரிடமோ,இளைஞர்களிடமோ ‘நேரம்’ என்பது போதாது என்ற மனநிலைதான் இருக்கின்றது. நேரத்தை விடவும் தங்களுடைய வேலைப்பழு அதிகமாக காணப்படுவதனால் நேரம் போதாமல் போய்யுள்ளது என பலர் கருதுகின்றனர். இந்த நேரமின்மையின் வெளிப்பாடுதான் எல்லா வேலைகளிலும் அவசரம், பதற்றம், கவனமின்மை, ஞாபகமறதி, தூக்கமின்மை, மனவழுத்தம் போன்றவை. இந்த நிலை தொடரும்போது வாழ்க்கையின் ஒன்றாகவே அது மாறி விடுகின்றது என்பதுதான் பரிதாபம். “எனக்கு நிற்க நேரமில்லை” என கூறுகிறவர்கள் உண்மையில் நேரத்தைச் சரியாகப் பங்கீடு செய்யத் தெரியாதவர்களே. நேரத்தை எல்லோருமே ஏதோ ஒரு வகையில் செலவழித்து விடுகிறார்கள். ஆனால் செலவழித்த அனைவருமே வெற்றி வாகை சூடுவதில்லை. அதிக வேலையிருக்கிறவர்கள் நேரத்தை வீணாகக் கழிக்க மாட்டார்கள். நேரத்தை எந்த அளவுக்கு சிக்கனமாக, முழுமையாக, முறையாக பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது.

நம்முடைய வாழ்வில் நமக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷங்களுள் மிகவும்ன் முக்கியமானதொன்றே நேரம். அந்த வகையில் நேரம் பொன்னானது என்ற பொன்மொழி நேரத்தை வீணடிப்பது வாழ்க்கையை வீணடிப்பதற்கு சமம் என்பதனையே எடுத்துச் சொல்கின்றது.நேரத்தின் பெறுமதியை யாராலும் குறிப்பிட்டு சொல்லிவிடவியலாது. அதாவது முன்னைய காலங்களில் நேரம் பொன்னானது என்று பாவித்தாலும் கூட தற்போதெல்லாம் நேரம் பொன்னை விட மேலானது என்றே கருதவேண்டியுள்ளது.

நேரத்தினை யாராலும் கட்டுப்படுத்தி நிறுத்த முடியாது அது ஓடிக்கொண்டேதான் இருக்கும். ஒரு நாளின் நேரம் அன்றைய நாளுடனேயே முற்றுப்பெறுகின்றது. அடுத்த நாள் புதிய நேரமே எமக்கு கிடைக்கின்றது.

எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தாத அனைத்து நேரமும் வீணாகவே முடிவடைந்துவிடுகின்றது . அவை அடுத்த நாள் எமக்கு கிடைப்பதில்லை. அதனால்தான் நேரம் பெறுமதியானது அதனை வீணடிப்பதை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அதிலும் எதற்கெடுத்தாலும் நாளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிடுவது நமக்கு நமே குழி தோண்டிக்கொள்வதைப் போன்றதே . சிலர் எதற்கெடுத்தாலும் நேரமும் காலமும் கைகூடி வரவேண்டும் என காத்துக்கொண்டிருப்பார்கள்.ஆனால் நேரம் யாருக்காகவும் காத்துக்கொண்டிராது செவ்வனே ஓடிக்கொண்டேதானிருக்கும் . நாம்தான் அந்த நேரத்தினை திறமையாக கையாளத் தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு நாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக்கொண்டு கடகடவென செய்துமுடிப்பது,அதிலும் அவசரமாக செய்துமுடிக்க வேண்டிய விடயங்களை எதற்காகவும் ஒத்திப்போடாது உடனடியாக செய்துமுடிப்பது என நேரத்தை முகாமைப்படுத்திக்கொள்ளும்போது,நேரம் இல்லையே என எதற்கெடுத்தாலும் அலட்டிகொள்ளத் தேவையிராது.
செய்துமுடிக்கவேண்டிய வேலைகளை எய்துமுடிக்காமல் அதனால் ஏற்படும் தேவையற்ற டென்ஷன்களை எதிர்கொள்ளவேண்டியதுமில்லை.

உண்மையில் நேரமில்லை என்று கூறவும் நமக்கு ஒரு தகுதி வேண்டும் ஆனால், அதற்கான தகுதி நம்மில் பெரும்பானவர்களுக்கு இல்லை என்பதே நிதர்சனம். நேரத்தைச் சரியாகத் திட்டமிட்டு, எவ்வளவு நேரம் மீதி உள்ளது என்று கணக்குப்போட்டு பார்த்தால், கிறுகிறுத்து போய்விடும் நமக்கு. ‘என்னடா இது! இவ்வளவு வெட்டியாகவா இவ்வளவு நாளை வீணடித்து இருக்கிறோம்!‘ என்று அதிர்ச்சியாக இருக்கும்.நேரத்தைத் திட்டமிடாததால், காலம் மட்டும் வீணாவதில்லை அதனோடு பல்வேறு மற்ற தேவையற்ற பிரச்சினைகளும் சர்ந்தே வரும். உதாரணத்திற்கு ஏதேனும் பயணம் செல்லுபவர்களாகவோ, அலுவலகம் செல்லுபவர்களாகவோ ஏன் பாடசாலை செல்லுபவர்களாகவோ இருந்தாலும், முந்தைய இரவே அடுத்த நாள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை எடுத்து வைத்து விட்டால், காலையில் அவசர அவசரமாகத் தேடிக்கொண்டு இருக்க வேண்டிய தேவையிராது. ஆனால், இப்படியா நடக்கிறது?

எல்லாவற்றிலும் தாமதம், அதனால் அவசரம், அதனால் சண்டை, அதனால் மனவருத்தம். இதைச் சரி செய்யச் சிறு திட்டமிடல், முன்னேற்பாடு போதுமானதுதான்.ஆனால், இதைச் செய்ய முயற்சிக்காமல் தினமும் ஒவ்வொரு நாளையும் நிம்மதியற்று பலர் கடந்துகொண்டிருக்கின்றோம்.
சிறு திட்டமிடல் நமக்கு மகிழ்ச்சியைத் தரும், கோபத்தைப் பதட்டத்தைத் தவிர்க்கும் என்பது எத்தனை முறை பிரச்னையானாலும் நம்மில் பலருக்கு புரிவதில்லை.

ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியும் வெற்றியும் அவன் நேரத்தையும் காலத்தையும் கையாளும் விதத்தைப் பொருத்த்தே அமைந்துள்ளது.”நேரம் என்பது நேர்கோட்டில் இயங்குகின்றது அது ஒரு போதும் ஆரம்பப் புள்ளியை சந்திக்காது!

663 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *