புறம் பேசுபவர்களைப் புறந்தள்ளுங்கள்!
-பொலிகையூர் ரேகா-இங்கிலாந்து.
இன்றைய இயந்திர உலகில் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நேரம் இருக்கின்றதோ இல்லையோ பிறரைப் பற்றிய விமர்சனங்களுக்கு ஏதோ ஒரு வழியில் நேரம் ஒதுக்கிக்கொண்டிருக்கும் விந்தை மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். மகிழ்ச்சியாகக் கூடும் விழாக்களிலிருந்து துக்கம் சார்ந்த நிகழ்வுகள் வரை இவர்களது புறம்பேசும் குணம் வேலை செய்து கொண்டேயிருக்கும். தமது செயல் மற்றவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பது பற்றியோ அவர்கள் பேசுபொருளின் உண்மைத்தன்மை பற்றியோ அவர்களுக்குக் கவலையில்லை.
விமர்சனங்கள் நேர்மையாக இருப்பின் அதை ஏற்றுக்கொள்வதிலும் சரியாக மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை. இன்று வைக்கப்படும் பெரும்பாலான விமர்சனங்கள் அனைத்துமே காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.
இவ்வாறு குறை பேசுபவர்கள் தனிமனிதனின் வெற்றி குறித்தோ,திறமை குறித்தோ அவர்கள் வாழ்க்கை குறித்தோ எண்ணுவதில்லை. அவர்களுக்கு வேண்டுவதெல்லாம் முதுகின் பின்னால் பேசுவதற்குச் சில கதைகளும் அவர்கள் சொல்லுவதை நம்புவதற்குப் பல மனிதர்களும்தான். இக்கூட்டத்தின் செயல்களால் மனமுடைந்த பலர் தங்கள் இயல்பு வாழ்வை வாழமுடியாமல் தவித்துப் போய்விடுகின்றனர். எது சரி, எது பிழை என்பதைத் தாண்டிக் காழ்ப்புணர்ச்சியோடு வெளிப்படுத்தப்படும் விமர்சனங்கள் பலரது வாழ்வைச் சிதைத்துவிடுகின்றது.
இப் புறம் பேசுபவர்களின் உலகம் உண்மையைக் காட்டிலும் கற்பனா சக்திக்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக் கின்றது. இத்தகையவர்களின் கதைகளுக்குச் செவி சாய்த்து வேதனைப்படத் தொடங்கினால் நம் வாழ்க்கை நிம்மதியற்றதாகிவிடும். இவர்களை நாம் எவ்வாறு எதிர்கொள்கின்றோம் என்பதில்தான் எம் வெற்றி தங்கியுள்ளது.
“இந்த விமர்சனங்கள் என்னை எதுவும் செய்யப் போவதில்லை. நான் இந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்” என்ற எண்ணமே உங்களை வாழ்வின் சரியான திசையை நோக்கிப் பயணிக்க வைக்கும். தவறு செய்யாத மனிதர்கள் என யாருமே இந்த உலகில் இல்லை. ஆனால் உங்கள் தவறுகளை மட்டும் பூதாகரமாக்கி விமர்சிப்பதற்காய் காத்திருப்பார்கள். தங்கள் பிழைகளை மறைக்கப் பிறர் பிழைகளைப் பெரிதுபடுத்த வேண்டிய கட்டாயம் பலருக்கு உள்ளது. தங்களை நல்லவராகக் காட்டிக்கொள்ளப் பிறரைத் தவறாகச் சித்தரிப்பது உலக வழக்கமல்லவா.
உங்கள் மீது தவறிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள், தவறில்லாத சந்தர்ப்பங்களில் வரும் விமர்சனத்தைக் கண்டுகொள்ளாதீர்கள். தனது முதுகின் அழுக்கை மறந்து உங்கள் முகத்தில் அழுக்கைத் தேடுபவர்களின் எந்தக் குற்றச்சாட்டும் உங்களைத் தாழ்த்திவிட அனுமதிக்காதீர்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும் குறை சொல்பவர்களை எண்ணிக் கவலை கொள்ளாதீர்கள். அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று கடந்து செல்லப் பழகுங்கள். விமர்சிப்பதை விடவும் அதைக் கடந்து செல்வதற்குத்தான் அதிக பக்குவம் வேண்டும். நாம் செய்கின்ற அனைத்துச் செயல்களுக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கும். ஒவ்வொரு தனி நபரின் பார்வையும் வேறுபட்டது. அனைவருமே நம்மைப்போன்று சிந்திக்கமாட்டார்கள். எனவே அவர்கள் நம்மைப் புரிந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. உலகம் அதன்பாட்டில் இயங்குவது போல நீங்கள் உங்கள் செயல்களைச் சரியான வழியில் செய்யுங்கள். உங்கள் மீதான விமர்சனங்களை நேர்மறை எண்ணத்துடன் அணுகுங்கள்.
உங்கள் குறை நிறைகள் பெரிதுபடுத்தப்பட்டு விமர்சிக்கப்படுகின்றதென்றால் நீங்கள் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகப் பொருள் கொள்ளுங்கள். உங்கள் செயல் வேகத்தை அதிகரியுங்கள். வெற்றி நோக்கிய உங்கள் பயணத்தில் எந்த விமர்சனங்களும் உங்களை வீழ்த்த அனுமதிக்காதீர்கள். விமர்சனங்களை உரமாக்கி வெற்றிக்கு வளம் சேருங்கள். நாம் எப்படி இருந்தாலும் இந்த உலகம் நம்மைப்பற்றி விமர்சிக்கும் என்பதே உண்மை. தரமான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். இழிவுபடுத்தும் நோக்கிலான விமர்சனங்களைப் புன்னகையோடு புறந்தள்ளுங்கள்.
உங்களை விமர்சிப்பவர்களுக்கு உங்கள் வெற்றிகளே பதிலாக அமையட்டும்.
எங்களுக்கு உதவி எல்லாம் வேண்டாம்!
வினோதினி தருநாவுக்கரசு. இலங்கை.
ஏற்றமும் இறக்கமும் நிறைந்த இந்த வாழ்வின் மடிப்புகளில் போராடி வாழத்தெரிந்த மனிதர்களின் கதைகள் கனதியானவை. அவ்வாறானதொரு பெண்மணியை இரணைமடுவில் சந்தித்தேன், மழைக்கு ஒழுகுகிற தறப்பாள் கொட்டகையின் கீழிருந்து கச்சானும் மாங்காயும் விற்றுக்கொண்டிருந்தார். அருகில் ஊன்றுதடிகள் இரண்டு சாத்தி வைக்கப்பட்டிருந்தன, தொண்ணூறுகளில் இந்திய இராணுவ நடவடிக்கையின்போது கால்களில் ஒன்றை தொடையோடு இழந்தாலும் நம்பிகையை பற்றிப்பிடித்துக்கொண்டு வாழ்தலுக்காக போராடி வருபவர், தனது மகளின் கணவர் மதுபோதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைக்க இந்தத் தாயோ மகளையும் மகளின் மகவுகளையும் இச் சிறுவியாபாரத்தின் மூலமாக சுமந்துகொண்டிருக்கிறார்.
“எங்கட உரிமையள எண்டைக்கு விட்டுக்குடுத்தமோ அண்டையில இருந்து குடி, போதை எண்டு அழியுது சமூகம்,
எங்களுக்கு உதவி எல்லாம் வேண்டாம், நாங்கள் உழைச்சு சாப்பிடுவம், இந்த போதைய ஒழிச்சுக் கட்டுறதுக்கு ஏதாவது செய்தாலே புண்ணியமாப் போகும்”. பொழிந்துகொண்டிருந்த மார்கழி மழையின் ஓசையையும் மீறி திடமாக வெளிவந்தன அவருடைய சொற்கள்.
405 total views, 3 views today