பாதி நிறைந்த என் கண்ணாடிக் குவளை.
(My glass is half full.)
பூங்கோதை .இங்கிலாந்து
என்னது, எப்பவும் அரைவாசித் தண்ணியோ? நீங்கள் கேட்பது புரிகிறது. பயப்பட வேண்டாம், நான் கூற வரும் விடயம் வேறு.
நான் இங்கு பிரித்தானியாவில் அரச பாடசாலைகளில் தொடர்ச்சியாகப் பல வருடங்களாக வகுப்பாசிரியையாக பணி புரிந்து வந்ததில், பணி சார்ந்த பல நன்மைகள் வளர்ந்திருந்தாலும், என் தனிப்பட்ட முன்னேற்றங்களில் ஒன்றாக விளங்குவது என் திடமான நேர்மறைச் சிந்தனையைப் பெற்றுக் கொண்டது தான். தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், பணி சார்ந்த காலத்திலும் என பல்வேறு சவால்கள், சஞ்சலங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்ட போது என்னைக் காப்பாற்றி, நெறிப்படுத்தியது இந்நேர்மரைச் சிந்தனை தான்.
நேர்மறைச் சிந்தனை என்றால் என்ன என்று பார்த்தோமேயானால் அது மிக இலகுவாகக் கையாளக்கூடிய சிந்தனை முறைமை தான். “ஆல படயளள ளை hயடக கரடட.” என ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது, உங்கள் கண்ணாடிக் குவளை (படயளள) ஒன்றில் பாதி நீர் மட்டுமே இருக்கும் போது, உங்கள் சிந்தனையை இரு விதமாகப் பார்க்கலாம். ஒன்றில் நீங்கள் உங்களிடம் பாதிக்குவளை நீர் இருக்கிறதே என மகிழ்ச்சி அடையலாம், அல்லது என் குவளையில் பாதி ஒன்றுமில்லாமல் இருக்கிறதே என அழுது வடிக்கலாம். நாம் அழுவதால் எதுவும் நன்மை கிடைத்து விடப்போவதில்லை. சில வேளைகளில் அழுவது என்பது ஒரு வகை உணர்வின் வெளிப்பாடென்பதால் அழுவது ஒன்றும் தவறான விடயம் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ளுவோம். பல சமயங்களில் அழுவது மனதின் இறுக்கத்தைக் குறைக்க வல்லதாய் இருக்கிறது.
இருந்தாலும், ஒரு விஷயம் தவறாகிவிட்டால், அல்லது நாம் எதிர் பார்த்தது கிடைக்காது விட்டால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நாம் சிந்திக்கத் தேவையில்லை. சரி,இனி அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட வேண்டியது தான் என எண்ணவும் அவசியமில்லை.
இப்படிச் சிந்திக்கச் சிரமமாக இருந்தாலும் கூட வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு, சூழ்நிலைகள் சிறந்ததாக இல்லாதபோதும் இந் நேர்மறைச் சிந்தனை என்பது எம்மை வழி நடத்தும். உதாரணமாக, ‘எனக்கு வேலை கிடைக்காததால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்’ என்பதை விட ‘எனக்கு வேலை கிடைக்கவில்லை, ஆனால் இப்போது நேர்காணலில் இருந்து என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று மாற்றி யோசிக்கலாம் அல்லவா? அது தானே உண்மையும்?
நேர்மறை சிந்தனை என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
நேர்மறை சிந்தனை என்பது ஒரு வித சிந்தனை அணுகுமுறையாகும், இதன் மூலம் நாம் சிறந்த சாதகமான முடிவுகளை எதிர்பார்க்க முடிகிறது.அதற்காக நாம் எமது தலையை மணலில் புதைத்து எமது பிரச்சினைகளைப் புறக்கணிக்கிறோம் என்று அர்த்தமல்ல. இது விரும்பத்தகாத சூழ்நிலைகளைச் செயல் திறன் மிக்க வழியில் அணுகுவதைக் குறிக்கிறது.
இதன் மூலம் பல நன்மைகள் விளைகின்றன என்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது என்பதை விட நானும் இதைக் கண்கூடாக அனுபவித்திருக்கிறேன் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. நேர்மறையாக சிந்திப்பதும், நம்பிக்கையுடன் இருப்பதும் பல ஆரோக்கியம் சார்ந்த நன்மைகளை விளைவிக்கிறது. நோய் உள்ளவர்களுக்கு, நம்பிக்கையுடன் இருப்பது என்பது விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுகிறது. மன உளைச்சல் மற்றும் சோர்வைக் குறைக்கிறது. நேர்மறை சிந்தனையைத் தந்து உங்கள் நோய எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நேர்மறையான சிந்தனையை எப்படி நடைமுறைப்படுத்துவது எனப் பார்க்கலாம். நீங்கள் விரும்புவதை நீங்கள் அறிந்து கொள்வதும் அது குறித்து ஒவ்வொரு நாளும் எழுதுவதும் பயனளிக்கின்றது. தியானம் போலவே வேடிக்கை நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்குவது, பாடுவது,ஆடுவது, நடப்பது, நீந்துவது, சமைப்பது என்று அது எதுவாக இருப்பினும், அது குறித்து ஒவ்வொரு நாளும் எழுதுங்கள்.
உதாரணமாக, நான் மாலையில் அல்லது இரவில் தூங்கப் போவதற்கு முன்னால் இவற்றை எழுதுவது வழக்கம். “இன்று நான் நீந்தப் போய் வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” அல்லது ” நான் இன்று என் குடும்பத்தவருடன் பூங்காவில் நடைப் பயிற்சி செய்ததில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.” என்பது போன்றவை மனத்தை மகிழ்விக்கும். அதே போல உங்கள் வார்த்தைகளும் மற்றவர்களை இயன்றவரை மகிழ்விப்பதாகவே இருக்கட்டும்.
வாழ்க்கையில் உங்கள் சாதனைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் கொண்டாடுங்கள். ஒவ்வொரு சூழ்நிலையிலும் முயன்றவரை நல்லதைப் பாருங்கள். நாம் எவ்வளவு தூரம் நேர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கிறோமோ அவ்வளவு தூரம் எமக்கான பாதைகளும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும். நேர்மறைச் சிந்தனை கொண்ட உங்கள் நட்புகள் உங்களை வந்தடைவார்கள். நல்ல முயற்சிகள் நற்சிந்தனை கொண்டவர்களின் உதவியுடன் விரைவில் நடந்தேறும்.
நேர்மறைச் சிந்தனைகள் குறித்து பல சுவையான நூல்கள் அண்மைக்காலத்திலும் வந்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பதிவு செய்துள்ளேன். முடிந்தால் இணையத்தில் வாசித்துப் பயன்பெறுங்கள்.
Brow, R.E ( 2023 ) The Art of Positive Thinking: Eliminate Negative Thinking I Emotional Intelligence I Stop Overthinking: A Self Help Book to Developing Mindfulness and Overcoming Negative Thoughts.
Peale, V.N ( 2023 ) Words of Wisdom: A Daily Book of Inspirational Quotations: 365 The Power Of Positive Thinking
Steve, M. (2023 ) Powerful Quotes to Inspire> Motivate and Help You Find Joy and Fulfillment in Life.
614 total views, 6 views today