எத்தனைகோடி இன்பம் வைத்தாய்
கலாசூரி திவ்யா சுஜேன் – இலங்கை
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ?
காதல் சுகத்தின் சுவை ஊறக் கவி சமைத்தவர் பாரதி. இவ்வாழ்வின் உயிராக, இவ்வையகத்தின் தலைமை இன்பமாக , மனிதத்தின் அடிப்படையாக , உணர்வுகளுக்கெல்லாம் மகுடமாக , வண்ணக்கனவுகளின் விலாசமாக , நினைக்கும் போதெல்லாம் தேனூறும் திரவியமாக , எதிர்மறை செயல்களையெல்லாம் அழிக்கவல்ல மாமருந்தாக , மண்ணுலகில் அமரசுகம் தரும் அமிழ்தமாக காதலைக் காட்டித் தந்தவர் பாரதி.
இப்படித்தான் ஒரு வசீகரப் பொழுதில் பெட்டைக் குயிலொடு காதல் கொள்கிறார். இந்தக் காதல், பாட்டினால் மலர்கிறது. பாட்டினில் அன்பு செய் என்று இசைமீது அதீத நாட்டம் கொண்ட பாரதி, குயில் பாடிய கருத்தாழம் மிக்க பாட்டினைக் கேட்டதும் செய்வதறியாது தன்னை இழந்து நிக்கிறார்.
இன்னிசைப் பாடடினிலே யானும் பரவசமாய்,
“மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?
நானும் மனித உடல் மாறி இந்த குயில் போல வடிவமெடுத்து , இந்தப் பெண்குயிலோடு கூடிக் களியுற்று என்றும் பிரியாமல் வாழும் வழி இல்லையா ? இந்தக் குயிலின் இசை அக்கினியில் என் ஆவியை அர்ப்பணம் செய்ய மாட்டேனா ? என்று ஏங்குகிறார்.
என் நெஞ்சத்தை தைக்கும் வகையில் ஊடுருவிப் பார்க்கும் ஆடவரே, என் கண்வழி மனஓட்டத்தை இன்னுமா அறியவில்லை ?. காதலை வேண்டிக் கரைகிறேன் இல்லையேல் சாதலை வேண்டித் தவிக்கிறேன் என்று அந்தச் சின்னக்குயிலும் துணிந்து தன் காதலை வெளிப்படுத்துகிறது.
இதனைக் கேட்ட பாரதிக்கு ஒருவித சுகமான புதுமையான ஆசைக் காச்சல் பீடித்துக் கொள்கிறது. மன வீணையில் அந்தக் குயில் பாடிய பாடல் எதிரொலித்துக் கொண்டிருக்க காதல் போதையேறிக் கிடக்கிறார்.
ஆனால் அவ்விடத்தே ஏனைய பறவைகள் வந்துவிடுகின்றன. சோதித்த திருவிழியீர் இன்று போய் நான்கு நாட்கள் சென்று மீண்டும் வருக , இந்த நான்கு தினங்களையும் பத்து யுகங்களைப் போல சிரமப்பட்டு கழிப்பேன் என்று நீண்ட பெருமூச்சு மேலெழ அந்தச் சின்னக் குயில் உத்தரவிடுகிறது.
உள்ளும் புறமும் அந்தக் குயிலின் நினைவு சூழ்ந்து கொள்ள, ( பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா ) மன்மதனுடைய கணைகள் பாய்ந்திருந்த இதயம் ஒரு நாள் கழிவதற்கு கூட பட்ட பாட்டினை யாரும் பட்டு இருக்க மாட்டார்கள். நெசவு தறி கூட பெற்றிருக்காது. தாள வாத்தியம் கூட பட்டிருக்காது என்று பிரிவால் வாடும் காதலன் பாரதி புலம்புகிறார்.
இவ்வாறாக பாரதியின் குயில் பாட்டுக் கதை தொடர்கிறது. அந்த தொடர்ச்சியில் இருக்கும் கவிநயமும், காதல் சுவையும், வேதாந்தமும், தத்துவமும், வாழ்வியலும் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பெரு வியப்பாகவே இருக்கும். புது புது அர்த்தங்களை கட்டவிழ்க்கும்.
ஈற்றில் பல கதை கொட்டித் தீர்த்து காதலருள்புரிவீர். காதலில்லை யென்றிடிலோ சாதலருளித் தமதுகையால் கொன்றிடுவீர்!” என பாரதியின் கையில் வீழ்கிறது அந்த மோகனக் குயில்.
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
மூண்டு வரும் இன்ப வெறி கொண்டு மிக்க அன்புடன் தன் கையில் வீழ்ந்திருந்த சின்ன குயிலை முத்தமிட்டார்.
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான்
கண்ணெடுக்கா தென்னைக் கணப்பொழுது நோக்கினாள்;
ஆஹா என்ன ஆச்சரியம்! முத்தத்தினை வாங்கிக்கொண்ட கணத்திலேயே சின்ன குயில் பெண் உரு கொண்டு காட்சி தந்தது. பெண்ணின் அழகை பாரதி வர்ணிக்கும் ஒவ்வொரு சொல்லும் எத்தனை கோடி இன்பம் .??
சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம்
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினையான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை
நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை,
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவனின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.
அவள் விழி கவிதையையும், நிலவெழில் இதழையும் , தேன் மேனியாள் திருவழகையும் சொல்லமுடியாது தவித்து , கற்றவர்க்கு மட்டும் சொல்ல முயன்று , தோற்று , பெருங்களி கொண்டு , விரும்பித் தழுவி, ஒப்பில்லா சுவை ததும்பும் இதழை முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெரு மயக்கத்தில் சித்தம் மயங்கி நின்ற உச்ச உணர்வை எட்டுகிற பொழுது கண்டது கனவென கண்விழித்தாலும்,
குயில் பாட்டினூடாக பாரதி சொல்ல வந்த வேதாந்தத்தை அறிந்துணர இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் குயில்கள் கானம் இசைக்க வேண்டுமோ மனமெனும் பெருங்காட்டில் ??
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?
664 total views, 2 views today