காதலிக்க நேரமில்லை
- சேவியர் தமிழ்நாடு
புளூ டிக் வந்தபின்னும் பதில் வரவில்லையேல்
காதலை முறித்துக் கொண்டு விடுகிறார்கள்.
“டைம் இல்ல.. எதுன்னாலும் சட்டுன்னு சொல்லி முடி ! “ என உலகம் இப்போது பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒன்றரை வினாடியில் ஜி-பே நீல டிக் காட்டவில்லையென்றால் கடுப்பாகிப் போகிறது உலகம். அரை மணி நேர உணவு டெலிவரி எல்லாம் ஆமை வேகமாய்த் தோன்றுகிறது, எட்டு நிமிட ஸெப்டோ டெலிவரிகளைத் தேடி உலகம் ஓடுகிறது. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ போரடிக்க, ஒரு நிமிட ஷார்ட்ஸ்களை நோக்கி மனம் பாய்கிறது.
ஒரு பக்கக் கதைகள் கூட நீளமாய்த் தோன்ற, நான்கு வரிக் கதைகளே இப்போது கோலோச்சுகின்றன. எல்லாம் உடனடி நடக்க வேண்டும். காத்திருப்பது டைம் வேஸ்ட் என நினைக்கிறது இன்றைய உலகம். இந்தக் காலகட்டத்தில் காதல் மட்டும் என்ன பாட்டுப் பாடி மரத்துக்குப் பின்னாலா ஒளிந்திருக்கும் ? அதுவும் தனது கவச குண்டலங்களையெல்லாம் கழற்றி வைத்துவிட்டு டிஜிடல் இழைகளுக்குள் விழுந்து கிடக்கிறது.
அந்தக் காலத்துல…. என இழுத்தாலே இந்த தலைமுறை கதவை இழுத்துச் சாத்திக் கொள்கிறது. உங்களோட பழைய பஞ்சாங்கங்களையெல்லாம் கேட்க நேரமில்லப்பா என இன்ஸ்டா ஸ்டோரிக்குள் நுழைந்து விடுகிறது. ஆனால் திரும்பிப் பார்ப்பதின் சுகம் அலாதியானது அல்லவா ?
பள்ளிக்கூட வழி நெடுகிலும் கள்ளி முள்ளில் பெயரெழுதி காதலின் கல்வெட்டாய் அதைப் பாவித்து நடந்த காலங்கள் அழகியலின் உச்சம் அல்லவா ? எழுதி வைத்த காதல் கடிதத்தை ஆயிரம் முறை வெளியே எடுத்தும் காதலியிடம் கொடுக்காமலேயே விடைபெற்ற காதல்கள் நாம் அறியாததா ? ஒற்றைப் புன்னகை போதுமென அந்த அழகின் வெப்பத்தில் ஆயிரம் நாட்களைக் கடத்திவிட்ட காலம் வியப்பல்லவா ?
இன்லெண்ட் லெட்டரின் இடைவெளிகளிலும் கூட காதலின் எழுத்துகளை எழுதி அனுப்பி, துடிக்கும் இதயத்தோடு காத்திருந்து ஓரப் பார்வையை மட்டுமே பதிலாய்ப் பெற்ற காலங்கள் இலக்கியச் சிறப்பல்லவா ? தோப்புகளின் இடையிலும், சன்னல்களில் மறைவிலும், பேருந்துகளின் பரபரப்பிலும் எப்படியெல்லாம் காதல் தனது பார்வைப் பரிமாற்றங்களில் வளர்ந்திருக்கிறது.
எத்தனையோ காதல்கள் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே முடிந்து போயிருக்கின்றன. எத்தனையோ காதல்கள் ஒரு புன்னகையிலேயே உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. எத்தனையோ காதல்கள் பெற்றோரின் மீதான அச்சத்தால் உடைந்து போயிருக்கின்றன. எத்தனையோ காதல்கள் காதலாகவே உறைந்து போயிருக்கின்றன.
காதலைப் பற்றி காலங்கள் தோறும் எழுதிக் கொண்டே இருக்கலாம். காரணம் மானுடம் உள்ளவரை காதல் இருக்கும். காதல் உள்ளவரை இதயங்கள் உயிர்க்கும்.
நதிக்கரை நாணல் போல அன்றைய காதலை ஆர அமர ரசித்தவர்களுக்கு இன்றைய காதலைப் பார்ப்பது வியப்பாகவும் இருக்கும், சில வேளைகளில் குழப்பமாகவும் இருக்கும்.
இன்றைக்கு காதல் வாட்சப்பில் தொடங்கி வளர்கிறது. ஒன்றே ஒன்று எனும் காதல் மாறி, ஏதோ ஒன்று எனும் ஆன்லைன் தேடலாக காதல் மாறிவிட்டது. தனது காதல் புனிதக் காதல் என்பவர்கள் கூட எதிர் முனை பிஸியாக இருந்தால் சந்தேகப்படுகிறார்கள். புளூ டிக் வந்தபின்னும் பதில் வரவில்லையேல் காதலை முறித்துக் கொண்டு விடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களே இன்றைய காதல் ஊடகங்கள். இன்றைய நகர வாசிகளுக்கு புழுதிகளின் இடையில் காதல் பகிர்வதை விட படுக்கையில் புரண்டு கொண்டே சமூக ஊடகங்கள் வழியாக பேசிக் கொள்வது எளிதாக இருக்கிறது. அவர்கள் ஒரு வெட்கத்தின் அழகை காண்பதில்லை. ஒரு சிணுங்கலில் ஓசையைக் கேட்பதில்லை. அவர்களுடைய உணர்வுகளை ஸ்மைலிகளே சுமந்து செல்கின்றன. அவர்களுடைய காதல் கவிதைகளை சேட்-ஜிபிடி களே எழுதுகின்றன. அவர்களுடைய காதல் டிஜிடல் நதியில் பயணிக்கின்ற பாய்மரக் கப்பலாய் இருக்கிறது.
சர்வத்தையும் ஒப்படைக்கும் காதல் இன்றைக்கு இல்லை. கடையில் ஒரு பொருளை வாங்குவது போலவோ, சோதனை முயற்சியாக ஒரு பிஸினஸ் ஆரம்பிப்பது போலவோ தான் காதலும் துவக்கப் புள்ளியை வைக்கிறது. பழகிப் பார்ப்போம் பிடித்தால் இணைவோம், பிடிக்கவில்லையேல் இன்னொருவருடன் பழகிப் பார்ப்போம் என்று காதல் புதிய இலக்கணம் எழுதுகிறது. இங்கே காதலின் மெல்லிய சத்தத்தை விட, காமத்தின் வல்லின முத்தமே அடிநாதமாய் இருக்கிறது.
‘ஏம்பா சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வைக்கிறே’ என்ற கேள்வி பண்டைய காலத்தில் சகஜம். இருபது வயதுகளின் தொடக்கத்திலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாய் இருந்தது. அதற்கும் முந்தைய காலத்தில் அது பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயதாய் இருந்தது. இன்றைக்கு அதெல்லாம் இல்லை. ‘ஏம்பா இன்னுமா கல்யாணம் பண்ணிக்கல ?’ எனும் குரல் தான் எழுகிறது.
திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதன் பின் வாழ்க்கையை ஒரு புதிய கோணத்தில் அணுக வேண்டும் எனும் சிந்தனை இன்றைக்கு நீர்த்துப் போய்விட்டது. தனித் தனி நபருடைய விருப்பங்கள் மேலோங்கிவிட்டன. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் சம்பாதிக்க வேண்டும். என்னுடைய ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். எனக்கென ஒரு அரசாங்கம் அமைத்துக் கொள்ள வேண்டும் என எல்லோருமே விரும்புகிறார்கள். தனித்தனி விருப்பங்கள் வலிமையாகும் போது, குடும்ப விருப்பங்கள் வலுவிழந்து விடுகின்றன. விட்டுக் கொடுத்தல் என்பது தோல்வி என கருதப்படுகிறது.
சமூகத்தில் எழுந்துள்ள சமத்துவ சிந்தனையும், மாற்றங்களும் ஒருவகையில் அதன் காரணிகள் தான். ஆனால் அவை எதிர்மறையாய் குடும்ப வாழ்க்கையையும் காதலையும் சிதைக்கின்றன. குடும்பம் எனும் கூட்டு உறவில் எழுகின்ற மகிழ்வு அலாதியானது. விட்டுக் கொடுத்தலில் வருகின்ற உறவுப் பிணைப்பு உன்னதமானது. பொறுமையிலும், சகிப்புத் தன்மையிலும் வருகின்ற நிம்மதி சிலிர்ப்பானது. அடுத்தவரை வெற்றி பெற வைக்க வேண்டுமென ஒதுங்கிக் கொள்வது உன்னதமானது. அவையெல்லாம் இன்றைய தலைமுறைக்கு எட்டிக்காயாய்க் கசக்கின்றன.
பண்டைய காலத்தில் திருமணம் என்பது ஒரு குடும்பமும், ஒரு ஊரும் சேர்ந்து நடத்தி வைக்கின்ற நிகழ்வாக இருந்தது. அது இன்றைக்கு இருவருக்கு மட்டுமே பிடித்துப் போனால் போதும் என்கின்ற ஒரு சிறிய நிகழ்வாகச் சுருங்கிவிட்டது. அதனால் தான் நீண்டகால பந்தங்கள் அருகிக் கொண்டே வருகின்றன. குறுகிய உறவுகள் பெருகிக் கொண்டே வருகின்றன. விழுதுகள் இல்லாத ஆலமரமாய் வாழ்க்கை பிடிமானம் இல்லாமல் புரண்டு கொண்டே இருக்கிறது.
பார்க்காமலேயே காதல், பேசாமலேயே காதல், தொடாமலேயே காதல் போன்ற அன்றைய திரைப்படங்களெல்லாம் இன்றைய மக்களுக்கு நகைச்சுவையாக இருக்கும். அன்றைக்கு காதலின் கடைசி நிலையாக எது இருந்ததோ அதுவே இன்றைக்கு தொடக்கப் புள்ளியாய் இருக்கிறது. ஒரு கைகுலுக்கலைப் போல வெகு சாதாரணமாக ஒரு உடல் பகிர்வும் நடக்கிறது.
நான் ஒரு சுதந்திரப் பறவை ! ஏன் நான் இதெல்லாம் பண்ணக் கூடாதா ? எனும் அசட்டுச் சுதந்திரக் கேள்விகள் பல குடும்ப உறவுகளை பதம்பார்க்கின்றன. விவாகரத்து என்பது அதிர்ச்சியாய் அலசப்பட்ட காலங்கள் போய்விட்டன. இப்போது நீண்டகால பந்தங்களே வியப்பாய்ப் பார்க்கப்படுகின்றன. காரணம் காதல் தனது ஆழத்தை இழந்து கொண்டிருக்கிறது.
முன்பெல்லாம் திருமணம் என்றால் ஆயிரம் பேர் பின்புலத்தை விசாரிப்பார்கள். அங்கும் இங்கும் உறவுகளிடம் பேச்சுக்கொடுத்து தகவல்களைச் சரிபார்ப்பார்கள். குடும்பம் எப்படி என பார்ப்பார்கள். பையனோட குணாதிசயம் என்ன ? பொண்ணோட விருப்பங்கள் என்ன என்றெல்லாம் அலசுவார்கள். ஆனால் இப்போது அப்படியெல்லாம் நிகழ்வதில்லை. சமூக வலைத்தளங்களில் வருகின்ற அழகேற்றப்பட்ட புகைப்படங்கள் வசீகரிக்கின்றன. பகிரப்படும் காதல் செய்திகள் புளகாங்கிதம் அடையச் செய்கின்றன. யதார்த்தம் ஒரு நாள் பல்லிளிக்கும் போது, காலில் ஒட்டிய தூசை உதறுவது போல திருமணத்தையே இளசுகள் உதறிச் செல்கின்றன.
காதலிக்க நேரமிருக்கா ? உங்களுக்காகவே இருக்கிறது இந்த ஆப்! என அழைப்புகள் தினம் தோறும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டேட்டிங் ஆப்களில் விழுந்து காதல் என்றால் என்ன என்பதையே தலைகீழாய்ப் புரிந்து கொள்கிறது இளைய தலைமுறை.
காதல் காண முடியாத ஒரு பரவச உணர்வு. காதலை உணராதவர்கள் உண்மையான வாழ்க்கையை உணராத வர்கள். அவர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகம் இருளடைந்தே கிடக்கும். அதே நேரம் உண்மையான காதலை இளைஞர்கள் உணரவேண்டும்.
காதல், விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை. விட்டுக் கொடுத்தலில் கிடைக்கும் இன்பத்தை சுவைத்துப் பாருங்கள். அடுத்தவரின் வெற்றி உங்களை சிலிர்க்க வைக்கும்.
காதல், உரையாடல்களில் வளரும். உள்ளங்களைத் திறந்து உரையாடுங்கள். விருப்பு வெறுப்புகளை முழுமையாய்ப் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்கே உரையாடல் வலுவாய் இருக்கிறதோ, அங்கே காதல் வலுவாய் இருக்கும்.
காதல்,அது தற்காலிக சுகங்களுக்கான கூடாரமல்ல. அது நீண்டகால பந்தத்தின் உறைவிடம். எனவே தற்காலிக சுகங்களில் தலைவைக்காமல் நிரந்தர உறவுக்கு உரமிடுங்கள்.
காதல், தனிமனித சுதந்திரங்களைப் பறிப்பதல்ல. அதே நேரம் தனித்தனியே வாழ்கின்ற தாமரை இலை, தண்ணீர் பந்தமும் அல்ல. அது ஒற்றைப் பறவையின் இரட்டைச் சிறகுகள் போன்றது ! தனித்தனியே இணைந்திருங்கள்.
காதல், பொழுதுபோக்கல்ல ! பொழுதுகளை ஆக்க வேண்டியது. எனவே உண்மையான அன்பையே பகிருங்கள். காதல் எனும் பெயர் சொல்லி உணர்வுகளைக் காயப்படுத்தாதீர்கள்
காதலியுங்கள் ! காதலின்றி அமையாது உலகு !
2,309 total views, 2 views today