மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே!
தனசேகரன் பிரபாகரன்- தமிழ்நாடு
ஓவென்று மழை சோவென்ற சத்தத்துடன் பெய்துகொண்டிருந்தது. அவள் கண்வழியே அடை மழையிலும் விற்க வந்த பலகாரங்களை துணிபோட்டு மூடி மெல்லே நகர்ந்து செல்லும் வியாபாரி. அவ்வப்போது வந்து வந்து இவள் இருக்கிறாளா என்று பார்த்தபடி செல்லும் வாகனங்களின் மின்விளக்குகள்,அவ்வளவுதான். வீட்டில் யாரும் இருப்பது போல தெரியவில்லை, ஆங்காங்கே ஒட்டடைகள் சுவரில் சில புகைப்படங்கள். சில வாரங்களாக கயல்விழி அவளாக இல்லை, உடல் மெலிந்திருந்தது, அலுவலக வேளையில் கூட தொய்வு. காரணம் அவளுடைய வீட்டாருக்கும் இவளுக்கும் சில சண்டைகள், கணவனுக்கும் இவளுக்கும் பிணக்கு.
சில காலங்களுக்கு முன்பு வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் இருந்தது, இப்போது காட்டாற்று வெள்ளம் போல அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாதது போல ஓடிக்கொண்டிருக்கிறது. பிணக்கு காரணம் கணவன் வீட்டில் இல்லை, வழமையாக வீட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பும் அன்று காணவில்லை, தனிமை அவளின் மூளை அரித்துக்கொண்டிருந்தது. இனி நாம் வாழ்ந்து என்ன பயன் என்ற முடிவுக்கே அவளைத் தள்ளிக் கொண்டிருந்தது.
அவளின் கண்கள் ஒருபுறம் மின் விசிறியையும் மற்றொரு புறம் உப்பரிகையையும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன, உப்பரிகையில் இருந்து ஒரு அடி கீழே வைத்து குதித்தால் போதும் எல்லாம் முடிந்துவிடும். இனி கயல்விழியை யாரும் தேடமாட்டார்கள் துன்பக்கடலில் துவண்டு நித்தம் நித்தம் வாடுவதை விட இப்படி சாட்டம் இட்டால் போதுமே என்று நினைத்தாள். மனதை கல்லாக்கிக் கொண்டு மெல்ல கைகளை உப்பரிகையின் பிடியில் வைத்து ஒரு உந்து கொடுக்க எத்தனித்தாள், இனி எல்லாம் முடிந்துவிடும் என்று கண்களை மூடிக் கொண்டாள்.
அந்நேரம் “அகர அகர அகர….” என்று கூறிய வாளால் வெட்டுவது போல சத்தம் வந்து இவளது காதுகளைத் தொட்டது, கண்களில் நீர் வடிந்தபடி கைகளை எடுத்துவிட்டாள். நேரே உள்ளே சத்தம் வரம் திக்கை நோக்கி ஓடினாள் கயல்விழி, சத்தமிட்டது வேறு யாருமல்ல அவள் ஆசையாய் வளர்த்த செல்லக்கிளி பெயர் “திருமங்கை”. இவளைக் கண்டதும் மிகவும் உற்சாகத்துடன் மீண்டும் “அகர அகர” என்று மிழற்றத் தொடங்கினாள் திருமங்கை எனும் இளங்கிளி.
கயல்விழி சிறுவயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வந்தவள், பலருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவள். இரக்க குணம் மிகுந்தவன், படித்து முடித்ததும் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே மாலை வேலைகளிலும் வார இறுதிகளிலும் அருகில் இருக்கும் சிற்ரூர்களுக்குச் சென்று ஏழைக் குழந்தைகளுக்கு ஆசிரியையாக இருந்து கல்வி கற்றுக்கொடுக்கும் பணியை செய்துகொண்டிருந்தாள். அப்போது ஒரு ஏழைச் சிறுமி இவளால் படிப்பில் சித்தியடைந்து அதற்கு பரிசாக அவளிடமிருந்த கிளியை இவளுக்குக் கொடுத்திருந்தாள். இவளும் அந்த கிளியை வீட்டிற்கு கொண்டுவந்து பாலும் பழமும் போஷித்து, திருக்குறளில் முதல் குறளான “அகர முதல…” என்று நேரம் இருக்கும்போதெல்லாம் சொல்லிக்கொடுப்பாள், கிளிப்பிள்ளையும் முதல் எழுத்தை மட்டும் கற்றுக்கொண்டது, அதைத்தான் இப்போது சரியான நேரத்தில் மிழற்றி இவளின் எண்ண ஓட்டத்தை மாற்றியது.
ஒரு முறை கிளியைப் பார்த்தாள், அதன் பின்னால் இவளது புத்தகங்களும் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் இருந்தன, அதில் திருநெடுந்தாண்டகம் எனும் புத்தகம் மட்டும் சற்றே சாய்ந்திருந்தது, அதுவும் இவளது கண்ணில் பட்டது. அவள் திருநெடுந்தாண்டகம் படித்தவள், திவ்யப்ரபந்தத்தில் கடைசியாக எழுதப்பட்டது அந்தக் கவிதை.
அதில் காதலனைப் பிரிந்த காதலி ஒரு முறை துயரத்தால் வாடும் போது, முன்பு அவள் வளர்த்த கிளி காதலனின் பெயரைச் சொல்லி அவனது நினைவை ஊட்டி அவளை ஆசுவாசம் படுத்தும் பாடல் உண்டு. அது அவளின் நினைவுக்கு வந்தது, ஓடிச்சென்று அந்த புத்தகத்தை எடுத்தாள், இயற்கை தனக்கே கொடுத்த செய்தி என நினைத்துக் கொண்டாள், வாழ்க்கையில் தன்னால் பயன் பெற பல்லாயிரம் குழந்தைகள் இருக்கும்போது வீணே ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தோம் என்று நினைத்தாள். வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும், பலருக்கும் பயனுள்ளவளாய் வாழவேண்டும் என்று புது உத்வேகம் கொண்டாள். இவள் படித்த இலக்கியங்கள் இவள் எடுத்த கோழை முடிவை கேலிபேசி சிரிப்பதாக நினைத்தாள். தனது கிளியை நோக்கி கண்ணீர்மல்க இரு கைகளையும் கூப்பி வணங்கினாள், கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்தது, அதன் பக்கங்கள் காற்றில் அசைந்து “வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக! என்று மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” என்ற பாடலைக் காட்டிக்கொண்டு நின்றது.
615 total views, 2 views today