வானத்திலிருந்து பெய்யும் அதிசய வைர மழை
ஒரு நாள் நீங்கள் வெளியே நடந்து செல்லும் போது திடீரென்று பார்த்தால் மேகம் கருத்து மழை பெய்யப் போவதற்கான அறிகுறிகளை உணர்கின்றீர்கள். அவ்வாறே மழை பெய்யத் தொடங்குகிறது. ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பது போல் தண்ணீர் உங்கள் உடலில் வந்து விழாமல் வைரக்கற்கள் உங்கள் மேல் வந்து விழுந்தால் எப்படி இருக்கும்? இது ஒன்றும் அறிவியல் புனைவு திரைப்படத்தில் வரும் காட்சி கிடையாது, மாறாக யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரு கிரகங்களிலும் நிகழும் ஒரு உண்மையான நிகழ்வாகும். சமீப கால அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்த பிரகாசமான உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது.
ஹாம்பர்க் அருகே உள்ள ஷெனெஃபெல்ட் ஆகிய இடத்தில் உள்ள ஆய்வகமான ஐரோப்பிய ஓகுநுடுஇல் காணக்கூடிய எக்ஸ்-ரே லேசர் உடன் விஞ்ஞானிகள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர். கவனமான பரிசோதனைகள் மூலம், அவர்கள் யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் வைரங்கள் உருவாகி மழையாக விழுவதற்கு ஏற்ற நிலைமைகள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வெளிப்பாடு விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
யுரேனஸ் மற்றும் நெப்டியூனின் வாயுமண்டலங்கள் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் அமைக்கப்பட்ட மீத்தேன் எனப்படும் வாயு நிறைந்த மண்டலங்களாகும். இந்த கிரகங்களின் உள்ள வளிமண்டல அழுத்தம் மற்றும் வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. இவ்வாரான தீவிர நிலைமைகளில், அங்கே காணப்படும் மீத்தேன் உடைந்து, அதனுள் காணப்படும் கார்பன் அணுக்கள் வைரமாக மாறுகின்றன. இவை பின் வைரக்கற்களாகத் தரையை நோக்கி மழை போன்று பெய்யும்.
முன்னர், விஞ்ஞானிகள் நினைத்தனர் கிரகங்களின் மேல் மண்டலங்களில் மட்டுமே இந்த வைரங்கள் உருவாகும் என்று. ஆனால், இந்த புதுப் பரிசோதனைகள் இந்த ஒளிரும் நிகழ்வு முன்னர் எதிர்பார்த்ததை விடக் குறைந்த ஆழத்தில் நிகழ்கிறது என்பதைக் காட்டுகின்றன. இதனால் விஞ்ஞானிகளுக்குக் கிரகங்களைப் பற்றிய புரிதல் அதிகரித்திருக்கிறது.
யுரேனஸ் மற்றும் நெப்டியூனில் பெய்யும் வைர மழை இயற்கையின் அற்புத காட்சி மட்டுமல்ல் இது ஆழமான விளைவுகளைக் கொண்டுள்ளது. இவ்வாறு மழையாகப் பெய்யும் வைரங்கள் அந்த கிரகங்களின் காந்தப் புலத்தை (magnetic field) வடிவமைக்க முக்கிய பங்கு வகிக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு யூரனஸ் மற்றும் நெப்டியூன் பற்றியது மட்டுமல்ல. இது நமது சூரிய மண்டலத்தைத் தாண்டி காணப்படும் எக்ஸோபிளானட்ஸ், குறிப்பாக ‘மினி-நெப்டியூன்ஸ்’ எனப்படும் கிரகங்களின் வானிலையைப் பற்றி அறிய உதவும் ஒரு விதமான அறிவியல் ஜன்னலாகும்.
இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் நினைப்பது போல் பெரிய வைரக்கற்கள் வந்து விழுவதில்லை; அவை மிகவும் சிறிய கற்கள் ஆகும், குறிப்பாக ஓர் சில மைக்ரோமீட்டர்கள் அகலமுள்ளவை ஆகும்.
இவ்வாறு யூரனஸ் மற்றும் நெப்டியூனில் நிகழும் வைர மழை இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களை உணர வைக்கும் ஒரு நிகழ்வாகவே பார்க்கவேண்டும். நாம் விண்வெளியை ஆராயும் போது, இன்னும் என்ன பிரகாசமான ரகசியங்களை நாம் கண்டுபிடிக்கலாம் என்பதை யார் அறிவார்? இந்த கண்டுபிடிப்பு மனித ஆர்வம் மற்றும் விஞ்ஞான முயற்சிக்கு ஒரு சான்றாகும்; இது நமது பூமிக்கு அப்பால் உள்ள விசித்திரமான மற்றும் அதிசயமான நிகழ்வுகளை நமக்குக் காட்டுகிறது.
530 total views, 9 views today