புதிய வெளியீடுகளும்,நூலாசிரியர்களின் எதிர்பார்ப்புகளும்!
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.
அழகாகக் கதைக்கிறாங்கள். புத்தகத்தை எடுத்து நீட்டினால்…
நீண்ட நாட்களுக்குப்பின் எனது நண்பனைச் சந்தித்தேன்.அவன் இளமைக்காலத்திலிருந்து என்னோடு ஒன்றாக வாழ்ந்தவன். புலம்பெயர்ந்து யேர்மனிக்கு வந்தபோது எங்கள் சந்திப்பு மிகக்குறைவாகவே இருந்தது.ஆனாலும் ரெலிபோன் தொடர்புகள் அதிகம் உண்டு. கொரணா தொற்று வந்த காலம்,எங்களுக்கு அதிக இடைவெளியைத் தந்திருந்தது. பலரின் பிரிவுகள் இவ்வாறே நிகழ்ந்திருந்தன.சிலரின் பிரிவுகள் நிரந்தரமாகியது. இவை இப்போதும் வருத்தத்தைத் தருகிறது. நல்லாப் பழகியவர்கள் பலர் இதில் சேருகிறார்கள்.
நண்பன் சிறந்த எழுத்தாளன் பத்துக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறான்.அண்மையில் யேர்மனி டோட்முன்ட் நகரில் நடந்த புத்தகவிழாவிற்கு வந்திருந்தான். இந்தப் புத்தகவிழாவிற்கு வருவதாக முன்கூட்டியே ரெலிபோனில் சொல்லியும் இருந்தான். எனக்கும் அது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.தனது புத்தகங்களையும் கொண்டு வந்து வைக்கப்போவதாகச் சொன்னான்.எழுத்தாளர்கள் தாம் எழுதியவற்றை வாசகர் மத்தியில் சேர்ப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்றான். சந்தித்தபோது இருவரும் ஆரத்தழுவி அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.அவனுக்கு அப்போது கண்கள் பனித்திருந்ததைக் கண்டேன். நீண்ட நாள் சந்திக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் அங்குபோய்ச்சேர சற்று தாமதமாகியது. என்ன மச்சான் உன்னுடைய புத்தகங்களை யாராவது வாங்கினார்களா என்று கேட்டேன்.
அதையேன் பறைவான்.அழகாகக் கதைக்கிறாங்கள். புத்தகத்தை எடுத்து நீட்டினால்,”மச்சான் ஆளவிடு என்று எடுக்கிறாங்கள் ஓட்டம். சிலர் காரடிக்குப் போயிற்று வாறன் என்று போனவர்கள் தான், திரும்பி வரவேயில்லை. தப்பித்தவறி கண்டால் பயந்து எடுக்கிறாங்கள் ஓட்டம்.
வாசிப்புப்பழக்கம் நல்லாக்குறைஞ்சு போச்சு மச்சான். எழுதியதை வாசித்துக் கருத்துச் சொன்னால்தானே எழுதியவனுக்கு ஆவல் பிறக்கும்.அதைத்தானே ஒரு எழுத்தாளன் ஆவலோடு எதிர்பார்ப்பான். இன்னும் எழுத வேண்டுமென்கிற ஆசை வரும்.புத்தகங்கள் தானே,ஒவ்வொரு இனத்தின் புக்ககங்கள். ஒரு எழுத்தாளன் எத்தனை கதாபாத்திரங்களைப் புதிதாகப் படைக்கிறான்.அதனால்தானே அவன் படைப்பாளியாகிறான். எங்கட இளமைக் காலத்தைத் திரும்பிப்பார்த்தால். இப்போதிருக்கிற நிலமையை நம்ப முடியாமல் இருக்கிறது .நாங்கள் புத்தகம் வாசிக்கவென்றே பெரும்பகுதியைச் செலவழித்திருக்கிறோம்.
நூலகங்கள் எங்களை அக்கறையோடு வரவேற்றன.அதனால் நாம் வளர்ந்தோம். ஒரு நாளில் சில மணித்தியாலங் களையாவது அதற்காகச் செலவளித்திருக்கிறோம். நண்பர்கள் எங்கே என்று தேடி,எங்கும் போக வேண்டிய தில்லை.நேராக நூலகம் சென்றால் அங்கு பார்க்கலாம்.அங்கே அவர்கள் எதையாவது,வாசிச்சுக் கொண்டிருப்பார்கள்.
புத்தகத்தை வாசித்துவிட்டு,அதைப்பற்றி உரையாடுவதும் சுவார்சியமான அனுபவங்கள்.அதற்காகவே கடற்கரைக்குப் போவோம். பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பங்கிட்டு அலசிக் கொள்வோம்.எங்களுக்குள் விவாதங்கள் எழும் அத்தனையும் ஆரோக்கியமானவை..நாவல்களில் வாழ்ந்த கதைமாந்தரோடு நாங்களும் வாழ்ந்திருக்கிறோம். என்றோ வாசித்த புத்தகங்கள் இன்னுமே நினைவில் நிற்கின்றன.
சின்ன வயதில் இந்திய எழுத்தாளர்கள் எம்மை ஆட்கொண்டார்கள். எழுத்துலகில் ஈழத்து இலக்கியங்கள் பெருமளவில் வர ஆரம்பிக்க அவைகளுக்கும் நாம் அடிமையானோம். எழுத வேண்டுமென்கிற ஆவல் அதனாலேயே எங்களுக்குள்ளும் எழுந்தது. நானும்,நீயும் புத்தகம் எடுப்பதற்காக பல மைல்கள் சைக்கிளில் சென்றிருக்கிறோம். ஐந்து பத்தென்று புத்தகங்ளைக் கொண்டு வந்து வாசித்து விட்டு திரும்பவும் கொண்டு போய்க் கொடுப்போம். இவ்வுலகில் எழுத்தும் வாசிப்பும் இல்லாவிட்டால்,வரலாறுகள் தெரியாமல் போய்விடும்.
நல்லதொரு விவசாயி நிலத்தைப் பண்படுத்தி,உழுது பயிரிட்டு அதனால் வரும் விதவிதமான காய்கறி,பழங்களை மக்களுக்கு அளிக்கின்றான். எது உயிர்ச்சத்து நிறைந்ததென தேடி அதையே பாவனையாளர்களுக்குக் கொடுக்கிறான். அதனை வாங்கி உண்பவன் மகிழ்ந்து ஆரோக்கியமாக வாழ்கிறான்.ஒவ்வொரு எழுத்தாளனும் இந்த சமுதாயத்திற்குத் தேவையான இலக்கியங்களைத் தேடித் தேடி எழுதி வாசகர்கள் மத்தியில் சமர்ப்பிக்கிறான்.அது அவர்களின் அறிவை வளர்க்கிறது. கிரேக்க ஞானி சாக்கிரட்டீஸ் கூறிய கருத்திது.
எழுத்துகள் இல்லாவிட்டால் எல்லாமே இல்லாது போய்விடும்.படிப்பறிவே இல்லாதவர்கள் வாசிப்பின் பின் சிறந்த எழுத்தாளராக மாறி இருக்கிறார்கள்.உதாரணத்திற்கு புகழ்பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சொல்லலாம்.மூன்றாம் வகுப்புப் படித்த ஜெயகாந்தன் அதிசயிக்கத்தக்க இலக்கியங்களை தமிழுக்குக் கொடுத்திருக்கிறார்.சாகித்திய விருது ஞானபீடவிருது என்று அதி உயர் விருதுகளைப் பெற்று இறப்பிற்குப் பின்னும் அவர் இலக்கியங்களால் வாழுகிறார்.
அவரது ஆக்கங்கள் வாசகர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இவ்வாறு எத்தனை எழுத்தாளர்களைச் சொல்லலாம்.அப்போது வாசகர்கள் நிறைய வாசித்தார்கள்.தட்டிக் கொடுத்தார்கள் இப்போது மிகமிகக் குறைவானவர்களே வாசிக்கிறார்கள். வாசகர்கள் இல்லாவிட்டால் எழுத்தாளனே இல்லை. இதற்குக் காரணமும் உண்டு. காட்சி ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகிற இந்தக் காலத்தில் எழுத்து ஊடகங்களின் ஆதிக்கம் குறைய ஆரம்பித்து விட்டன. இது அறிவியலின் வளர்ச்சி தான். ஆனாலும் தரமற்ற ஆக்கங்களால் சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது. இவை பற்றி நானும் நீயும்தான் கதைப்போம்.வாசிப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு வேண்டும். ஏன் கனக்க எதற்கு,யேர்மனியில் எத்தனை சஞ்சிகைகள்,பத்திரிகைகள் தோன்றின. இன்று எத்தனை தொடர்ந்து வெளிவருகின்றன. “மண்”சஞ்சிகை,(33 வருடம்) நீண்ட காலம். “வெற்றிமணி” பத்திரிகை முப்பது வருடங்களுக்கு மேல்.”அகரம்” (13 வருடம்) தமிழ் ரைம்” இவற்றைச் சொல்லலாம்.
இதனை வெளிக்கொணர்வதில் ஆசிரியர்கள் எவ்வளவு கஸ்ரப்படுகிறார்கள். சிலர் வாசிப்பார்கள்,பலர் என்ன செய்வார்கள் என்றே தெரியாது.ஆனாலும் ஆசிரியர்களுக்கு ஒரு நம்பிக்கை. இவைகளும் இல்லாவிட்டால் ஆக்க தாரர் எழுத்தின் மீது மோகம் கொண்டவர்கள் தங்கள் பசியைத் தீர்க்க எங்குதான் போவார்கள். இன்றைய காலம் இளவயதிலேயே மறதி நோயால் பலர் அவதியுறுகிறார்கள். மறதிக்கு மருந்து புத்தகங்களே!புத்தகங்கள் வாசிப்பதும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் நினைவாற்றலை அதிகரிக்கும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நாமாவது இதனைக் கடைப்பிடிப்போம்.
498 total views, 6 views today