பழைமை அழிவதில்லை. மறைந்திருக்கின்றது.
கௌசி.யேர்மனி
காலம் தன்னுடைய பூதக்கண்ணாடியை அணிந்து கொண்டு உலகத்தைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே பயணம் செய்கின்றது. அதில் அடையாளப்படுத்தப்பட்டும்,உதாசீனம் செய்யப்பட்டும் பலர் தன்னுடைய பாதையில் வந்து போகின்றார்கள். துடிப்பும், சோர்வின்மையும், தூங்கவிடாமல் பலரை உச்சத்தில் கொண்டு சென்றாலும் காலம் போகிற போக்கில் துடைத்தெறிந்து விட்டுப் போகின்றவர்களும் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால், இன்று தொழில் நுட்பம் பொறுக்கி எடுத்து அடையாளப்படுத்துகின்ற வேலையைச் செய்கின்றது.
வள்ளுவர் வாழ்ந்தார்;, வாழ்ந்து கொண்டு இருந்தார், போற்றப்பட்டார். போற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றார். இன்றைய உலகம் மிதமிஞ்சி அவரைப் போற்றிக் கொண்டாடுகின்றது. அவருக்கு உரிமைப போர் நடக்கின்றது. இந்நிலை அவரை விஞ்சிப் படைக்க யாருமில்லை என்பதை அடையாளப்படுத்துகின்றது. இல்லை என்பதை விட வள்ளுவரின் ஒரு குறளை வாய் மொழிந்தால், தலைசிறந்த பேச்சாளன், கல்வியாளன் என்று போற்றப்படும் நிலைக்கு மனிதர்கள் உயர்த்தப்படும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது இன்றைய உலகில் தொல்காப்பியர் யுகம் தோன்றியுள்ளது. தொல்காப்பியத்தைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தால், பரீட்சையைக் கவனத்தில் கொண்டு கற்றுவிட்டு தொல்காப்பியரைத் தவிக்க விட்ட காலம் ஒன்று இருந்தது. இன்று உலகம் முழுவதும் இணையவழியில் தொல்காப்பியப் பாடம் கற்பிக்கும் நிலை தோன்றியுள்ளது. சினிமாவில் தொல்காப்பியத்தைத் தேடுகின்றார்கள். தொல்காப்பியருக்குச் சிலைகள் நின்று நிமிர்கின்றன.
~~காரிகை கற்றுக் கவி பாடுவதிலும். பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே|| என்னும் பழமொழியின் படி யாப்பிலக்கணம் கற்ற போது எப்போது இக்கற்கை நெறியை முடிப்போம்? என்று இருந்த நிலை மாறி இப்போது இணையவழி கல்வியில் யாப்பு இலக்கணம் அரங்கேறுகின்றது. ஆனால், கவியாற்றல் என்பது சிலருக்கு பிறப்பிலேயே வரும். அதை மெருகேற்றப் பலர் முனைந்து வெற்றி கண்டுள்ளார்கள்.
இவ்வாறு ஆடை தொடங்கி உணவு, இலக்கியம் வரை பூமி சுழற்றிக் கொண்டு வந்து விட்டிருக்கின்றது. இதுதான் இன்று பழைமை அழிவதில்லை. மறைந்திருக்கின்றது என்ற சிந்தனையை வலுவடையச் செய்திருக்கின்றது.
சங்க இலக்கியமாகிய கலித்தொகையிலே
~~பல உறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே||
என்னும் வரிகளை எடுத்து நோக்கினால், மலையிலே தோன்றும் சந்தனம் மலைக்குச் சொந்தமில்லை, கடலிலே தோன்றிய முத்து கடலுக்குச் சொந்தமில்லை, அதே பொருளமைந்த பாடலைக் கண்ணதாசன் பட்டிணத்தில் பூதம் திரைப்படத்தில் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி எனத் தொடங்கும் பாடலில்
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
என்று எழுதியிருக்கிறார். அதேபோல்
~~வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ|| என்ற கலிங்கத்துப்பரணி பாடலை
~~வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் அழகிலே காலம் நடக்கும் உறவிலே|| என்று அன்னை இல்லம் படத்திலே மடிமீது தலை வைத்து விடியும் வரை தூங்கவோ என்ற பாடலிலே கொண்டு போய் வைத்திருக்கின்றார்.
எனவே சுற்றிச் சுழலும் காலச்சக்கரத்தில் ஒன்று மட்டுமே நிஜம். வலிமையுள்ளது வாழும் என்ற சார்ள்ஸ் டாவின் விதியின் படி படைப்பவை அனைத்தும் நிலைப்பதில்லை. வலிமையானது காலம் தாண்டித் தேடப்படும். தேடப்படும் தேடலாக எம்முடைய எண்ணங்களும் அமைய வேண்டுமானால்,
~~உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்||
என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தி ஒருவன் சோர்வில்லாமல் செயற்பட்டால், மூளையைத் தோண்டி முழுவதுமான நற்சிந்தனைகளை உருவாக்க முடியும்.
உதாரணமாக படைப்பின் அனைத்தும் காரண காரியங்களுடனேயே படைக்கப்பட்டுள்ளன அல்லது உருவாகியுள்ளன. இந்தச்; சிந்தனையை மூளைக்குள் போட்டு வைத்தேன். அது வெளியே வருகின்ற போது. ஏன் என்னும் கேள்வியை என்னிடம் கேட்கின்றது.
எமது கண்களுக்குப் பார்க்கும் சக்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது உண்மையே. தொலைதூரப் பார்வை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேல் பகுதியை விட கீழ்ப்பகுதியைத் திருப்பாமல் பார்க்க முடியாது. முகங்களை முழுவதுமாகப் பதிந்து வைத்திருக்காது. நீங்கள் நினைத்துப் பார்த்தாலும் புகைப்படத்தில் போல் உங்கள் முகம் தெரியாது. கனவில் கூட நீங்கள் காணுகின்ற முகம் கலங்கிய நிலையிலேயே தெரியும். அதைவிட நுண்ணுயிர்கள், வைரஸ் போன்றவற்றை உங்களுடைய கண்களால் காண முடியாது. கோடிக்கணக்கான உயிரினங்கள் பூமிப் பரப்பில் வாழ்ந்து கொண்டிருந்தும் என் கண்களுக்குத் தப்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஏன் என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் கண்களுக்கு முன்னே எத்தனையோ நுண்ணுயிர்கள் நடந்து கொண்டு திரியும். தூசிகள் பறந்து கொண்டிருக்கும். உங்களுடய முகத்திலும் உடலிலும் உங்களுடைய இறந்த செல்களையும், இறந்த தோல்களின் சொடுகுகளையும் உண்பதற்காக எத்தனையோ நுண்ணுயிர்கள் நடந்து கொண்டே இருக்கும். இதனைப் பார்த்துக் கொண்டு உங்களால், வாழ முடியுமா? அப்படியே ஆனால், எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவே வாழ்வார்கள்.எனவே அனைத்தும் காரண காரியங்களுடனேதான் படைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆழமான வாசிப்பும் அதன் தூண்டுதலினால் ஆழமான சிந்தனை ஆற்றலும் பயன்படுத்தப்படும் போது படைப்புக்கள் காலம் கடந்து வாழும்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு
என்று திருமூலர் சொல்வது போல கூட்டுக்குள் நின்றாலும் சிட்டுக்குருவி தமிழ்ப் பாட்டுப் பாட மறுப்பதில்லை என்று தமிழ் செய்யுங்கள். எழுத்தென்னும் ஆயதமே உங்கள் இதயத்தையும் பிறர் இதயத்தையும் திறக்கும் ஆயுதம். எழுத்துக்குத் திரை போட்டு மூடாமல் வெளிவரும் இலக்கியங்கள் காலங்கடந்தும் வாழும். காலம் வலிகள் மட்டுமே தரவில்லையே. காலம் தந்த கிலுகிலுப்புக்கள் நிறையவே பாதை எங்கும் இருக்கும். அவை மனதுக்குள் இதமான எண்ணங்களை உருவாக்கி மித மிஞ்சிய வாழ்நாளை வளமாக்க படைப்புக்கள் வெளிவரட்டும்.
753 total views, 2 views today