அன்னமிட்ட கலைஞன் விஜயகாந்த்

  • ஓர் அஞ்சலிக் குறிப்பு

ரூபன் சிவராஜா- நோர்வே.

பதின்ம வயதில் என்னை ஈர்த்த திரைநாயகர்களில் விஜயகாந்த் முக்கியமானவர். அவரது கம்பீரமும் வசீகரமும் மிக்க தோற்றம், ஏற்று நடித்த பாத்திரங்களும், புரட்சிகரமான வசனங்களைப் பேசியமையும் அவரைப் பிடித்துப் போனமைக்கான முக்கிய காரணங்கள். இயல்பான முகபாவங்களும் பாத்திரங்களுக்கேற்ற உடல்மொழியையும் அவரின் திரைப் பிரசன்னத்திற் காணலாம். பாடற் காட்சிகளில் எளிமையும் சின்னச் சின்ன மேனரிசங்களும் இரசனைக்குரியவை.

சினிமாவை ரசிக மனநிலைக்கு அப்பால் விமர்சனக் கண்ணோட்டத்தோடும் ரசனை மாற்றத்தோடும் பார்க்கத் தொடங்கிய காலங்களில் முன்னைய அத்தகைய ஈர்ப்பு மங்கிப் போனது. ஆனாலும் விஜயகாந்த் கவனத்திற்குரிய நடிகராகவே இருந்துள்ளார். நட்சத்திர அந்தஸ்து மிக்க நாயகனாக விஜயகாந்தின் வளர்ச்சியும் நிலைகொள்ளலும் மக்கள் செல்வாக்கும் அபரிதமானவை.

திரைக் கலைஞர்களின் நலன்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் பலராலும் அடிக்கடி விதந்துரைக்கப்படுகின்றன. தன் படங்களை இயக்குவதற்குரிய வாய்ப்பினைக் கொடுத்து இவர் அறிமுகப்படுத்திய இயக்குனர்களின் எண்ணிக்கையே ஐம்பதைத் தாண்டும். திரைப்படக் கல்லூரியில் கற்ற திரைக்கலை மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பலருக்கும் தன் படங்களில் வாய்ப்புக் கொடுத்திருக்கின்றார். அவரின் மனிதநேயம், உதவிசெய்கின்ற இயல்பு, சவாலான காரியங்களில் இறங்குகின்ற துணிச்சல் குறித்தும் திரையுலகைச் சார்ந்த பலர் சிலாகித்துப் பேசிய கருத்துகள் வலையொளித் தளங்களில் நிறைந்து கிடக்கின்றன. அரசியலிற்கூட ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் கோலோச்சிய தருணத்திலேயே துணிந்து களமிறங்கியவர். சரியான ஆலோசனைகளும் கொள்கை ரீதியான அடித்தளங்களும் வழிநடத்தல்களும் இருந்திருந்தால்- அல்லது குறைந்தபட்சம் உடல்நிலை சீராக இருந்திருந்தால் இன்று தமிழக அரசியலில் முதன்மைச் சக்தியாக இருந்திருக்கக்கூடியவர்.

அவருடைய ஆகப்பெரிய பண்பாக திரையுலகத்தோரால் தவறாது சொல்லப்படுவது அவருடைய வீட்டுக்கோ, அலுவலகத்திற்கோ சென்றால் உணவளித்து உபசரிக்காமல் எவரையும் அனுப்பமாட்டார் என்பதாகும். அதுமட்டுமல்லாமல் தனது படப்பிடிப்புத் தளங்களிலும் அனைத்து ஊழியர்கள் முதல் கலைஞர்கள் வரையான அனைவருக்கும் ஒரே மாதிரியான சிறப்பான உணவுகளை வழங்கவேண்டுமென்பதை விடாப்பிடியாகத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தவர். கிட்டத்தட்ட ஒரு சமபந்திப் போசனையைத் திரைத்துறையில் உருவாக்கியவர். ஏனைய தயாரிப்பு நிறுவனங்களும் அதனை ஒத்த உணவு வழங்கல் நடைமுறையைப் பின்பற்ற இவரது செயல்கள் நிர்ப்பந்தித்தன என்றும் சொல்லப்பட்டது.

தமிழகத்திற்கு அகதியாகச் சென்ற ஈழத்தமிழர்கள், அங்கு தங்கியிருந்த இயக்கப் போராளிகள் உட்பட்டவர்களுக்கும் உணவளித்திருக்கின்றார் என்பதை நேரடியாகச் சிலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இன்றும் பலர் முகநூலில் அவ்வாறான தம் அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அரசியலில் எதிர்க்கட்சி நிலைக்கு வந்த சமகாலத்திலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படத் தொடங்கிவிட்டது. அத்தருணங்களில் அவருடைய பேச்சில் ஒரு வகையான நினைவுத் தழும்பல் ஏற்படத்தொடங்கியிருந்தது. அதனை அவர் குடிபோதையில் உளறுகின்றார் என்றவாறான இழிவுபடுத்தல்களாக ஊடகங்களும், சமூச வலைத் தளங்களும் சித்தரித்தன. மீம்ஸ் என்ற பெயரில் அவரை வைத்து வெளிவந்த கேலியுருவகங்களை இந்தத் ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ ரசித்தது என்பதும் கசப்பான உண்மை.

விஜய், சூர்யா போன்றவர்களின் ஆரம்பக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் அவர்கள் பரவலாக அறியப்படுவதற்கு இவருடைய நட்சத்திர வியாபார அந்தஸ்து பயன்பட்டது. (செந்தூரபாண்டி, பெரியண்ணா திரைப்படங்கள்) நோயினால் உடல்நலம் குன்றிய இறுதிக் காலங்களில் அரசியலுக்காக அவரை மேடையிற் காட்சிப்பொருளாக்கி கஸ்ரப்படுத்தினர் குடும்பத்தினர்.ஒரு கலைஞனை, கம்பீரமான ஆளுமையை அப்படிக் காணநேர்ந்தமை அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது. நோயின் அவஸ்தைகளிலிருந்து நீங்குதல் எனும் வகையில் மரணம் அவருக்கு விடுதலை!

கலைஞனாக, அரசியற் கட்சித் தலைவனாக எனப் பல வகைகளில் நினைவுகூரப்படுவார். இவற்றைத் தாண்டி ‘அன்னமிட்ட கை’ என்ற ஒற்றை விம்பத்தின் ஊடாக அவர் அதிகம் நினைக்கப்படுவார் என்று தோன்றுகிறது.

அஞ்சலிகள்

943 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *