அன்னை இல்லம்: நாகேஷை கண்டித்த தணிக்கை அதிகாரி!

’அன்னை இல்லம்’ படத்தின் சிவாஜி – முத்துராமன்
கல்யாண்குமார் நடித்த ‘மணி ஓசை’ மூலம் இயக்குநராக அறிமுகமான பி.மாதவன், அடுத்து இயக்கிய படம், ‘அன்னை இல்லம்’.ஆரூர்தாஸ் வசனம் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.
சிவாஜி கணேசனுடன், தேவிகா, முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி, நாகேஷ், ஜெயந்தி, சச்சு, ஓ.ஏ.கே.தேவர் உட்பட பலர் நடித்திருந்தனர். சிவாஜி கணேசனின் சொந்த வீட்டுப் பெயரையே இந்தப் படத்துக்குத் தலைப்பாக வைத்தனர். சிவாஜி, ரங்காராவ், தேவிகா ஆகியோரின் நடிப்பு இதில் பேசப்பட்டது. நாகேஷ் திக்குவாய் கொண்டவராக நடித்திருப்பார். இப்படி பேசி நடித்ததன் மூலம் திக்குவாய் கொண்டவர்களை வேதனை பட வைத்துவிட்டதாகக் கூறி, அப்போதைய தணிக்கை அதிகாரி சாஸ்திரி, நாகேஷை நேரில் அழைத்து கண்டித்தார்.
கண்ணதாசன் வரிகளில் ‘எண்ணிரண்டு பதினாறு வயது’, நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது’, ‘மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்’, என்பது உட்பட பாடல்கள் மெகா ஹிட். அப்போது, சென்னை வானொலியில் இரவு 11 மணிக்கு மேல் அதிக முறை ஒலித்த பாடல், இந்தப் படத்தின் ‘மடி மீது தலைவைத்து’. இப்போது கேட்டாலும் புது உணர்வை தரும்.
சூர்யாவுடன் அதிதி ஷங்கர்
நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிகை அதிதி ஷங்கர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிதி ஏற்கனவே விருமன் மற்றும் மாவீரன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமல் ஜோடியாகும் ஐஸ்
மணிரத்னம் இயக்கிய இருவர், குரு, ராவணன், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்தவர் பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்நிலையில் நாயகன் படத்தை அடுத்து மீண்டும் கமலை வைத்து மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கமலுடன், திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து ஐஸ்வர்யா ராயின் பெயரும் அறிவிக்கப்பட உள்ளது. அப்படி இந்த படத்தில் அவர் இணைந்தால் கமலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும்.