சமூக ஊடக போராளிகளுக்கு காத்திருக்கின்றது பேராபத்து

ஆர்.பாரதி

நிகழ்நிலை காப்புச் சட்டம் (Online safety bill) இலங்கையில் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. பெப்ரவரி முதலாம் திகதி இது நடைமுறைக்கு வந்த ஒரு சில தினங்களிலேயே, இச்சட்டத்தின் கீழ் ஒருவர் கைதாகியிருக்கின்றார். சமூக ஊடகம் ஒன்றில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றுதான் அவரது கைதுக்கு காரணம். அதாவது, நடைமுறைக்கு வந்த உடனடியாகவே தமது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது நிகழ்நிலை காப்புச் சட்டம்!

சமூக ஊடகங்கள் அரசியலில் தற்போது செல்வாக்கைச் செலுத்தும் ஒரு நிலை இப்போது உருவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில் அவற்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த சட்டமூலம் அரசரம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எதிர்க்கட்சிகள், மனித உரிமை அமைப்புக்கள், உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் இது நடைமுறைக்கு வந்துவிட்டது.

இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்திய கருத்துக்கள் போதிளவுக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமது உண்மையான நோக்கங்களை மறைப்பதற்காக அரசாங்கத்தினால் சொல்லப்படும் நியாயப்படுத்தல்களாகவே அவை பார்க்கப்படுகின்றன. மனித உரிமைகள் அமைப்புக்கள் எதுவும் அரசாங்கத்தின் கருத்தை ஏற்கவில்லை. இணையவழி மிரட்டல், வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல் போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுதான் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றது என்பதுதான் அரசாங்கம் நிலைப்பாடு. இதனை நியாயப்படுத்துவதற்கு அரசாங்கம் சொல்லிக்கொள்ளும் காரணம் இதுதான். இந்த சட்டம் பாதுகாப்பான ஒன்லைன் சூழலை உருவாக்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.

தேசிய பாதுகாப்புக்கு வரக்கூடிய அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, நிகழ்நிலை தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இந்த சட்டமூலம் அவசியம் என்று அரசாங்கத் தரப்பினர் வாதிடுகின்றனர். இதன்மூலமாக சிங்கள மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் ஆதரவைத் தக்கவைக்க முடியும் என அரசாங்கம் நம்புகின்றது. இலங்கையின் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த நற்பெயரை இந்த சட்டம் மேம்படுத்தும் அதேவேளையில், வெளிநாட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்க்கும் என்ற கருத்தும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்றது. அதாவது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியம் என அரசாங்கம் சொல்கிறது.

அரசின் அச்சம் இதுதான்

நியாயமான போராட்டங்களை கொடூரமாக ஒடுக்குவதற்கும், அந்த ஒடுக்குமுறையை சட்டத்தின் மூலமாக நியாயப்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு சில சட்டமூலங்கள் அவசியமாக இருக்கின்றது. தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது. இப்போது, முழு நாட்டையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அதற்கு மேலாக நிகழ்நிலைக் காப்புச் சட்டம் அரசாங்கத்துக்குத் தேவையாக இருக்கின்றது. நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசாங்கத்து எதற்காக இப்போது தேவையாக இருக்கின்றது?

2022 இல் வரலாறு காணாத மக்கள் புரட்சி ஒன்றை இலங்கை சந்தித்தது. சிறிய பொறியாக உருவாகிய அந்தக் கிளர்ச்சி அரசாங்கத்தையே மாற்றியமைத்து, ஜனாதிபதி நாட்டைவிட்டுத் தப்பியோடும் ஒரு நிலையை ஏற்படுத்தியது. இவ்வாறான ஒரு நிலை மீண்டும் வரக்கூடாது, என்ன விலையைக் கொடுத்தாவது அதனைத் தடுக்க வேண்டும் என அரசாங்கம் முற்படுகின்றது. இப்போது, கடுமையான பொருளாதார, அரசியல், சமூகப் பிரச்சினைகளை நாடு எதிர்கொள்கின்றது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கம் கொடுக்காதததால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பபான ஒரு நிலையும் காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில், தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, தமது பாதுகாப்புக்காக, தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்காக, தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்திருக்கின்றது.

“இது மக்களின் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்படுகின்றது என்று அரசாங்கம் சொல்லிக்கொண்டாலும், இதனால் மக்கள்தான் பாதிக்கப்படப்போகின்றார்கள். அரசாங்கம் தன்னைப் பாதுகாப்பதற்காகத்தான் இதனைக் கொண்டுவருகின்றது” எனச் சுட்டிக்காட்டுகின்றார் வெகுஜனப் போராட்டங்களுக்கான மக்கள் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல்.

கருத்து உரிமை மீறல்

ஐ.நா அமைப்புகளும் சர்வதேச உரிமைக் குழுக்களும் இச்சட்டத்தின் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிற அடிப்படை உரிமைகளை மீறுவது குறித்து கவலை தெரிவித்தன. இணையவழி பாதுகாப்புக்கான சர்வதேச தரங்களுக்கு இணங்குவது, உலகளாவிய டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இலங்கையின் ஒருங்கிணைப்புக்கு இடையூறாக உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

அரசியலிலும், சமூகத்திலும் சமூக ஊடகங்கள்தான் இப்போது ஆதிக்கம் செலுத்திவருகின்றன. உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற ஊடகமாகவும், சமகால நிகழ்வுகளை விமர்சத்துக்குள்ளாக்கி மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்வதில் அதிகளவுக்குச் செல்வாக்கைச் செலுத்துபவையாகவும் சமூக ஊடகங்களே இருக்கின்றன. இதனூடாக கருத்துருவாக்கிகள் பலரும் உருவாகியிருக்கின்றார்கள்.

இந்த சமூக ஊடகங்களை, சமூக ஊடக செயற்பாட்டாளர்களை – அதாவது கருத்துருவாக்கிகளை முடக்குவதன் மூலம் தமக்கு எதிராக உருவாகக்கூடிய கருத்துக்களை குழிதோண்டிப் புதைத்துவிட வேண்டும் என அரசாங்கம் நினைக்கின்றது. இதனை சட்ட ரீதியாகச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு சட்டம் ஒன்று தேவை. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் நிகழ்நிலைக் காப்புச் சட்டம். இது சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களை உளவியல் ரீதியாகப் பாதிப்பதாகவும் இருக்கின்றது.

ஏனெனில், இது மக்களுடைய கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், விமர்சிக்கும் போன்ற அனைத்தையும் தடுக்கின்றது. சமூக சிந்தனையாளர் ஒருவர் தான் சிந்திக்கின்ற ஒரு விடயத்தை எழுத்தில் கொண்டுவருவதையும், அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதையும் இது தடுகின்றது. அதாவது, மக்கள் தமது சிந்தனைகளைக் கூட சிறைவைக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், அவர் பத்து லட்சம் ரூபா வரையிலான தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். அல்லது, நீண்டகால சிறைவாசத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்த இரண்டுமே சாதாரண சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்புடையவையல்ல. ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்ற குழு ஒன்றுதான் எது குற்றம் என்பதைத் தீர்மானிக்கப்போகின்றது.

எதிர்கட்சிகளின் நிலை
முக்கியமான தேர்தல்களை நாடு எதிர்கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சட்டம் கொண்டுவரப்படுவது ஜனநாயகத்துக்கு முரணானது, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றன. அதாவது தேர்தல் காலத்தில் சமூக ஊடகங்கள் மூலமாக வரக்கூடிய விமர்சனங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்பது அவர்களது கவலை. நியாயமானதுதான்.

அதேபோல, மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உலக சாடுகள், சர்வதேச அமைப்புக்கள் என பல்வேறு தரப்புக்களிலிருந்தும் அரசாங்கத்தை நோக்கி கண்டனக் கணைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜெனிவா கூட்டத் தொடரும் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், அரசாங்கத்துக்கு இது நெருக்கடியைக் கொடுப்பதாகத்தான் இருக்கின்றது. உயர் நீதிமன்றம் கூட அரசியலமைப்புக் முரணான சில விடயங்கள் இதில் உள்ளதாகக்கூறியிருந்தும் கவனிக்கத்தக்கது. அதனால்தான், இந்த சட்டத்தில் திருத்தங்கள் சிலவற்றைச் செய்வதற்குத் தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. ஆனால்,எந்தகையில் அந்தத் திருத்தங்கள் அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிலைமைகளைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் சொன்ன கதையாகவும் இது இருக்கலாம்.

தமிழர்களும் இலக்காவார்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தமிழர்களை – அவர்களுடைய போராட்டத்தை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட ஒன்று. ஆனால், பின்னர் அது சிங்களவர்கள் மீதும் பாய்ந்தது. அது போல, இந்த நிகழ்நிலை காப்புச் சட்டம் தமிழ் மக்கள் மீதும் பாயும். கடந்த காலங்களில் காணிகளை, உறவுகளை, உரிமைகளை இழந்த மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இதனைவிட, நில ஆக்கிரமிப்பு, பௌத்த மயமாக்கல், விகாரைகளை அமைத்தல் என்பன தொடர்கின்றன. இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் உருவாகும் போது அவை சமயத்துக்கு எதிரான போராட்டம் எனக் காட்டப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்பவர்கள், அதற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிடுபவர்கள் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக்கப்படலாம். அதாவது தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள், பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகளை எதிர்க்கும் போது, அவை மதத்துக்கு எதிரான செயற்பாடாக வரைவறுக்கப்படலாம். அதன்மூலம், இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுபவர்களை இலகுவாக சிறைக்குள் தள்ளக்கூடிய ஆபத்து உள்ளது.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு கேள்வி புலம்பெயர்ந்து வாழும் வெற்றிமணி வாசகர்களுக்கு எழலாம். அதாவது சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விர்சிக்கும் வகையிலான அல்லது சர்ச்சையான தமது பதிவுகளுக்கு என்ன நடக்கும் என அவர்கள் கேட்கலாம். இலங்கையின் எல்லைக்குள் நீங்கள் இல்லை என்பதால், இந்த சட்டம் உங்கள் மீது பாயாது. ஆனால், தாயகத்தில் உள்ளவர்கள் யாராவது அதனைக் பகிர்ந்துகொண்டால், அவர்கள் மீது சட்டம் பாயும்!

648 total views, 4 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *