“வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா! ‘சிறு துளி பெருவெள்ளம்’
- பிரியா இராமநாதன் இலங்கை.
“வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா “வரவு எட்டணா செலவு பத்தணா .. அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தனா … , வரவுக்கு மேலே செலவுகள் செய்தால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது ‘ !
ஆம், இந்த பாடல் வெளியாகி சுமார் ஐம்பத்தெட்டு ஆண்டுகள் கடந்துபோயிருந்தாலும் .. பாடலின் தத்துவம் மட்டும் இன்றுவரை நமக்கு சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் மகிமையினை சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றது ! சிக்கனம்,சேமிப்பு என்கிற இரண்டும் இல்லாத வாழ்க்கையின் விளைவு என்னவாகும் என்பதை சிரிப்போடு சிந்திக்க வைக்கும் சினிமா பாடல்தான்இது.
நவீனமயமான இன்றைய உலகில் ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் வீண்செலவு செய்வோர் அதிகம். அடுத்த வர்களுக்கு தாங்கள் குறைவில்லை என்று காட்டவே தேவையற்ற வீண் செலவுகளை செய்யும் வழக்கம் எம் சமூகத்தில் உள்ளது. ஆனால் அதன் விளைவு எமக்கு ஒருபோதுமே சாதகமாகஅமையப்போவதில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட் போடும் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலைவனுக்கோ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்துவதுதான் மிகவும் பாதுகாப்பானது. அதிலும், எதிர்காலத்துக்கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கியமானது. அந்த சேமிப்புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என்னென்ன என்பதுபற்றியெல்லாம் பேச நிறையவே இருக்கின்றது.
சேமிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவசியமான ஓன்று. நாம் வாழும் இந்த அவசர உலகில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நம் அனைவருக்குமே தெரியும். பணம் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. வாழ்வதற்கு பணம் தேவை என்ற நிலையில் இருந்து பணம் இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிலையில் இருக்கின்றோம். அதனால் சேமிப்பு பழக்கமும் சிக்கனமும் இருந்தால் தான் ஒருவர் வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல பொருட்களின் விலை வரிசையாக உயர்ந்து கொண்டே வருகிறது. சில பொருட்கள் விலை எவ்வளவுதான் உயர்ந்தாலும் அதை கட்டாயம் வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைகளில் இருக்கிறோம். சிக்கனத்தினை கடைப்பிடித்து சேமிப்பினை பெருக்கும்போது , அந்த சேமிப்பு நமக்கு பலவகையில் முதலீடாக மாறக்கூடியது . இதனால்தான் வருமானம் குறைவாக இருக்கிற்றபோதிலும் அதற்குள் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதனை முதலில் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.
நம்மில் சிலர் இருப்போம், சேமித்தால் பெரும் தொகையாக சேமிப்போம், இல்லை என்றால் சேமிப்பு பக்கமே ஒதுங்க மாட்டோம் என்று நினைத்துக்கொண்டிருப்போம். அப்படி இல்லாமல் ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்பதை மனதில் வைத்துக்கொண்டு முதலில், சிறிய தொகையாக இருந்தாலும் தவறாமல் சேமிக்கத் தொடங்குவது நல்லது. காலப்போக்கில் சேமித்த பணத்திலிருந்து கொஞ்சம் எடுத்து பிறவற்றில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும்போது அதன் விளைவு நம்மை மென்மேலும் சேமிப்பினை நோக்கி ஈர்க்கச் செய்யும் என்பது என்பது கண்கூடு. இந்த உலகில் பிறவி பணக்காரர்களாக பிறப்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால் உழைப்பாலும் சேமிப்பாலும் உயர்ந்தவர்களே இந்த உலகில் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் நாம் அனைவரும் சிறிய தொகையாக இருந்தாலும் அதை சேமிக்க வேண்டும்.
இங்கே நாம் மற்றுமோர் விடயத்தினையும் கவனத்தில் கொள்வது நல்லது ,சேமிப்பு என்று சொன்னவுடன் நாம் முதலீடுகளை நோக்கி மட்டுமே சிந்திக்க தொடங்குவோம். ஆனால், அப்படி சேமிக்க நினைக்கும் நமக்கு குடும்பச் சூழல் காரணமாகவோ அல்லது அவசரக் காலத்திற்காகவோ வாங்கிய கடன் மறந்திருக்கும். சேமிப்பைத் தொடங்கும் நபர் முதலில் மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் கடன்களை முடிப்பது. அல்லது கடனை சீக்கிரம் முடிப்பதற்கான ஒரு திட்டத்தை வகுப்பது. மாதத் தவணைகள் போன்ற அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள், ஈட்டு நகை கடன்கள் போன்றவற்றுக்கான கடன்களை செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதும், முடிந்தவரையில் அவ்வாறான கடன்களை தவிர்ப்பதும்கூட நமக்கு பணத்தினை சேமிப்பதற்கான பாதையாக மாறிவிடும் என்பது அனுபவபூர்வ உண்மை.
உடலில் வலிமை இருக்கும் வரையில் தான் எம்மால் உழைக்க முடியும் இளமை பருவம் கடந்து விட்டால் உழைப்பது கடினமாகி விடும். வாழ்வின் எல்லா நேரங்களிலும் வேலைவாய்ப்பு வருமானம் என்பது ஒரே போல இருக்காது. இக்கட்டான சந்தர்ப்பங்களில் பிரச்சனைகளில் இருந்து வெளிவர நமக்கு யாரும் உதவாத சந்தர்ப்பங்களில் நமது சேமிப்பு எமக்கு உதவியாக இருக்கும். இளமைக் காலத்தில் நாம் சேமித்து வைப்பதனால் முதுமைக் காலத்தில் அது நமக்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமன்றி கோடையில் தான் நீரின் அருமை தெரியும் என்று சொல்வார்கள். அதுபோல தான் மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் தோன்றும் போது தான் சேமிப்பின் அருமையும் புரியும். அதனால் நம் எதிர்காலத்திற்காக சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைப்போம்
579 total views, 2 views today