அச்சக் கலாச்சாரம் – Culture of fear

ரூபன் சிவராஜா – நோர்வே

சமூக ஊடகங்களில அவதூறு பரப்புவதும் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவதும்; அதிகரித்துவருகின்றன. நேர்மையாகவும் அறிவார்ந்தும் சிந்திப்பவர்கள், மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் இத்தகைய செயல்களைச் செய்யமாட்டார்கள். இத்தகையோரின் இத்தகைய இழிசெயல்கள் துளியும் பொருட்படுத்தத் தேவையற்றவை. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள இவர்களின் உளவியலையும் நோக்கங்களைக் குறித்தும் பார்ப்பது பயனுள்ளது.

இது சமூக ஊடகங்களின் வரவுக்கு முன்பிருந்தே நிலவி வருகின்ற போக்குத்தான். ஆனால் சமூக ஊடக வரவிற்குப் பின்னர் புற்றீசல் போல் அல்லது கிருமி போல் பல்கிப் பெருகிப் பரவியுள்ளது இந்த அவதூறுக் கலாச்சாரம். தமிழ்ச் சூழலில் மொட்டைக் கடிதம் இதன் தொடக்கமாகக் கொள்ளக்கூடியது.

இதன் நோக்கம் பல்வேறுபட்டது. தம்மோடு முரண்படுபவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய சூழலில் அதிகாரத்தைக் கட்டிப்பிடிப்பதில் முனைப்பாக இருப்பவர்கள் இதில் அதிகம் ஈடுபடுகின்றனர். தமக்கு ஜால்ரா போடும் சில்லறைகளைத் தூண்டிவிட்டும் முகநூல், வைபர், வாட்ஸ்அப் பொன்ற இன்னபிற சமூக ஊடகக் குழுமங்களில் கீழ்த்தனமான தனிமனித தாக்குதல்களிலும் அவதூறுகளைப் பரப்புவதிலும் கூச்சமின்றி ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு சமூகம் எத்தகைய பிறழ்வுக்குள்ளும் சிதைவுக்குள்ளும் சென்றுகொண்டிருக்கின்றது என்பதற்கான எடுத்துக் காட்டுகளில் இது முக்கியமான அம்சம்.

அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான கெடுநோக்குடன் அச்சக் கலாச்சாரத்தினை (Culture of fear ) உருவாக்குகின்ற போக்கு அரசியலில், வேலைத்தளங்களில், நிறுவனங்களில் நிலவுகின்ற ஒன்றுதான்.

வேலைத்தளங்களிற் தொழிலாளர்கள் இப்படியான பயக்கலாச்சாரத்தினால் தமது அதிருப்திகளையும் தலைமைக்கு எதிரான கருத்துகளையும் வெளிப்படுத்தத் தயங்கும் நிலை திட்டமிட்டு ஏற்படுத்தப்படுவதுண்டு.

மனிதர்களின் உளவியலை ஒருவகைப் பய உணர்வுக்கு உட்பட்டதாக வைத்திருப்பதற்கு அதிகார சக்திகள் கைக்கொள்கின்ற உத்திதான் இந்தப் அச்சக் கலாச்சாரம். எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்ற பயத்தினால் வெளிப்படையாகத் தமது கருத்துகளைச் சொல்வதற்குத் தயங்கித் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளவைப்பது இதன் இலக்கு. இந்த அச்சநிலை மாற்றம் விரும்புவோரைக் கட்டுப்படுத்தும் என்பதும், ஏன் வீண்சோலி என ஒதுங்க வைக்கும் என்பதும் இவர்களின் நோக்கமாகும்.

அவதூறு பரப்பித் தனிமனித தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீதுள்ள ஒரு பொதுக்குணம் எந்தவொரு வியடத்தையும் கருத்து ரீதியாக எதிர்கொள்ளவே மாட்டார்கள். எதிர்வினையாற்ற மாட்டார்கள். திரும்பத் திரும்ப அவதூறுகள், பொய் பரப்புதல், தனிப்பட்ட தாக்குதல்கள், இழிவுபடுத்தல்கள், வசைபாடல்கள், என்பதாகவே அவர்களின் அணுகுமுறை இருக்கும்.

இது தனிமனிதர்களை இலக்கு வைத்ததாகவும் எதிர்க்குரல் எழுப்புபவர்களைக் கூட்டாக இலக்கு வைத்ததாகவும் நடாத்தப்படுகின்றது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் தனிமனிதர்கள் மட்டுமல்ல, நிறுவனங்களும் தமக்கு ஆதரவாகச் செயற்படக்கூடிய உஷார் மடையர்களை வைத்தும் இச்செயல்களைச் செய்துவருகின்றனர்.

மட்டுமல்லாமல் பாலியல் ரீதியான வசைகள், அண்களென்றால் பெண்களோடும் பெண்களை ஆண்கனோடும் பாலியல் ரீதியாகத் தொடர்புபடுத்திப் வதந்திகளைப் பரப்புதல் எனவாக அடிப்படை மனித நாகரீகமற்று பிறழ்வு மனநிலையுடன் தாக்குதல்களை மேற்கொள்வது இவர்களுடைய பாணி.

முரண்பாடுகளைக் கருத்தியல் ரீதியாக முன்வைப்பது முக்கியமானது. விவாதங்களும் கருத்துகளும் தனிநபர் தாக்குதல்களாக வெளிப்படுவதும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்துவதும்; அநாகரிகமானது. அவை எந்தவிதத்திலும் ஏற்புடையவையல்ல. தனிபட்ட தாக்குதல்கள் மூலமும் அவதூறுகளைப் திட்டமிட்டமுறையில் பரப்புவதனூடாகவும் சம்பந்தப்பட்டவர்களையோ அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையோ அவமானப்படுத்துவது அனுமதிக்கக்கூடாத அணுகுமுறை. கடுமையான கண்டனத்திற்குரியவை.

406 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *