எனக்கு மட்டும் ஏன் இப்படி?

-பொலிகையூர் ரேகா – இங்கிலாந்து.
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்ற கேள்வியைக் கேட்காமல் வாழ்க்கையைக் கடக்காதவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அப்படி அல்ல் அனைவருக்கும் எதோவொன்றோ பலவோ ஏற்க முடியாதவை வாழ்வில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. புன்னகைக்குள் கண்ணீரை மறைத்தபடி சிலர் அதை இலகுவாகக் கையாளப் பழகிவிடுகிறார்கள். சிலர்தான் பிறர் வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்த்து தம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கண்ணீரும் கவலையுமாய் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறிப்போகின்றார்கள்.
அதுவும் இன்றைய சமூக வலைத் தளங்களில் போடப்படும் பதிவுகளெல்லாம் தாம் மிக நன்றாக இருக்கின்றோம் என்பதைப் படங்களோடு பறைசாற்றுவதாகவேர் கடவுள் தமக்கு மட்டுமே தீங்கிழைத்துவிட்டார் எனக் கண்ணீர் வடிப்பதாகவோ அமைகின்றது. இந்த நடிகர்களின் வாழ்வியலில்தான் ஒப்பீடு தோன்றுகின்றது. ஆற்றாமை பெருகுகின்றது.யாரோவொருவர் வாழும் வாழ்க்கை தமக்குக் கிடைக்காமல் போனதாய் வருந்துபவர்களுக்குத் தம் வாழ்க்கையும் வேறு யாரோ ஒருவருக்குக் கனவாக அமைந்திருக்குமென்ற எண்ணம் தோன்றாமல் போய்விடுகின்றது.
அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவர் முகநூலில் தம் உறவினரின் படங்களைக் காட்டி அவர்கள் மிகவும் மகிழ்வாக இருக்கின்றார்கள், எல்லா இடங்களுக்கும் செல்கின்றார்கள்; கடவுள் அவர்கள் வாழ்வை ஆசிர்வதித்துவிட்டுத் தன் வாழ்க்கையை மட்டும் இப்படிக் கவலையிலேயே மூழ்கடித்துவிட்டதாகக் கூறினார். அவர் கூறிய அதே உறவினர்கள் எனக்குத் தெரிந்தவர்கள்.கடன்சுமை, வேலைப் பழுவின் காரணமாக, ஒரு மாற்றத்திற்காகத் தாம் விடுமுறை சென்றதாகவும் கூறியிருந்தார்கள். மேலோட்டமாகப் படங்களைப் பார்ப்பவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். தம்மை விடப் பிறர் நன்றாக இருப்பதாகவும் தாம் மட்டும்தான் உலகிலுள்ள அத்தனை துன்பங்களையும் அனுபவித்து வாழ்வை இழந்துவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள்.ஒவ்வொருவரும் தமக்கான வாழ்வின் இடர்களை ஏதோவொரு விதத்தில் மாற்றியமைக்க முனைகின்றார்கள். இது புரியாமல் அடுத்தவன் போல் தம் வாழவில்லையே எனப் பலர் அங்கலாய்த்துக்கொள்கின்றனர்.
வாழ்க்கை என்பது புதிர்களின் கூட்டல்.விடை காணத் தெரிந்தவர்கள் அவற்றிலிருந்து இலாகவமாக வெளி வருகின்றனர். விடை காண முயற்சிப்பவர்களும் ஏதோவொரு வகையில் வந்துவிடுகின்றனர். எனக்கு மட்டும் இத்தனை சிக்கலான என எண்ணி எண்ணியே சிக்கல்களைப் பெரிதாக்குபவர்கள்தான் எனக்கு மட்டும்தான் எல்லாத் துன்பங்களுமே எனத் தம் சிக்கல்களைக் கடைவிரிக்கின்றனர். சிக்கல்களைக் கையாளத் தெரிந்தவர்கள் அதற்கான விடைகளை மட்டுமே காட்சிப்படுத்துகின்றனர். வெளியுலகின் கண்களுக்கு அவர்களுக்கு நல்லதே நடப்பதாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது.
வாழ்க்கையைக் கையாளத் தெரிந்தவர்கள் துன்பங்களிலும் புன்னகைக்கப் பழகிவிடுகிறார்கள்.கையாளத் தெரியாதவர்கள் கேள்விகளோடு துன்பக் கடலில் மூழ்கிப் போகின்றார்கள்.
ஆர்ப்பரித்து மகிழத் துடிக்கும் வாழ்வில் தொடங்கி; ஆளரவமற்ற ஒரு பகுதியில் சுருக்கிக்கொள்ளவே கற்றுத் தரும் இந்த “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது ?” என்ற கேள்வி.
எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கின்றது
அதைக் கையாளப் பழகியவர்கள் தங்கள் நற்பேறுகளை மட்டும் வெளியே காட்டிக்கொள்கின்றார்கள் அல்லது தாம் நன்றாக இருப்பதாகக் கூறி நடித்துக்கொள்கின்றார்கள் அவ்வளவே.
எந்தவொரு ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்தாலும் உடைந்துவிடாமல் நம்மை அடுத்த தாக்குதலைத் தாங்கும்வண்ணம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வாழ்க்கை அத்தனை இலகுவானதல்ல. இந்த உலகத்தில் நாம் ஏதோவொரு காரணத்துக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றோம். நமக்கு நடக்கின்ற அனைத்தும் அதற்கான தயார்படுத்துதலாக இருக்கலாம்.
உடைந்து உடைந்து அதன்பின் உடைந்துபோக எதுவுமேயில்லையெனும்போது பிறக்கும் பக்குவம் எத்தனையோ வெற்றிகளின் முன்னோடியாக அமையும்.
நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விக்குப் பின்னரான துயரில் நீங்கள் அறியாமலே பல நன்மைகள் ஒளிந்திருக்கலாம். அவற்றின் மூலமான படிப்பினைகள் உங்களைப் புடம் போடலாம்.
கேள்விகளோடு தளர்ந்துவிடாமல் பதில்களாய் செயல்படுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில். துயர்களின் கைகளிள் உங்களைத் தத்துக் கொடுக்காமல் “எனக்காகவே என் நன்மைக்காகவே இப்படி நடக்கிறது” என்று துணிந்து ஏற்கப் பழகுங்கள். உங்களுக்காகவே எல்லாம் நடக்கும். உங்களுக்கான பாதைகள் பிறக்கும்.
457 total views, 6 views today