தையலை உயர்வுசெய் !
பெண்களின் சக்தி நிலையை நன்கு உணர்ந்தறிந்த கவிஞராக பாரதி போற்றப்படுவதற்குப் பல கவிதைகள் சான்றாகி இருப்பது அனைவரும் அறிந்ததே.
பெண் விடுதலை வேண்டும் என்று வேட்கை கொண்டவர் காவலன் பாரதி.பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால் பின் இந்த உலகினில் வாழ்க்கை இல்லை எனப் பெண்ணின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தார், அடிமைப்படுத்தப்பட்டு ஆதரவற்று நிற்கும் பெண்களுக்காக கண்ணீர் வடித்தார். தன்னைப் போல் பிறரை மதித்தவர். உயிர்கள் அனைத்தையும் தன் உயிர் என நினைத்தவர். உயிரற்றவற்றையும் தன் இனமாய் எண்ணியவர். பேதமற்ற பாரதிக்கு தன் நாட்டின் பெண்கள் எங்கோ ஒரு பிஜித்தீவில் படும்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தினம் தினம் செத்து மடியும் அப்பெண்களுக்காக இறைவனிடம் மன்றாடுகிறார். பெண்ணென்று சொன்னால் பேய் கூட இரங்குமே , கடவுளே உனக்கு ஏன் இரக்கம் வரவில்லை. ஹே! வீரகாளியே உடனடியாக அவர் படும் துன்பத்தை விடுவிப்பாய் என்று பராசக்திக்கு ஆணை விடுக்கிறார்.
ஆக,தன் முன் இருக்கும் பெண்ணுக்கோ அல்லது தன்னை சூழ்ந்துள்ள பெண்ணுக்கோ அல்லது தனக்காக உதவும் பெண்ணுக்கோ மட்டும் அல்ல, எங்கோ ஒரு பெண்ணிற்கு அவலம் நேர்ந்தாலும் குரல் கொடுக்கும் ஆண்கள் நிறைந்த சமுதாயம் வேண்டும்.
“வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே”
பெண்களை அடக்கித் தன் கட்டுக்குள் வைக்காமல், அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல், அவர்களது திறனைக் கொல்லாமல் விட்டால் எவ்வகையான சிறப்பினை வெளிப்படுத்துவர் என்பதனை இவ்வரிகளினூடு பார்க்கத் தோன்றுகிறது.
பெண்களின் வல்லமையை அடக்கி ஆழாமால் அவர்களைச் சுதந்திரமாக விடும் போது, தமக்கான சிறப்பான இடத்தில் தாமாகவே சென்று அமர்ந்திருப்பர். தமது மிகச் சிறந்த தன்மையை வெளிப்படுத்துவர். அதுமட்டுமா , தம்மை சூழ்ந்தோர் அனைவரையும் இன்பக் கடலில் மூழ்க வைப்பர். அடடா ! ஸ்வர்க்க லோகத்தில் இருந்து வந்த தேவதையோ இவள் என்று வியக்கும் வகையில் அவளருகில் இருக்கும் ஆணுக்கும் அமரசுகத்தை காட்டவல்லவள். ஆனால் , இவையாவும் சாத்தியமாக அது வேடர் வராத திருநாளாக இருக்க வேண்டும்.
பெண்களை அடக்கி ஆழ்வதை முற்றாக எதிர்த்தவர் பாரதி.
” வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை குனிந்தார் ” ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டு அறிவு வளர்த்திட பெண்ணின் விடுதலைக்கு வேட்கை கொண்டார் பாரதி.
பெண்ணின் காதலைப் போற்றியவர் காதலன் பாரதி
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.
இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம்
உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி.
பெண்குயில் பாடும் பாடல் வரிகளை பாரதி எப்படி செதுக்கி இருக்கிறார் பாருங்கள். எதனை எவ்வாறு எப்படி சொல்ல வேண்டும் என்ற தெளிவும், நயமும், ரத்தினச்சுருக்கமும் பெண்களின் தன்மை என்பதனை சுட்டிக் காட்டும் விதமாக அட்சரம் அளந்து காணப்படுவதோடு ஆழ் பொருள் தருவதாக இப்பாடல் அமைகிறது. “மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்”
கலி அழித்து, களி கொண்டு வாழ்வதற்கு பெண்ணின் காதல் பெருந் துணையாகிறது.
பெண்ணின் காதலைப் போற்றிப் பாடினார். பெண்களின் மீது காதல் கொண்டு , பதிலுக்கு அந்தப் பெண்களிடமிருந்து காதல் கிடைக்கப்பெற்ற ஆண்களே தேவலோக பெருஞ்சுக வாழ்வினை கூட சாதாரணம் என்று சொல்லும் உயர் வாழ்வினை அடைந்தவர்கள் என்று மாதர் தம் காதலின் மஹோன்னதம் காட்டி , பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்றது உன் முகம் அன்றிப் பிறிதொன்று இல்லை என நெடும் பண்டைக்காலம் முதல் நேர்ந்து வரும் காதலைப் போற்றிப் பாடிய காதலன் பாரதி பெண்களின் பெருங் காதலன்.
பெண்ணை தெய்வமெனக் கொண்டாடியவர் விண்ணவன் பாரதி.
“பெண்மை அழகொன்று வந்தது கண்முன்பு
கன்னி வடிவமென்றே – களி
கண்டு சற்றே அருகில் சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா – இவள்
ஆதி பராசக்தி தேவியடா”
“வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை
அழகென்னும் தெய்வம் தான் அது என்றே அறிந்தேன்.”
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம் என்றால்
மனையாளும் தெய்வம் அன்றோ ?
காதல் செய்யும் மனைவியே சக்தி கண்டீர்
தாய்க்கு மேல் இங்கே ஊர் தெய்வம் உண்டோ ?
ஆக, பெண் எந்த பருவத்தில் இருந்தாலும் தெய்வமாகவே போற்றப்படுகிறாள்.இவ்வாறு ஒரு பெண் தாம் பெண்ணாகப் பிறந்தமைக்கான பெருமையை உணர்த்தியவன் பாரதி . ஆதலால் தான் பெரும்பாலும் தாம் விரும்பும் ஆணை பாரதியாகவே தரிசிக்கிறார்கள் பெண்கள். மானிட வாழ்வில் துன்பக் கடலில் உழன்று தவிக்காமல் இன்ப புரியைக் காட்டித் தந்த பாரதி காலம் முழுவதும் பெண்களின் காதலனாய், காவலனாய், கடவுளாய், யாதுமாகி வாழ்ந்திருப்பார். வாழ்விப்ப
378 total views, 2 views today