காட்டாற்றுக்கு ஜி.பி.எஸ் தேவையில்லை. வாழ்க்கை என்பது இன்னொருவர் இடுகின்ற பாதையில் நடப்பதல்ல, நமக்கான பாதையை உருவாக்கி நடப்பது !
சுதந்திரப் பெண்கள்
- சேவியர். தமிழ்நாடு
பெண்கள் பிரபஞ்சத்தின் மையம் ! பெண்கள் உறவுகளின் மையம் ! பெண்கள் மாற்றத்தின் மையம் ! பெண்கள் இல்லையேல் பூமி இல்லை, வளர்ச்சி இல்லை, மனுக்குலம் இல்லை ! சரி, எல்லாமே பெண்களால் இருக்கிறது ! பெண்களுக்கு எல்லாம் இருக்கிறதா ? அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தின் நீட்சி இன்றைக்கும் நிலவுகிறதா ? அல்லது பெண்கள் தங்களுக்கான சுதந்திர வீதிகளில் தான் பறந்து திரிகிறார்களா ?
பழைய காலங்களில் ஆணாதிக்கம் கோலோச்சியது. பெண்கள் அடிமைகளாய் இருந்தார்கள். ஆண்கள் அவர்களை அடக்கி ஆண்டார்கள். பெண்களுக்கென உரிமைகள் இருக்கவில்லை…. இப்படியெல்லாம் நீட்டி முழக்கும் பல செய்திகளை நாம் வாசித்திருப்போம். அவையெல்லாம் பிற இன மக்களுக்கு வேண்டுமானால் சரியானதாய் இருக்கலாம். ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாழ்ந்த மூத்த குடியான தமிழ் இனத்தின் வரலாறு அப்படி இல்லை !
தமிழ்ப் பெண்கள் வரலாற்றின் தொடக்கத்திலேயே வரலாற்றுப் பெண்மணிகளாகத் தான் உலவிக் கொண்டிருந்தார்களே தவிர, அடிமைகளாய் இருக்கவில்லை. ஆண்களுக்கு இணையான வீரம் அவர்களிடம் இருந்தது. முறத்தால் புலி விரட்டிய கதையை நாம் எத்தனையோ ஆயிரம் முறை கேட்டிருப்போம். புலியை எதிர்த்து நிற்கின்ற துணிச்சல் ஒரு புறம். அதை விரட்ட எனக்கொரு முறமே போதும் என்கின்ற தன்னம்பிக்கையின் உச்சம் மறுபுறம். நினைத்தாலே சிலிர்க்க வைக்கின்ற வீரம் அன்றைக்கு பெண்களிடம் இருந்தது. இன்றைக்கு கையில் ஒரு துப்பாக்கி இருந்தால் கூட புலியை நெருங்கும் துணிச்சல் நமக்கு வருமா ? எவ்வளவு தான் வலிமையான புஜ பாராக்கிரம சாலியானால் கூட வருமா ? இல்லை என அடித்துச் சொல்லலாம் !
வீரத்தைப் போலவே செல்வமும் அன்றைய தமிழ் தேசத்தில் அபரிமிதமாகவே இருந்தது. தானியத்தைக் கொத்த வருகின்ற பறவையை நோக்கி ஒரு பத்து ரூபா நாணயத்தை நாம் விட்டெறிய மாட்டோம். ஆனால் காதில் இருந்த காதணியையே கழற்றி பறவையை நோக்கி எறிகின்ற சங்க கால செல்வச் செழிப்பு வியப்பு. அந்த செல்வத்தைக் கையாள்கின்ற உரிமையும், திறமையும் பெண்களிடம் இருந்தது என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம் !
கல்வியிலும் பெண்கள் சிறந்து விளங்கியிருந்தார்கள். கல்வியில் சிறந்து விளங்கி பல செழுமையான இலக்கியங்களையும் படைத்திருக்கிறார்கள். இயல், இசை, கூத்து போன்றவற்றில் அவர்கள் கொடிகட்டிப் பறந்தார்கள். சங்க இலக்கியங்களில் நாற்பத்து இரண்டு பெண்பாற் புலவர்கள் பாடல்கள் இசைத்திருக்கின்றனர். அவர்களில் ஒளவையார், காக்கைப்பாடினியார், வெள்ளி வீதியார் போன்ற பெயர்களெல்லாம் இன்னும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.
உலகத்தின் மற்ற எல்லா நாகரீகங்களும் பெண்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளியிருந்த காலத்தில், தமிழ் சமூகம் அவர்களைத் தோளில் சுமந்து அழகு பார்த்திருக்கிறது.
பெண்கள் அரசியல் ஆளுமைகளாகவும் இருந்திருக்கிறார்கள். அரசவைகளில் நுழையவும் மன்னனுக்கு அறிவுரைகள் வழங்கவும். உயர் அதிகாரிகளுடன் நட்பு பாராட்டவும், அவர்களுக்கு ஆலோசனை சொல்லவும் பெண்கள் பலர் அன்றைக்கு இருந்தனர். தொண்டைமான் அதியமானுக்கு எதிராகப் போர் தொடுக்கத் தயாரானபோது அங்கே தூதுவராய்ச் சென்று ஒரு மாபெரும் போரை தனது இலக்கியப் புலமையினாலும், ஞானத்தினாலும் தடுத்து நிறுத்திய ஒளவையாரின் கதை அவற்றில் ஒன்று ! பெண்கள் வீட்டை ஆளவேண்டும், ஆண்கள் நாட்டை ஆளவேண்டும் எனும் கோட்பாடுகளெல்லாம் அப்போது இல்லை. அதியமான் மன்னனே ஒளவையை அழைத்து தூது அனுப்புகிறான். அந்த அளவுக்கு பெண்கள் மேலான இடத்திலே இருந்தார்கள்.
வீடுகளிலும் பெண்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார்கள். வீடு தேடி வருகின்றவர்கள் பகைவர்களாகவே இருந்தால் கூட அவர்களை சிறப்பாக வரவேற்கும் பண்புடையவர்களாக இருந்தார்கள். தினையறுத்து, மானிறைச்சியோடு சமைத்து விருந்தினருக்கு வழங்கிய சிறப்புப் பண்புகள் சங்க இலக்கியங்களில் உண்டு.
குடும்பத்தைக் கட்டியெழுப்புவதும், காதல் வாழ்க்கை வாழ்வதிலும் சங்க காலப் பெண்களுக்கு ஈடு இணை இல்லை எனலாம். தனக்குக் கணவனாக வரப் போகின்றவன் அழகாய் இருக்க வேண்டும், நீளமான மீசை வைக்க வேண்டும், பணம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அன்றைய பெண்கள் ஆசைப்படவில்லை. அவன் வீரனாக இருக்க வேண்டும், கற்பு நெறி பிறழாதவனாக இருக்க வேண்டும், அறத்தின் பால் வாழ்பவனாக இருக்க வேண்டும் என்றே ஆசித்தார்கள். காதலாகிக் கருந்துருகுவதும், கணவனை அன்பின் உயரிடத்தில் வைத்து மதிப்பதும் நேசிப்பதுமாக இருந்தார்கள். கற்பு நெறி தவறாதவர்களாகவும், ஒழுக்க நிலை விலகாதவர்களாகவும் இருந்தார்கள். தாயானபின் தனது மகன் வீரனாகவும், அறநெறி உடையவனாகவும், கல்வி கற்றவனாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார்கள். இப்படிப் பண்டைய தமிழ்ப் பெண்கள் உலக வரலாற்றுக்கே பாடம் எடுக்கிறார்கள்.
அதே நேரத்தில் சங்க காலத்தில் பரத்தமைப் பெண்களும் இருந்தார்கள். போர்களின் காரணத்தால் அடிமை நிலைக்கு ஆளானவர்கள் பரத்தமைக்குச் சென்றதுண்டு. அல்லது தாங்களாகவே விரும்பியும் அவர்கள் அந்த நிலையை அடைந்ததுண்டு. பரத்தமை கூட ஒருவித ஒழுக்கத்தோடு நடந்த காலம் அது என்பது வியக்க வைக்கிறது. அவர்களை உரிமை மகளிர் என்றும் சங்ககாலம் அழைத்தது.
இப்படி நீட்டி முழக்குவதற்குக் காரணம் நமது தமிழ் சமூகத்தின் பெண்மை என்பது ஆதிகாலம் தொட்டே சமூகத்தின் மையமாகத் தான் இருந்தது, சுதந்திரமாக, சமத்துவமாக, ஒத்திசைவாக வாழ்ந்தது என்பதைச் சொல்வதற்குத் தான். எனவே, ஏதோ பெண்கள் அடிமைகளாக இருந்தார்கள். நாங்க தான் அவங்களை வேலைக்கு அனுப்பி வைக்கிறோம். நாங்க தான் அவங்க ஜீன்ஸ் போட அனுமதிக்கிறோம். அவர்களுக்கான உரிமையைக் கொடுக்கிறோம் என ஆண்கள் பிதற்றாமல் இருக்கக் கடவர்கள்.
சங்க காலத்தில் ஆணாதிக்கக் கூறுகள் இல்லாமல் இல்லை, ஆனால் பெண்ணியத்தின் உயரிய விழுமியங்கள் அன்றைக்கு கணிசமாகவே இருந்தன. காலமாற்றம் தமிழ் சமூகத்திற்குள் ஏற்படுத்திய மாற்றங்கள் பெண்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது. அது பெண்கள் மட்டுமல்ல, தமிழ்ச் சமூக ஆண்களுமே அத்தகைய அலைக்கழிப்புக்கு ஆளானார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த பெண்கள் தினத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களை பழைய தமிழ்ச் சமூக மரபுகளுக்குள் அழைத்துச் செல்ல உதவுவது மட்டும் தான். காலம் காலமாக கூண்டில் அடைபட்ட புலியானது கானகத்தை மறந்து விடுகிறது. காலம் காலமாய் கூட்டில் பறக்கும் கிளி வானத்தை எட்டிப் பார்க்க அச்சப்படுகிறது. காலம் காலமாய் அடக்குமுறைக் கதைகளுக்குள் வளர்க்கப்படும் பெண் சமூகம் தங்களுடைய உண்மை இயல்பை மறந்து விடுகிறது.
பெண்களை அவர்களுடைய இயல்புகளுடன் வாழவிட்டாலே போதும். தங்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். காட்டாற்றுக்கு ஜி.பி.எஸ் தேவையில்லை. காற்றுக்கு கூகிள் மேப் தேவையில்லை. அதனதன் இயல்பை அறிந்து அவர்களை அனுமதித்தாலே போதுமானது.
இந்த பெண்கள் தினத்தின் என் அன்பு சகோதரிகளை வாழ்த்துகிறேன். உங்களிடம் இருப்பது பல்லாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து வருகின்ற சமத்துவச் சிறகு ! அந்த சிறகை விரித்து சமூகத்தில் மேலெழும்புங்கள். முறத்தால் எதிரியையும், அறத்தால் மனுக்குலத்தையும் சந்தியுங்கள். வாழ்க்கை என்பது இன்னொருவர் இடுகின்ற பாதையில் நடப்பதல்ல, நமக்கான பாதையை உருவாக்கி நடப்பது !
முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனில் முதலில் பின்னோக்கிச் செல்லுங்கள். சங்கப் பெண்களின் உயரிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள். அதையே கரம்பிடித்து வாழ்வில் வெல்லுங்கள்.
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.
செய்தி 02.
திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ் அணிய மற்றும் செல்போன் பயன்படுத்தத் தடை
இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உள்ள முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்து ஒன்று, திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ் அணிய மற்றும் செல்போன் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
முசாபர்நகர் மற்றும் சஹாரான்பூர் ஆகிய 2 மாவட்டங்களில்,முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் 10 கிராமங்களில் ‘திக்தாத்’ எனப்படும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நடைமுறையில் இருக்குமானால் வருந்ததக்கது.
572 total views, 6 views today