மனித இனத்தின் எதிர்காலம் ஏன் விண்வெளி ஆய்வில் உள்ளது?

பூமி வெப்ப மயமாதல் முதல் தொற்றுநோய்கள் வரை அந்நிய சவால்களை எதிர்கொள்ளும் இந்தக் காலகட்டத்தில், „விண்வெளி ஆய்வில் ஏன் நாம் ஆர்வம் கொள்ள வேண்டும்?“ என்கின்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு ஆண்டும், நம் சொந்த கிரகத்தில் மனிதக்குலத்தின் நிலைமை மேலும் மேலும் மோசமாகிறது. ஆனால், இவ்வாறான பிரச்சனையை எவ்வாறு எதிர்கொள்கிறது? இதற்காகிய தீர்வை நாம் எங்கே காணலாம்? அந்தத் தீர்வு நம் வளிமண்டலத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். விண்வெளி ஆய்வு என்பது மனித ஆர்வத்தின் சான்று மட்டுமல்ல, நம் வாழ்வாதாரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அவசியமான ஒன்றாகும். விண்வெளி ஆய்வு ஏன் இப்போது எப்போதையும் விட முக்கியமானது என்பதற்கான ஐந்து காரணங்களைப் பார்ப்போம்.

  1. வாழ்க்கையை மாற்றும் புதுமைகள்

முதலில், விண்வெளி ஆய்வு என்பது புதுமைத்திறனின் மையமாகும். இன்று நாம் சாதாரணமாகக் கருதும் பல தொழில்நுட்பங்கள் விண்வெளித் திட்டங்களிலிருந்து உருவானவை என்று சொன்னால் நம்புவீர்களா? ஜி.பி.எஸ் (GPS), இது Navigation என்று உங்கள் வாகனங்களில் உள்ள வழிகாட்டிக்குத் தேவையானது தொடக்கம் துல்லியமான வானிலை முன்னறிவிப்பு, சோலார் பேனல்கள் வரை இவை அனைத்தும் இல்லாத உலகத்தை கற்பனை செய்யக் கூட முடியாது. இவையெல்லாம் விண்வெளி தொழில்நுட்பம் நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதற்கான உதாரணங்கள் மட்டுமே. மேலும், விண்வெளியின் தனித்துவமான சூழ்நிலையில் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆராய்ச்சி, சுகாதாரத்தைப் புரட்சிகரமாக மாற்றவும், புதிய சிகிச்சைகளை வழங்கவும், மனித ஆயுளை நீடிக்கவும் வழிவகுக்கும் திறன் கொண்டது. உங்கள் வாழ்க்கையை மாற்றும் அடுத்த புதுமை ஸ்ட்ராட்டோஸ்பியருக்கு மேலே இருந்து வரக்கூடும்!

  1. விண்வெளித் தாக்குதல்களில் இருந்து தப்பித்தல்

இந்தப் பிரபஞ்சம் அழகானது ஆனால் மிகவும் ஆபத்தான இடமும் கூட. பூமியின் வரலாறு பேரழிவான சிறுகோள் தாக்குதல்களால் நிரம்பியுள்ளது. அடுத்த இவ்வாறான ஒரு சிறுகோள் தாக்குதல் நடக்குமா என்பது கேள்வி அல்ல, ஏனென்றால் அது உறுதியாக நடக்கும், எனவே அடுத்த தாக்குதல் எப்போது நடக்கும் என்பதுதான் உண்மையான கேள்வி ஆகும். விண்வெளி ஆய்வு அத்தகைய பேரழிவுகளைத் தடுக்க நமக்கு ஒரு போராடும் வாய்ப்பை அளிக்கிறது. ஹயாபுசா2 (Hayabusa 2) மற்றும் OSIRIS-RExஆகிய விண்வெளிப் பணிகளூடாக சிறுகோள்களை நோக்கிச் செய்யப் பட்ட பயணங்கள் மற்றும் நாசாவின் னுயுசுவு பணி போன்ற சிறுகோள் திசை திருப்பு தொழில்நுட்பத்தின் சோதனைகள், மனித இனத்தை விண்வெளி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான வழிவகுத்து வருகின்றன. நம் இனத்தின் உயிர்வாழ்வு ஒரு கொடிய சிறுகோளைத் திசை திருப்பும் நம் திறனைப் பொறுத்தே இருக்கலாம்.

  1. இறுதி காப்பு திட்டம்

பூமியில் 8 பில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், உலகளாவிய பேரழிவு நம் இனத்தை ஒழித்துக்கட்டும் அபாயம் தொலைதூரமானதாக இல்லை. மற்ற கிரகங்கள் அல்லது துணைக்கோள்களில் குடியேற்றம் செய்வது என்பது நமது மனிதக்குலத்தை அழிவிலிருந்து காக்க உதவும் ஒரு வழியாகக் கருதப்படுகிறது. பூமி வாழத்தகுதியற்றதாக மாறிவிட்டால் செவ்வாய் அல்லது ஏதாவது ஒரு துணைக்கோளில் குடியேற்றங்களை நிறுவுவது நம் இனத்தின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தும். இது அறிவியல் புனைக்கதை போல் தோன்றலாம், ஆனால் இதைச் சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் இப்போதே உருவாக்கப்பட்டு வருகிறது. மனித இனத்தின் எதிர்காலம் விண்வெளியில் உள்ள வேறொரு கோளில் இருக்கலாம்!

  1. விண்வெளியில் தங்கச் சுரங்கம்

பூமியின் வளங்கள் குறைவாக உள்ளன, நம் சனத்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும்போது, இந்த வளங்களின் மீதான அழுத்தமும் அதிகரித்து வருகிறது. விண்வெளி கனிமச் சுரங்கம் இந்த பிரச்சனைக்குக் கிட்டத்தட்ட அசாதாரண தீர்வை வழங்குகிறது. சிறுகோள்கள் ஏராளமான விலைமதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் தாதுகளைக் கொண்டுள்ளன. பூமியின் வள தட்டுப்பாட்டிற்குத் தீர்வு வழங்கும் வகையில் இந்த வளங்களைச் சுரண்டுவதற்கான பணிகளை நிறுவனங்கள் ஏற்கனவே திட்டமிட்டு வருகின்றன. பிரபஞ்சத்தின் செல்வம் நம் நாகரிகத்தை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்துவதற்கு முக்கியமாக இருக்கலாம்.

  1. அது நம் டி.என்.ஏவில் உள்ளது

மனிதர்கள் இயல்பாகவே ஆய்வாளர்கள். ஆபிரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆரம்ப இடம்பெயர்வுகளிலிருந்து கடல்களில் பயணங்கள் வரை, ஆராயவும் கண்டுபிடிக்கவும் வேண்டும் என்ற ஆசை நம் டி.என்.ஏவில் ஆழமாக வேரூன்றியுள்ளது. விண்வெளி என்பது அடுத்த எல்லை. இது நம் பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் அறியவும், புதிய தொழில்நுட்பங்களைக் கட்டமைக்கவும், பொதுவான இலக்குகளை நோக்கி ஒரு இனமாக இணைவதற்கும் வாய்ப்பளிக்கிறது. நாம் விண்வெளி ஆய்வை புறக்கணித்தால், நம் மனிதத்தன்மையின் அடிப்படை அம்சத்தை மறுத்துவிடுகிறோம்.

விண்வெளி ஆய்வு என்பது புகழ்மிக்க கருத்து அல்லது மனித ஆர்வத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல. இது தொழில்நுட்ப புதுமை, கிரக பாதுகாப்பு, உயிர்வாழ்வு மற்றும் வள மேலாண்மைக்கான அவசியமான பாதை. இது பெரிய கனவு காணவும் ஒன்றாக இணைந்து செயல்படவும், எல்லைகள் மற்றும் வேறுபாடுகளைத் தாண்டிச் செல்லவும் நம்மைத் தூண்டுகிறது. புதிய ஆய்வுக் காலத்தின் விளிம்பில் நிற்கையில், விண்வெளி என்பது இலக்கு மட்டுமல்ல, மனித இனத்தின் எதிர்காலத்திற்கான திசையையும் வழங்குகிறது. இந்தப் பயணத்தை ஏற்றுக்கொள்வோம் – பிரபஞ்சம் காத்திருக்கிறது!

724 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *