என்னவென்று நான் சொல்ல!
-மாதவி யேர்மனி
கனடாவில் எனது தம்பியின் நெருங்கிய நண்பர் இல்லத்திற்குக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.
அங்கு சென்றபோது நண்பனின் மனைவி இரத்த அழுத்தம் எவ்வளவு என தனக்கு பார்த்துக்கொண்டு இருந்தார்.
நண்பர் எம்மை வரவேற்று அமரவைத்தார். என்ன சாப்பிடுவீங்கள் சுடச் சுட வடை வேண்டுமா? அல்லது இனிப்பா?
விருப்பம் என்றால் மோதகமும் இருக்கு,அவவுக்கு விருப்பம் என்று,எப்பவும் மார்க்கம் போனால் வாங்கி வருவேன், நீங்கள் வருகிறீர்கள் என்று வடைக்கு பெயர் பெற்ற அன்னபூரணியில் வாங்கி வந்தேன். எனக்கும் வடைதான் தாருங்கள்.என்றேன்.
அது சரி அம்மா சுட்ட தோசை, அருமை. வடை அருமை. என்று நாங்கள் சொல்வோம். உங்கள் பிள்ளைகள் என்ன சொல்வார்கள் என்று கேட்டேன். அவரும் தயங்காமல் பிள்ளைகள் கடைப்பெயர்தான் சொல்லுவினம் என்றார். நான் ரூறிஸ் விசாவில் வந்து இப்பதான் 2 மாதம். அண்ணாவின் கதை அப்படி, இப்படித்தான் இருக்கும் என்று தம்பி நாசூக்காக நண்பனுக்கு சொன்னார்.
நண்பனின் மனைவி பிறசர் செக்கப்பண்ணி முடிந்ததும், தன் கணவனிடம், பார்வையால், கூற, கணவன் மெதுவாக மனைவி அருகில் வந்து, 148ஃ85 ஆ! கொஞ்சம் கூட ஆனால் ஓக்கே என்றபடி எம்மோடு தொடர்ந்தார்.
கொஞ்சம் கூட என்றதன் பின் எனக்கு, எவர் பேச்சும், என் காதில் விழவில்லை. கீழே 90 வரப்படாது, மேலுக்கும் 128 அளவு.கொஞ்சம் கூடலாம். உப்பை குறையுங்கோ. நடவுங்கோ. அவர் எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்பதை பார்த்து, ஆர்வக்கோளறில் இன்னும் எனக்கு தெரிந்ததை எல்லாம் எடுத்துவிட்டேன்.
ஒருவர் செல்ல ஒருவர் செவிமடுத்தால், சொல்பவருக்கு அதைவிட வேறு பாக்கியம் என்ன. எனக்கு தெரிந்ததும், யூரிப்பில் வந்ததும், நண்பர்கள் அனுப்பியதும், என வட்சப்பில் வந்து நான் படித்ததை எல்லாம் எடுத்துவிட்டேன்.
ஒரு நோயாளி டாக்கரிடம் கதைப்பது போல், மிக உன்னிப்பாக நான் கதைப்பதைக் கேட்டுக்கொண்டார்.இறுதியாக, அவரை பிடித்துப்போக நீங்கள் இலங்கையில் என்ன செய்தீர்கள்,என்று கேட்டேன். தான் டாக்டர், இலங்கையில் 20 வருடங்கள் தொழில் செய்தேன் என்றார்.
அவர் செவி மடுத்தது உண்மை.நீங்கள் டாக்டர் நான் சொல்லச் சொல் கேட்டீர்கள் என்றேன்.
ஓம் எனக்கும் தெரியாத ஏதும் இருக்கலாம் என்றார்.செவிமடுத்தல், அது ஒரு வித அடக்கத்தின் வெளிப்பாடு என்பதனை உணர்ந்தேன். இதனை என்னவென்று நான் சொல்ல!
487 total views, 2 views today