தற்காலிக வெற்றிகளைக் கொண்டாடுவதிலேயே தாயகத்தில் எமது காலம் போகின்றது.
பேரினவாதிகளின் இலக்கும்,சிவராத்திரி தின சம்பவமும்
ஆர்.பாரதி
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் இலங்கை அரசியல் எந்தத் திசையில் செல்கின்றது என்பதை மீண்டும் ஒரு தடவை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை முழுவதையும் சிறுபான்மையினர் என்று எவரும் இல்லாத சிங்கள – பௌத்த நாடாக மாற்றுவதற்கா நன்கு திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம்தான் வெடுக்குநாறி மலையில் ஆளும் தரப்பினர் வகுத்துள்ள திட்டம்.
இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பொறுத்தவரையில், தமிழ்த் தரப்பினரிடம் திட்டவட்டமான உபாயங்கள் எதுவும் இல்லை. தற்காலிக வெற்றிகளைக் கொண்டாடுவதிலேயே எமது காலம் போகின்றது.
தமிழ் மக்கள் தொன்றுதொட்டு வழிபட்டு வந்த வெடுக்குநாறி ஆதிசிவன் கோவிலை அங்கிருந்து அகற்றிவிட்டு, அதனை பௌத்த விகாரையாக்குவதற்கான திட்டங்களுடன் பௌத்த பிக்குகள் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் செயற்பட்டுவருகின்றார்கள். இதில் இரகசியம் எதுவும் இல்லை. இந்தப் பின்னணியிலேயே, சிவராத்திரி தினத்தன்று மீண்டும் அங்கு பிரச்சினை வெடித்துள்ளது.
தமிழ் தரப்பினரும் இந்தப் பிரதேசத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதால், வெடுக்குநாறிமலை ஒரு பலப்பரீட்சைக்குரிய இடமாக இப்போது மாறியிருக்கின்றது. படையினர், காவல்துறை, தொல்பொருள் திணைக்களம், பௌத்த பீடங்கள் என்பன இணைந்துதான் பௌத்த மயமாக்கல் திட்டத்தை முன்னெடுக்கின்றன. அரசாங்கமும், நீதித்துறையும் அவர்களின் பக்கத்தில்தான் நிற்கின்றன. இதனால், அவர்களை இலகுவாக தமிழ்த் தரப்பால் எதிர்கொள்ள முடியாது.
தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டிடங்களில், வெடுக்குநாறி மலை ஆதிசிவன் முக்கியமானவர். பெரிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு, காட்டின் இயற்கைக் சூழலுக்கு சேதம் விளைவிக்காது, அப்பகுதி மக்களால் காலங்காலமாக வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
ஆனால், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொல்லியல் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையிலேயே, ஆலய விக்கிரகங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் திணைக்களம் அதற்குரிய விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுவருகின்றது என்பதற்கான மற்றொரு உதாரணமாக வெடுக்குநாறிமலை விவகாரம் உள்ளது.
அரசாங்கத்தின் முழுமையான ஆதரவுடன் பௌத்த அடிப்படைவாதத்தின் அடாவடிகளை செயற்படுத்தும் நிறுவனமான தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிப்பதில் அண்மைக்காலத்தில் அதிகளவு கவனத்தைச் செலுத்தி வருகின்றது. தொல்லியல் திணைக்களத்தை நாட்டின் அதியுச்ச அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாலோ, நீதிக் கட்டமைப்பான நீதிமன்றங்களாலோ கூட கட்டுப்படுத்த முடிவதில்லை என்பதை கடந்த சில வருடங்களாக நாம் வெளிப்படையாகக் காணமுடிகின்றது.
தொல்லியல் திணைக்களம் நினைத்தால், தமிழர் தாயகப் பகுதிகளில் எதை வேண்டுமானாலும் ஆக்கிரமித்துக் கொண்டு, தொல்லியல் நிலப்பகுதி என்று அறிவித்துக் கொண்டு, பௌத்த விகாரைகளை அமைக்க முடியும் என்பதுதான் இப்போதைய நிலை. ஆனால், இது தொல்லியல் திணைக்களத்தின் விதி முறைகளுக்கு முற்றிலும் முரணானது. தொல்லியல் திணைக்களம் என்பது இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்பட வேண்டிய ஒன்று. ஆனால், இங்கு பௌத்த மயமாக்கலுக்கான பாதைய அமைத்துக்கொடுக்கும் பணியைத்தான் தொல்பொருள் திணைக்களம் செய்கின்றது.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு பகுதி அடையாளம் காணப்பட்டால், அந்தப் பகுதியைப் பேணிப் பாதுகாப்பதும், எதிர்கால ஆய்வுகளுக்கு உதவுவதும்தான் தொல்பொருள் திணைக்களத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி. அங்கு ஏற்கனவே இருக்கின்ற கட்டுமானங்கள், சின்னங்களை அகற்றுவதோ அல்லது சேதப்படுத்துதோ அதன் பணி அல்ல.அதேபோல, புதிய கட்டுமானங்களையும் அமைக்க முடியாது. ஆனால், தொல்பொருள் திணைக்களம் அதற்குரிய நடைமுறை விதிகளுக்கும், நீதிமன்றத் தீர்ப்புக்கும் முரணாக இவற்றைத்தான் கடந்த காலங்களில் செய்துவருகின்றது.
வெடுக்குநாறிமலையில் மட்டுமன்றி குருந்தூர்மலையிலும் தொல்லியல் திணைக்களம் இதனைத்தான் செய்தது. நீதிமன்றத்தின் கட்டளை கூட அங்கு செல்லுபடியாகவில்லை. முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலையிலும், படையினரும் ஏனைய அரச கட்டமைப்புக்களும் இந்த பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்து செயற்படுகின்றன. அரசாங்கம் தொல்லியல் திணைக்களத்துக்காக ஒதுக்கும் நிதிக்கு மேலதிகமாக, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் இந்தச் செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியைப் பெருமளவுக்கு வழங்கிவருகின்றார்கள்.
2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்மக்களுடைய தாயகப் பகுதிகளை சிங்கள மயமாக்குவதற்கான உபாயங்களில் ஒன்றாக “தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி” என்ற பிரகடனத்தை அரசாங்கம் பயன்படுத்திவருகின்றது. இதன்மூலம் தமிழ் மக்களின் தொன்மையான பல பகுதிகள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டு அவற்றை சிங்கள – பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இவ்விதம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக ஏற்கனவே அடையாளங்காணப்பட்டுள்ளன. சில இடங்கள் மட்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கு ஆதரவாகச் செயற்படாவிட்டால், குறிப்பிட்ட அரச கட்டமைப்புக்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்படலாம். அதனால், பௌத்த சிங்களத் தரப்புக்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இதற்கு ஆதரவாகவே இயங்குகளின்றன.
தொல்லியல் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்படும் இந்தச் செயற்பாடுகளின் பின்னணியில் சிங்கள புத்திஜீவிகள் பலரும் செயற்படுகின்றார்கள். நீண்ட கால அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலில் ஒவ்வொரு அங்கம்தான் வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை போன்றவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதைகளுடன் சிங்கள தேசம் தயாராக இருக்கின்றது.
நாடு முழுவதும் புத்தர் சிலைகளை வைத்து நிரப்புவதன் மூலம், இந்த நாட்டின் வரலாற்றை போலியாக எழுதி, பௌத்த சிங்கள நாடாக எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கும் மகாவம்ச மனநிலையின் விளைவுகள்தான் நாட்டை பாரிய பின்னடைவுக்குள் தள்ளியது. ஆனால், அதிலிருந்து பாடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம், பௌத்த அடிப்படைவாத சக்திகளுக்குக் கிடையாது. இலங்கையை சிறுபான்மையினர் அல்லாத பௌத்த சிங்கள நாடாக நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, எவ்வளவு விலையை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகிறார்கள். அது வரலாற்று ரீதியாக கடத்தப்பட்டு வரும் மகாவம்ச பௌத்த அடிப்படைவாத மனநிலையில் இருந்து வரும் ஒன்று.
கச்சதீவில் இரகசியமாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தமை, நிலாவரைக் கிணற்றடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை, வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் அகற்றப்பட்டமை போன்றன தொல்லியல் திணைக்களமும் அதன் ஆதரவு சக்திகளும் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புக்கு சில உதாரணங்கள்.
பொருளாதார நெருக்கடி உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் கூட, குருந்தூர் மலையை ஆக்கிரமிப்பதற்கு தென்னிலங்கையிலிருந்து பெருமளவு பஸ்களில் பௌத்த பிக்குகளும், சிங்கள கடும் போக்காளர்கள் பலரும் முல்லைத்தீவுக்கு வந்தமையை நாம் பார்த்தோம். அதாவது, தமிழர் தாயகத்தை பௌத்த – சிங்கள மயமாக்குவதற்காக என்ன விலையைக் கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவுள்ளனர்.
அதேவேளையில், தொல்லியல் திணைக்களத்தை ஆட்சித் தலைவர்களால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு இருப்பவர்கள் எல்லாரும்,பௌத்த அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதற்காக தெளிவாக பயிற்றுவிக்கப் பட்டவர்கள். அதேவேளையில் புத்திஜீவிகள். ஆவர்கள் அரசாங்கத்தின் உத்தரவுகளை ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. ஆட்சியில் இருப்பவர்கள் ஐந்து, ஆறு ஆண்டுகளில் மாறக் கூடியவர்கள். அவர்களை கருத்தில் எடுக்க வேண்டியதில்லை என்ற மனப்பான்மையுடன்தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
அரசாங்கத்தின் தலைவர்களைப் பொறுத்தவரையிலும், தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகச் செயற்படுவது தமது எதிர்கால அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சுகிறார்கள். அதனால், தொல்லியல் திணைகளத்தின் அடிமைகளாகவே அவர்கள் இருப்பார்கள்.
தமிழ் மக்கள் இந்த சவாலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி. புதிய மகாவம்சத்தை எழுதுவதற்குத் துடித்துக்கொண்டுள்ள பௌத்த – சிங்கள இனவாதிகள் தமது கொள்கையில் உறுதியாக இருக்கின்றார்கள். பொருளாதார நெருக்கடி மோசமடைந்தாலும், இந்த விடயத்தில் அவர்கள் சமரசத்துக்கு தயாராகவில்லை என்பதைத்தான் சிவராத்தி சம்பவம் உணர்த்துகிறது. ஆட்சி மாற்றம் ஒன்றை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், இவ்விடயத்தில் சிங்கள தேசியவாதிகளின் நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் யாரும் செயற்படுவார்கள் என்பதும் எதிர்பார்க்க முடியாது. அதனை இலக்காகக்கொண்ட காய்நகர்த்தலாகவே இது உள்ளது!
384 total views, 3 views today