சட்டி பிரட்டி.

ஜூட் பிரகாஷ் – மெல்பேர்ண்

“சாப்பிடுவதும் ஒரு கலை” என்று பறைஞ்சால் கனபேருக்கு மூக்கு முட்ட கோபம் வருது. சமைக்கத் தெரியாதாக்கள் சாப்பாட்டைப் பற்றி கதைக்க கூடாது எனுமளவிற்கு கருத்து ஷெல்கள் பலாலியில் இருந்து பறந்து வரும்.

ஆனால், யார் எவர் சொன்னாலும், சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடத் தெரிஞ்ச கலைஞன் இருப்பதால் தான் சமைக்கிறாக்களுக்கு மவுசு.

நல்ல வடிவாச் சாப்பிட ஆளில்லாத இடத்தில் ஆருக்கு சமைப்பீனம்? புரட்டாசிச் சனிக்கு படைக்கிற காக்காக்கா?

சாப்பாட்டை ருசித்து சாப்பிடுறதும் சும்மா லேசுபட்ட வேலை இல்லை. எதை எதை எப்படி எப்படி சாப்பிடோணும் என்ற பல நூதனங்கள் இருக்கு. அதில ஒரு நூதனம் தான் இந்த சட்டி பிரட்டி சாப்பிடுறது.

சட்டியில் காய்ச்சுற கறியை, சட்டியில் இருந்து எடுத்து இன்னொன்றுக்க போடேக்க, சட்டியில் சமைக்கும் போது இருந்த சிலபல சுவைகள் காணாமல் போய் விடும். அதனால தான் சில பேர் சட்டியில் குழம்பு கொதிக்கேக்கயே கோப்பையில் போட்டுக் கொண்டு சாப்பிடப் போய் விடுவீனம்.

“சட்டி பிரட்டுறது என்பது யாதெனில், எல்லோரும் சாப்பிட்ட பின்பு, சட்டியில் மீதமிருக்கும் கறியை வீணடிக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில், சட்டியை விட்டு கறியை எடுக்காமல், சட்டியில் வைத்தே கறியை பிரட்டி உண்ணுதல்” என்று சங்ககால சமையல் சுவடுகளில் வரைவிலக்கணம் வேறு இருக்கிறதாம்.

சட்டிக் கறியை சும்மா பிரட்டேலாது. எந்தெந்த கறியை எது எதால் பிரட்ட வேண்டும் என்று வேறு சில சூட்சுமங்கள் இருக்கு. கண்டதையும் கண்டதால் பிரட்டினால் சாப்பாட்டில் சுவையும் இருக்காது; சாப்பிடுவதில் சுவாரசியமும் இராது.

உறைக்க உறைக்க சமைத்த பங்கு இறைச்சிக் கறியை பிரட்ட திறமான ஆள், குத்தரிச் சோறு தான். சிவக்க சிவக்க சிவந்த உறைப்புக் கறியை, சிவப்புச் சோறால் அப்படியே வழித்துத் துடைத்து வாயில் போடேக்க தான் தெரியும் அந்தக் கறிக்குள் இருந்த மகத்துவங்களின் அருமை.

அதே மாதிரி, கோழிக்கறி என்றால் இடியப்பத்தை கறிச் சட்டிக்குள் பிச்சப் பிச்சுப் போட்டுப் பிரட்டலாம். மிஞ்சின கோழிக் கறியில் எலும்புகள் இருந்தால் அதுவும் இடியப்பத்தோடு சேர்ந்து வரேக்க அந்த மாதிரி இருக்கும்.

கணவாய்க் கறிக்கு சரியான பார்ட்னர் எங்கட வெள்ளைப் புட்டு தான். வெள்ளை வெளீரென்று சட்டிக்குள் இறங்கின புட்டர், கணவாய்க் கறியோடு கலந்து நிறம் மாறும் அழகே அழகு. நிறம் மாறின புட்டரை ஆசை தீர கண்ணால் சில கணங்கள் ரசித்து விட்டு, அப்படியே ஒரு குழையலை எடுத்து வாயில் வைத்தால்.. சிவ சிவ யேசப்பா தான்.

இறால் குழம்பு என்றால் பாண் தான் பொருத்தமாக இருக்கும். அதுவும் ரோஸ்ட் பாணை கிட்டயும் கொண்டு வரப்படாது. இறால் குழம்பை சட்டியில் பிரட்டி எடுக்க தோதானது அச்சுப் பாண் தான். அதிலேயும் கரையை விட்டிட்டு பாண் உள்ளானை மட்டும் எடுத்து சட்டியைப் பிரட்டி, கடைசித் துண்டு இறாலையும் பாணுக்குள் அமத்தி சாப்பிட்டால்… சொல்லி வேலை இல்லை (கியலா வடக் நஹா தான்).

சில நேரங்களில் இறால் குழம்புக்க மிஞ்சி இருக்கிற உள்ளியும் சட்டி பிரட்டேக்க பாணுக்க ஆப்பிட வாய்ப்பிருக்கு. உள்ளி உள்ளே போனால் வெளியே என்ன வரும் என்று சொல்லித் தான் தெரியவேண்டியதில்லை; ஆனபடியால் சூதானமாக இருக்கோணும்.

சைவக்காரன்களிற்கு என்ன மாதிரி என்று சிலர் கேட்கலாம். சைவக்காரர் சட்டி பிரட்டச் சரியான கறி தக்காளி குழம்பு தான். தக்காளி குழம்புச் சட்டிக்குள் ரொட்டியை பிச்சுப் பிச்சுப் போட்டு விட்டு தான், சட்டியை பிரட்ட வேண்டும். பிறகு ஒரேயடியாக ரொட்டியை எடுத்துச் பக்கென்று சாப்பிடாமல், பிரட்டப்பட்ட ரொட்டியை ஒவ்வொரு துண்டாக எடுத்துச் ருசித்துச் சாப்பிட வேண்டும்.

சட்டி பிரட்டேக்கயும் சட்டி முழுக்க சரியாக பிரட்ட வேணும். படித்து முடித்தும் பள்ளிக்கூடத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் பழைய மாணவர்கள் போல, சட்டியின் விளிம்பிலும் ஓட்டிக் கொண்டிருக்கும் கறியைத் துடைத்து எடுத்து, சட்டியைக் கழுவத் தேவை இல்லை எனுமளவிற்கு பிரட்டி எடுப்பதில் தான் சட்டி பிரட்டல் செயற்பாடு முழுமையடைகிறது.

சட்டி பிரட்டல்.. சாப்பாட்டுக் கலைஞர்களின் பத்மவியூகம்!

353 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *