“மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ”
உங்கள் வாழ்வும் உங்கள் முடிவும்!
நின்று பேச நேரமில்லாது
–பொலிகையூர் ரேகா
அவசரகதியில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகின் போக்கில் நாமும் ஓடிக்கொண்டே இருக்கின்ற இந்தக் காலத்திலும்; பலரும் சிந்தையில் கொள்கின்ற பற்றியமென்பது அடு(டி)த்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதாகவே இருக்கின்றது.
அடுத்தவர்களென்பது நமக்கு நன்மை நினைக்கின்ற பெற்றவர்களாகவோ, உடன் பிறந்தவர்களாகவோ, நண்பர்களாகவோ, வேறு உறவினர்களாகவோ இருந்தால் கூட நன்றுதான். ஆனால் யாரென்றே தெரியாத மனதர்களும், நமக்கு நடக்கும் தீமைகளைப் பற்றியே விமர்சிக்கக் காத்திருக்கும் மனதர்களாகவும் இருக்கும் பட்சத்தில் வருகின்ற “மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ” என்ற எண்ணம்தான் முன்னேறவே விடாமல் கட்டிப்போட்டுவிடுகின்றது.
நம்மை முன்னேறவே விடாமல் அடித்து ஆழத்தில் தள்ளியவர்கள் என்ன நினைப்பார்களோ, யாரென்றே தெரியாத மூன்றாம் மனிதர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினால் நம் முயற்சிகளும் முன்னேற்றங்களும் தடைபட்டுவிடும். தோல்வியோ வெற்றியை என்னுடைய முடிவு என்று சரியான சிந்தனையோடு இறங்கிவிட்டால் எது குறித்தும் சந்திக்க வேண்டியதில்லை.
அடுத்தவர்களை ஒருபோதும் திருப்திப்படுத்தவே முடியாது. அவர்கள் தமக்குத் தோன்றியவற்றையெல்லாம் போகும்போக்கில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். அதையெல்லாம் எடுத்துக்கொண்டு யோசிக்கத் தொடங்கினால் கவலைப்படுவதற்கே நேரம் சரியாகவிடும்.
உதாரணமாக ஒரு கதை சொல்வதுண்டு. கணவன் மனைவி இருவரும் ஒரு கழுதையில் பயணம் செய்துகொண்டிருந்தனர். வழிப்போக்கர்கள் அதைப் பார்த்துவிட்டு “இரக்கமே இல்லாத மனிதர்கள் ஒரு வாயில்லாத பிராணி மீது இருவர் செல்கின்றனரே” எனக் கூறினர். உடனே கணவன் இறங்கிக்கொண்டு தன் மனைவியை மட்டும் கழுதையின் மீது அமர்த்திக்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தர்கள்.
சிறிது நேரத்தில் அவ் வழியால் போன வழிப்போக்கர்கள் ” இவள் எத்தகைய திமிர் பிடித்தவள் தன் கணவனை நடந்து வரச் சொல்லிவிட்டு இவள் கழுதையின் மீது அமர்ந்து செல்கின்றாள்” என்றனர். உடனே மனைவி இறங்கிக் கொண்டு கணவனை கழுதையில் அமரச் சொன்னாள். சிறிது நேரம் கழித்து அவ்வழியால் சென்ற வேறு வழிப்போக்கர்கள் ” இவன் எத்தகைய கொடுமைக்காரனாக இருக்கிறான். ஒரு பெண்ணை நடந்து வர வைத்துவிட்டு இவன் சொகுசாகக் கழுதையின் மீது பயணிக்கிறான்” என்றார்கள்.
இப்படி மாறுபட்ட விமர்சனங்களால் மனமுடைந்து இருவரும் நடந்து செல்லத் தொடங்கிவிட்டனர். சிறிது தூரம் சென்றதும் அங்குள்ள வழிப்போக்கர்கள் “இவர்கள் சரியான முட்டாள்களாக இருக்கின்றார்கள். கழுதையை வைத்துக்கொண்டு இருவரும் நடந்து செல்கின்றார்கள்.இவர்களைப் போல் பைத்தியக்காரர்கள் யாருமே இல்லை” என்று கூறினார்கள்.
இதே நிலமைதான் நமக்கும். நாம் எதைச் செய்தாலும் விமர்சிப்பதற்கு மட்டுமென்றே சிலர் இருப்பார்கள்.அவர்களை ஒருபோதும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. விமர்சிப்பதென்று முடிவெடுத்தவர்களுக்குப் பாராட்டக் காரணங்கள் கிடைக்காது. அவர்கள் கண்ணுக்குத் தெரியப்போவதென்னமோ உங்கள் குறைகளும், உங்கள் தோல்விகளும்தான். இவர்களுக்குப் பயந்து உங்கள் முயற்சிகளைக் கைவிட்டுவிட்டால் உங்கள் வெற்றிகளை நீங்களே குழி தோண்டிப் புதைத்தது போலாகிவிடும்.
உங்கள் மேலான உண்மையான அக்கறையில் சொல்பவர்களின் கருத்துக்களுக்குச் செவி சாயுங்கள். சரியானதை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஆலோசனைகளில் இருந்து சிந்தித்து நீங்களாக முடிவெடுங்கள். ஆனால் பொத்தாம்பொதுவாகக் கூறும் அறிவுரைகளையோ,உங்களை வீழ்த்துவதற்காகப் பிரயோகிக்கும் உங்கள் குறைகளையோ ஒருபோதும் காதில் வாங்காதீர்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும் இந்த உலகம் விமர்சிக்கவே போகின்றது. உங்களுக்கான உங்கள் முடிவுகளை நீங்களே எடுத்துக்கொள்ளப் பழகுங்கள்.உங்கள் முடிவுகளின் நன்மைகளையும் தீமைகளையும் நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். நிறைகளை வளருங்கள்; குறைகளை சரிப்படுத்த முயற்சியுங்கள்.
பிறரின் ஆலோசனைகளுக்கெல்லாம் செவிசாய்த்துக்கொண்டு மட்டுமே இருந்தால் உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுக்க முடியாமல் போய்விடும்.
உங்கள் வாழ்வும் உங்கள் முடிவுகளும் உங்கள் கையில்தான் உள்ளது.
353 total views, 3 views today