பரசிவ வெள்ளம்

ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும் – ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும் – அவை

யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்றுமில்லையிதை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் இந்த
அறிவு தான் பரமஞான மாகும்.

எங்கணும் நிறைந்திருக்கும் சிவசக்தி ரூபத்தை தரிசிக்கும் புண்ணிய நாளாக மார்ச் 8 ஆம் திகதி 2024 அமைந்திருந்தது. பதிற்றாண்டுகளின் பின்பு சர்வதேச மகளிர் தினமும், மகா சிவராத்திரியும் ஒரே நாளில் இணைந்திருந்து இரட்டிப்பு மகிழ்வைத் தந்தது. இதனை மனத்திருத்தி இம்முறை மகா சிவராத்திரி தினத்தன்று அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி வழங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில் சிவசக்தி ரூபமாக இருக்கும் அர்த்தநாரீஸ்வர ஆடலையும் இணைத்துக்கொண்டோம்.

சிவராத்திரி தினத்தில் தென் இந்தியாவை சூழவுள்ள மிகப் புராதன ஆலயங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். விசும்பினை மேடையாக்கி நர்த்தனமாடிய நடராஜப் பெருமான் உறையும் தில்லையம்பதியில் நான்கு தசாப்தங்களாக நாட்டியாஞ்சலி நிகழ்வு நடைபெறுவது உலகப் புகழ் பெற்றது. இங்கு இந்தியாவின் பல பாகங்களில் இருந்து மட்டுமல்லாது , உலகளாவிய ரீதியில் இருந்தும் நடனக் கலைஞர்கள் வருகை தந்து நாட்டிய சமர்ப்பணம் வழங்குவர். அது போலவே சிதம்பரம் தவிர இன்னும் பல ஆலயங்களில் நாட்டியாஞ்சலி இடம்பெறும்.

இம்முறை அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி இந்தியாவிலும், இலங்கையிலுமாக 11 திருக்கோவில்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் வழங்கியமை சிவனின் பேரருள் என்றே எண்ணி வியக்கிறோம்.

எங்கு நிறைந்திருந்த
ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப்
போற்றி நின்றாற் போதுமடா

எமது பயணம் சென்னையில் இருந்து ஆரம்பித்து தில்லை சிதம்பரநாதரிடம் வந்தடைந்தோம். நாட்டியாஞ்சலிக்கு வரும் கலைஞர்கள் முதலில் தில்லை நடராஜருக்கு நாட்டிய சமர்ப்பணம் வழங்குவது வழக்கம். முன்பு திருக்கோவிலுக்கு உள்ளே நடராஜரை தரிசனம் செய்தவாறே ஆடல் வழங்க அனுமதி இருந்தது. தற்காலத்தில் அந்த ஏற்பாடு இல்லையென்றாலும், கோவில் பிரகாரத்தில் தத்தம் விருப்பப்படி நாட்டிய சமர்ப்பணம் வழங்குவர். நாமும் அவ்வண்ணமே தேவார பதிகங்களை நடனமாடினோம்.

யாதுமாம் ஈசவெள்ளம்
என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை
உள்ளுவதே போதுமடா.

சிதம்பர தரிசனத்தின் பின் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலை அடைந்தோம். மகா சிவராத்திரி ஓரிரவில் சப்த திருத்தலங்களில் நடன ஆற்றுகை வழங்கினோம். இந்தியாவில் காரைக்கால் , அம்பகத்தூர், திருவீழிமிழலை, திருநள்ளாறு போன்ற திருத்தலங்களிலும் இலங்கையில் வஜிரா பிள்ளையார் கோவில், புதிய கதிரேசன் கோவில் கொழும்பு நாட்டியாஞ்சலி, மயூரபதி பத்ரகாளி அம்மன் ஆலயம் கைலேஸ்வரம் நாட்டியாஞ்சலி போன்ற கோவில்களிலும் என ஏழு ஆலயங்களில் நாட்டிய சமர்ப்பணம் வழங்கினோம்.

எங்குமுளான் யாவும்வலான்
யாவுமறி வானெனவே
தங்கு பலமதத்தோர்
சாற்றுவதும் இங்கிதையே

மறுநாள் 9 ஆம் திகதி திருபாலத்துறை பாலைவனநாதர் கோவிலிலும், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலிலும் நடைபெறும் நாட்டியாஞ்சலியில் பங்கேற்று நடனமாடினோம். புராணோத்தமமான தேவாரப் பாடல் பெற்ற இரு சிவாலயங்களிலும் , ஈழத்தில் புராண பெருமை கொண்ட தேவாரப் பாடல் பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருகேதீச்சரம் மீதான பாடல்களுக்கு நடனமாடினோம். திருக்கேதீச்சர அஷ்டகத்திற்க்கான விளக்கத்தினை வழங்கி மக்களிடம் கேதீச்சநாதரை அழைத்துச் செல்லும் போது இந்தியாவில் உள்ள சிவபக்தர்கள் திருக்கேதீச்சரநாதரை மனக்கண்ணில் தரிசித்தனர்.

சந்ததமு மெங்குமெல்லாந்
தானாகி நின்றசிவம்
வந்தெனுளே பாயுதென்று
வாய்சொன்னாற் போதுமடா.
தவமொன்று மில்லையொரு
சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதெனச்
சிந்தைசெய்தாற் போதுமடா

10ஆம் திகதி திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி திருக்கோவிலில் நாட்டியம் வழங்கி 11 திருத்தலங்களை பூர்த்தி செய்தோம்.மூன்று நாட்களாகத் தொடர்ந்த எம் பயணம் தஞ்சை பெருங்கோவிலில் பெருவுடையார் சந்நிதியில் சரணடைச் செய்தது.

நித்தசிவ வெள்ளமென்னுள்
வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்
சிரத்தை யொன்றே போதுமடா

இம்முறை இந்தியாவில் உள்ள அஷ்ட திருத்தலங்களில் திருக்கேதீச்சர அஷ்டகத்தினை நாட்டிய சமர்ப்பணமாக வழங்கி அறிமுகம் செய்ய சிவனருள் சித்தித்தை எண்ணி வியந்தோம்.

இக்கோவில்களைத் தவிர , சிதம்பரம் நாட்டியாஞ்சலி, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய பிரகன் நாட்டியாஞ்சலி , மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி, திருவிடைமருதூர் மருதா நாட்டியாஞ்சலி, திருவையாறு நாட்டியாஞ்சலி போன்ற பல கோவில்களில் முன்னைய வருடங்களில் நாட்டியாஞ்சலி வழங்கி உள்ளோம்.நாட்டியாஞ்சலி நிகழ்வுகள் எந்த பேதமும் இன்றி, ஆடல் வல்லானுக்கான பரிபூரண சமர்ப்பணமாக நிகழ்வது பெரிதும் போற்றத்தக்கது.

யாதுமாம் ஈசவெள்ளம்
என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை
உள்ளுவதே போதுமடா.

ஆதலினால், அவனருளாலே அவன் தாள் வணங்கி என்ற பேருண்மையை உணர்ந்து , உள்ளும் புறமும் உள்ளதெல்லாம் சிவ வெள்ளம் அன்றிப் பிறிதில்லை என்று கண்ணீர் மல்கி தன்னை மறந்து நின்றோம். சிவனடியில் பண்ணிய பிரார்த்தனைகள் யாவும் எல்லா உயிர்களும் இன்பம் எய்தச் சென்றடைக

இப்பொருளைக் கண்டார்
இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம்பெற்றிங்
கின்பநிலை யெய்துவரே
தவமொன்று மில்லையொரு
சாதனையு மில்லையடா
சிவமொன்றே யுள்ளதெனச்
சிந்தைசெய்தாற் போதுமடா.

239 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *