வெள்ளரிக்காய் ஆயிரம் ரூபாய் விற்றலும் இயற்கை தடுக்காது.!
ஊருக்கு போனபோது ஒரு 102 வயது இளைஞர் ஒருவரைச் சந்தித்தேன்.உங்கள் வாழ்க்கையின் இரகசியம் என்ன என்று கேட்டேன்.
நான் எவரிடமும் வேலை செய்யாததும், ஏன் வேலைக்கு போகாததும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் என்றார்.
அப்படி என்றால் யார் சோறுபோட்டது என்றேன். தம்பி எனக்கு இந்த மண்தான் சோறு போட்டது. இன்று உள்ள பிள்ளைகளுக்கு இந்த மண் பற்றித் தெரியாது. காலை 4 மணிக்கு எழும்பி துலாமிதித்து காலை 10 மணிக்கு வீடு வந்தால் ராஜ வாழ்க்கை. பின் மாலை போனால் சூரியன் இறங்க வீட்டில் நிலவு உதிக்கும்.
உண்டு உடுத்தி உறவுகளுடன் மகிழ்ச்சி பொங்கின மனசு, எவருக்கும் கைகட்டாமல் வாழ இயற்கை தந்த கொடை இந்த மண் என்றார். அப்படி இயற்கை நேரம் காலம் அறிந்து வெளிப்படுத்தும் உதவிக்கரங்களில் இந்த வெள்ளரிக்காயும் ஒன்று. தோட்டத்தில் வெய்யிலின், தாகம் தணிக்க வந்த ஞானப்பழம். இந்த வெள்ளரிக்காய்.
இன்று கல்முனையில் கொதிக்கும் வெய்யிலில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான தெரு வீதியில் பல இடங்களில் இந்த வெள்ளரிக்காய் குவியலாக விற்பனைக்கு வந்துள்ளது. தென்னை ஒலையில் வலையாக ஒரு பை பின்னி, அதனுள் வெள்ளரிக்காய் வைத்து, மோட்டசைக்கிளில் எடுத்து வந்து கூடுகட்டி பெரும் தெருவில் விற்றால், யார்தான் வாங்க மாட்டார்கள்.
300 ரூபாய் இல் இருந்து 1000 ருபாய் வரை வெள்ளரிக்காய் விலைபோகிறது, யாவும் இயற்கையின் கொடை. அதனை விற்று காலத்தே பயிர் செய்பவர்கள் வாழத்தெரிந்தவர்கள். இயற்கை அன்னை தந்தெல்லாம் எல்லோர் க்கும் சொந்தமடா. என்ற பாடல் எங்கோ ஒரு மூலையில் பாடினாலும், காதோரம் கேட்க வைக்கும் வெள்ளரிக்காய்களுக்கு நன்றி. தண்ணீர் விற்பனையாகும் நாட்டில் வெள்ளரிக்காய் ஆயிரம் விற்றலும் இயற்கை தடுக்காது. வாங்குபவன் விவசாயி இல்லையே.
372 total views, 6 views today