அமரர் கவிஞர் வி.கந்தவனம் அவர்களுக்கு வெற்றிமணி, யேர்மனி வாழ் இலக்கிய நண்பர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தியது.

கவிநாயகர் வி.கந்தவனம் ஐயா அவர்களது இறுதி கிரிகைகள்,கடந்த மாதம் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் ரொறன்ரோ மாநிலத்தில், இடம்பெற்றது. அமரர் வி. கந்தவனம் ஐயா அவர்களது உடல் மக்களின் இறுதி வணக்கத்திற்காக 16.03.2024,அன்று ஒழுங்கு செய்யப்பட்டு இருந்தது.

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கவிஞருக்கு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர். அன்றையதினம் சட்டத்தரணி மனுவல் யேசுதாசன், அவர்களின் நெறிப்படுத்தலில் அஞ்சலியும், உரைகளும், இடம் பெற்றன.

சங்கீதபூசணம் பொன். சுந்தரலிங்கம் அவர்கள் தேவாரப் பதிகங்கள் பாடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, திரு மனுவல் யேசுதாசன் அவர்கள்,அமரர் கவிஞர் வி.கந்தவனம் அவர்கள், கனடாவில் ஆற்றிய பணிகள் பற்றிக்கூறினார்.

திரு.கதிர்.துரைசிங்கம் அன்னாரின் ஆத்மா சாந்திக்கு பிரார்த்தனை செய்ததுடன்,கவிஞர் அவர்களின் தமிழ் தொண்டையும், அவருடன் உண்டான நட்பையும் எடுத்தியம்பினார்.

யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் தனது உரையில், கவிஞர் அவர்களின் தமிழ் பற்றினை எடுத்துரைத்தார். யேர்மனிவாழ் இலக்கிய நண்பர்கள், சார்பாகவும் அஞ்சலி செலுத்தினார்.

கவிஞர் தாயகத்திலும்,கனடாவிலும் ஆற்றிய தமிழ் பணிகள் நீங்கள் அறிந்ததே. கவிஞர் யேர்மனி வாழ் தமிழ் மக்களின் இனிய இலக்கிய நண்பராக, வலம் வந்தவர் என்ற செய்தியை உங்கள் இடத்தில் பகிர விரும்புகிறேன். யேர்மனியில் தமிழர்கள் ஒரு மாநிலத்தில் இங்குபோல் இலட்சக்கணக்கில் வாழ இல்லை. பரந்து தூரத் தூர பல இடங்களிலும், மாநிலங்களிலும் வாழ்கின்றார்கள்.

கவிஞர் 1995 ஆண்டு முதல் முதலாக வெற்றிமணி பத்திரிகை யின் முதலாவது ஆண்டு விழாவில் யேர்மனியில் கலந்து சிறப்பித்தார். நாம் வெற்றிமணி விழாவினை கவிஞர் அவர்களின் மணிவிழாவாகக் கொண்டாடினோம். அதனைத் தொடர்ந்து பல வருடங்களாக பல விழாக்களில் கலந்து சிறப்பித்தார்.

பெரிய, சிறிய அமைப்புகள் என்ற பேதம் இன்றி தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று யாவரையும், தமிழால் இணைத்து மகிழ்ந்தார். 2002ம் ஆண்டு யேர்மனியில் கவிஞர். வி.கந்தவனம் என்ற நூலை அங்கு வெளியீடு செய்யும் அளவிற்கு, அவரது பணிகள் அங்கும் விரிந்து கிடந்தன. இன்று எம்மை விட்டுபிரிந்தாலும் அவர் பணிகளையும் தொடரும் ஒரு சந்ததியாக இளையவர்கள், இருப்பார்கள் எனக் கூறி தனது அஞ்சலியை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கனடா, தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம், ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர் திரு லோகன் கணபதி, உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், தாய்வீடு பத்திரிகை ஆசிரியர் திலீப்குமார் இன்னும் பல இலக்கிய நண்பர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தமிழ் எங்கள் உயிருக்கு மேல் என்று வாழ்ந்த கவிஞரின் உடல் 17.03.2024 ஞாயிற்றுக்கிழமை 11.30 க்கு தீயினில் சங்கமமாகியது.

522 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *