தேர்தல் கள நிலைமைகளை மாற்றியமைக்குமா ஜே.வி.பி?
ஆர்.பாரதி
தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணியின் பிரதான கட்சி ஜே.வி.பி.தான். கடந்த காலத்தில் இரத்தம் தோய்ந்த ஒரு வரலாற்றைக் கொண்டாதாக ஜே.வி.பி. இருப்பதால் மற்றொரு பெயரில் இப்போது அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. பெயரில் மாற்றம், செயற்பாடுகளில் சில மாற்றங்கள் இருந்தாலும் கூட, அடிப்படையில் ஜே.வி.பி.யின் அணுகுமுறையில் – அதன் கொள்கைகளில் பாரிய மாற்றம் எதுவும் இல்லை.
ஆனால், தற்போது ஜே.வி.பி.யின் பக்கம் அரசியல் அவதானிகள் இராஜதந்திரிகளின் கவனம் திரும்பியுள்ளமைக்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியா ஜே.வி.பி.யின் தலைமையை உத்தியோகபுர்வமாக அழைத்து அண்மையில் பேச்சுக்களை நடத்தியிருந்தது. இது தமக்கு சர்வதேச அரங்கில் கிடைத்த ஒரு அங்கீகாரமாக ஜே.வி.பி. தலைமை கருதுகின்றது. அதேவேளையில், ஜே.வி.பி. குறித்த மக்களின் “இமேஜ்”ஜையும் இது உயர்த்தியிருக்கிறது.
இந்திய விஜயத்துக்கு முன்னதாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயம், சமீபத்தில் கனடாவுக்கு அவர் முன்னெடுத்த பயணம் என்பனவும் சர்வதேச அரங்கில் ஜே.வி.பி. மீதான கவனத்தை அதிகரித்திருக்கின்றது. அதேவேளையில், இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு தலைவராக அநுர குமார திஸாநாயக்க உருவாகியுள்ளார் என்பதையும் இவை உணர்த்துகின்றன.
இந்தப் பின்னணியில் இந்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் வெளிவருகின்றன. ஜேவிபி கணிசமான வாக்குகளை பெற்றுக் கொள்வார்கள் என்பதை கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. 50 விதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என சில கருத்துக்கணிப்புகள் சொன்னாலும் கூட அதன் நம்பகத் தன்மை என்பது கேள்விக்குறிதான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரகலய என்ற மக்கள் போராட்டத்தை பயன்படுத்தி இளைய தலைமுறை மக்களிடம் அவர்கள் கணிசமான ஆதரவை அறுவடை செய்துள்ளார்கள். அவர்களுடைய பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு கணிசமான மக்கள் கூடுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையில்தான் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலைமையில் ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதையிட்டு சுருக்கமாக பார்ப்போம்.
2019-ல் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 4 விதமான வாக்குகளை மட்டுமே அநுர குமாரத்திசநாயக்காவினால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஜேவிபிய பொறுத்தவரையில் அவர்களுடைய நிரந்தரமான வாக்கு என்பது ஏழு விதத்திற்கு உட்பட்டதாகவே இருந்திருக்கின்றது. 2022 இல் இடம்பெற்ற மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் ராஜபக்ஷக்களின் மீது அதிருப்தியடைந்த ஒரு குழவினர் ஜே.வி.பி. ஆதரவாளர்களாகியுள்ளனர்.
சில கருத்து கணிப்புகள் சொல்வதைப் போல 50 வீதமான வாக்குகளை அவர்களால் பெற முடியுமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் கூட, பத்து வீதத்திற்கு அதிகமான வாக்குகளை அவர்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது பொதுவான கணிப்பீடாக இருக்கின்றது. அநுர குமார திஸாநாயக்கா கணிசமான வாக்குகளை பெற்றுக் கொள்வது என்பது ஜனாதிபதி தேர்தலில் ஒரு குழப்பமான நிலைமையை ஏற்படுத்தலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்து.
காரணம் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளை 50 வீதத்துக்கு அதிகமானதை ஒருவர் பெற்றுக் கொள்வது அவசியம். இலங்கையில் தேர்தல் சட்டம் அதனை தான் சொல்கின்றது. கடந்த காலங்களில் அது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. காரணம், ஜனாதிபதி தேர்தல் என்பது இருமுனைப் போட்டியாகவே இருந்திருக்கின்றது. மூன்றாவது வேட்பாளர் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறுவதைத்தான் நாம் கடந்த காலங்களில் கண்டிருக்கின்றோம்.
ஆனால் தற்போது நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலில் இது முன்முனைப் போட்டியாகப் போகின்றது. அதாவது ஜேவிபியின் செல்வாக்கு அதிகரித்திருப்பதால் கணிசமான வாக்குகள் அவர்களுக்கு அளிக்கப்படலாம். கனிசமான வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொள்வது என்பது ஏனைய இரண்டு பிரதான வேட்பாளர்களில் எவருமே 50 வீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைமையை ஏற்படுத்தலாம்.
அவ்வாறான ஒரு நிலைமையில் மூன்றாவதாக வருபவருக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது வாக்குகள் எண்ணப்படும் நிலை ஏற்படலாம். இந்த வாக்குகள்தான் என்பதுதான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாக்குகளாக அமையும். இந்த நிலையில் தான் ஜனாதிபதி தேர்தல் இம்முறை குழப்பங்கள் நிறைந்ததாக இம்முறை அமையலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. அதாவது, ஜே.வி.பி.யின் அதிகரித்த வாக்குப் பலம் தேர்தலில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தலாம்.
பிராந்திய அரசியல் நகர்வுகளில் இலங்கை ஒரு பிரதான இடத்தை பெற்றிருப்பதால், பிராந்திய வல்லரசுகள் மட்டுமல்லாது மேற்கு நாடுகளும் இலங்கையில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலை நுணுக்கமாக அவதானிக்கின்றன. அதனை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதற்கு என்ன செய்யலாம் என்றும் அவை ஆலோசிக்கின்றன.
2015 இல் மகிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவதற்கு இந்தியாவும், மேற்கு நாடுகளும் பின்னணியிலிருந்து செயற்பட்டதாக ராஜபக்ஷக்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார்கள். தமக்கு சார்பான ஒரு அரசை அமைக்க அப்போது அவர்கள் விரும்பினார்கள். அதனை சாதித்தார்கள்.
தற்போதும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் மறைமுகமான நகர்வுகளை அவதானிகக்கூடியதாக இருக்கும். யார் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதை மட்டுமன்றி யார் வரக்கூடாது என்பதிலும் இந்தச் சக்திகள் அவதானமாக இருக்கும். ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பது அவர்களுடைய முதலாவது தெரிவு.
ஜே.வி.பி. தலைவர்களை அழைத்து இந்தியா பேச்சுக்களை நடத்தியிருந்தாலும் கூட, அவர்கள் அதிகாரத்துக்கு வருவதையோ முக்கிய அரசியல் சக்தியாக உருவாகுவதையோ புதுடில்லி விரும்பவில்லை. மேற்கு நாடுகளின் நிலையும் இதுதான். ஒரு தீவிர போக்குடைய சீன சார்பு இடதுசாரிக்கட்சி அதிகாரத்துக்கு வருவதோ தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவாகுவதையே இந்தியா ஏற்றுக்கொள்ளாவது. அப்படியானால், எதற்காக ஜே.வி.பி. தலைவர்களை இந்தியா அழைத்தது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஜே.வி.பி.யின் பலங்களையும் பலவீனங்களையும் அறிந்துகொள்வதுதான் இந்தியாவின் உண்மையான நோக்கம்.
ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி.யினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை இல்லாமல் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் இருக்கின்றது. சஜித்தையும் ரணிலையும் இணைப்பதற்கு ஒரே வழி. இந்தப் பின்னணியில்தான் அதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர் என்ற சமரசத்தை சஜித் விரும்பவில்லை. மனோ கணேசன் உட்பட சில பிரமுகர்கன் இந்த முயற்சியில் ஈடுபட்டு தோல்வியடைந்திருக்கின்றார்கள்.
இந்த நிலையில் ஜே.வி.பி.யினால் ஜனாதிபதித் தேர்தல் கள நிலைமைகளில் எவ்வாறான மாற்றம் ஏற்படப்போகின்றது. தேர்தல் குறித்த உத்தியோகப்பற்றான அறிவித்தல் வெளிவரும் போது எவ்வாறான மாற்றங்கள் இடம்பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
652 total views, 2 views today