உளவதைத் தாக்குதலும், தற்கொலை மரணங்களும்
- மாலினி. ஜெர்மனி
அண்மையில் ஜெர்மனியில் 15 வயதுத் தமிழ் மாணவி ஒருத்தி சுய மரணத்தை வலிந்து தேடிக்கொண்டாள். பாடசாலையில் ஆசிரியர்களின் ஒதுக்குதலும், மாணவர்களின் உளவியல் துன்புறுத்தலும் அதற்கான காரணமாகக் கூறப்பட்டன. இரண்டு நாட்கள் ஊடகங்கள் ஊதின. பின் வழமை போல் அடுத்த செய்திக்குத் தாவிக்கொண்டன.
பாடசாலை,அப்படியேதும் நடக்கவில்லை என, தன் மீது கறையில்லாமல் நழுவிக் கொண்டது. உளவியல் தாக்குதல் என்பதை வெறுப்பான, ஏளனமான, ஒதுக்குதலான பார்வைகள் மூலமே ஏற்படுத்தி விட முடியும். அதற்கான ஆதாரங்களை எவராலும் சேமித்து வைத்து ஆதாரம் காட்ட முடியாது என்பதை நாம் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். காரணம் பாடசாலைகளில். ஆசிரியர்களின் ஆதாரமற்ற ஒதுக்கு மொழி அனேகமாக அது தான்.
இது குறிப்பிட்ட அந்த மாணவியின் மரணம் பற்றிய பதிவு மட்டுமல்ல. இந்த உளவியல் துன்புறுத்தல் இங்கு மட்டும் நேர்வதுமல்ல.. அந்தஸ்து,பொருளாதாரம்,சாதியம்,என பல்வேறுபட்ட அடிப்படையில் சமூகத்தில், வேலைத்தளங்களில், பாடசாலை களில் நாம் பிறந்த நாட்டிலுமே கூட அது எப்போதுமே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.. இன்னும் சொல்லப் போனால் ஆதரவற்ற,உறவுகளை அண்டி வாழவேண்டிய நிலையில் உள்ள குழந்தைகள் இருக்கும் குடும்பங்களில் தாராளமாகவே அது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.
இன்றைய குழந்தைகள் நாளைய சந்ததிகள். அவர்களுக்கு எதை வளங்குகின்றோமோ அதிலிருந்து தாம் கற்றுக் கொள்வதைக் கொண்டே இந்த உலகுக்கு அவர்கள் வழங்கப் போவதும் தீர்மானிக்கப் படப் போகின்றது என்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்காத ஆசிரியர்களோடும் பெரியவர்கலோடுமே கூடத்தான் குழந்தைகள் வளர வேண்டியிருக்கிறது.
வெளிநாடுகளில் எம் நிறம் காரணமாக, மேலும் எம் கலாச்சார அடையாளங்கள் புரிந்து கொள்ளப்படாமை காரணமாக.,தெளிந்த சிந்தனைப் போக்கற்ற பல்வேறு சமுதாயக் குழுக்களுடன் வாழ நேரும் போது, அவர் களிலிருந்து நிறையவே வேறுபட்ட கலாச்சார அடையாளங்களைச் சுமக்கும் நிர்ப்பந்தம் கொண்ட எம் குழந்தைகள் அதற்கு அதிகமாக முகங்கொடுக்க நேர்கிறது. கூடவே இங்குள்ள குழந்தைகள் பலரின் மனதில் பெற்றோரால் விதைக்கப்பட்டிருக்கும் நிறத் தீண்டாமை நச்சும் அதற்கோர் காரணம்.
இன்னொரு வகையில் பார்ப்போமானால் எம்மினத்தில், பல பிள்ளைகளின் பெற்றோர் மொழியறிவற்றிருப்பதும் அதன் காரணமாக புலம்பெயர் பொதுவெளிகளில் அவர்களது குரல்கள் தமக்கான உரிமைக்காகக் கூட ஒலிக்கும் வாய்ப்பின்றி தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கிடப்பது முக்கிய காரணம். எனலாம்.
புலம்பெயர்ந்த பலர் ஒன்றுக்குப் பலதாய் இங்கேயும் தாயகத்திலும் அசையும் அசையாச் சொத்துகளை வாங்கிப் போடுவதில் காட்டும் தீவிரத்தை அந்நாட்டு மொழி,அரசியல்,எமக்கான உரிமைகள்,குழந்தைகளின் பாடசாலைச் சூழல் அது ஆட்சி செலுத்தும் அவர்கள் மனநிலை, மனநிலை பிரதிபலிக்கப் போகும் எதிர்காலம் என்பவற்றில் காட்ட முயல்வதில்லை. அதன் காரணமாக பிள்ளைகளின் நிலை குறித்து ஆசிரியர்களுடன் பாடசாலை நிர்வாகத்துடன் உரையாடும், தம் நிலையைத் தீர்க்கமாக விளக்கும் திராணியை கொடுக்கும் மொழியறிவைப் பெற்றோர் கொண்டிராதவிடத்து பிள்ளைகளின் பிரச்சனைகள் பற்றி அவர்களால் அதிகம் பேச முடிவதில்லை. அப்படியே பேச வாய்த்தாலும், தாம் பேச வந்த விடயம் குறித்த உறுதிப் பாட்டில் தெளிவாக இருக்கும் நிலையற்று, நிர்வாகம் சொல்லும் மழுப்பல் விளக்கத்துக்குத் தலையாட்டி விட்டு வரும்படியே நேர்கிறது.
அந்த இடத்தில் தான் பிள்ளை நிராதரவாக உணரத் தொடங்குகிறது. தன் பிரச்சனை தீர்க்கப்படாதவிடத்து, தனிமையை, அதனால் தனக்கான பிரச்சனையைப் பூதாகரமாக உணரும் குழந்தை, தனக்குத் தெரிந்த வகையில் அதற்கான தீர்வாக மரணத்தைத் தேடித் தப்பிக் கொள்ள முனைகிறது.
மேற் குறிப்பிட்ட சிறுமி தன் டிக்டொக் பக்கத்தில் என் வாயும் கண்களும் கட்டப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருந்ததைப் போலவே இக்கொடுமையால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குழந்தையும் தன் கருத்துகள் செவிமடுக்கப்படவில்லை என்பதை ஒவ்வொரு வகையில் உலகத்துக்கு உணர்த்தத்தான் முற்படுகின்றன. அனேகமாக அவை செவிமடுக்கப்பட வேண்டிய அளவு பெரிய விடயமாக எண்ணப்படாமலும் போய் விடுகின்றன. சிறு பிள்ளை விடயம் என அதன் கனதி கண்டுகொள்ளப்படாமல் போய் விடுகிறது.
மாதா, பிதா, குரு தெய்வம் என்று எப்போதோ ஒரு சிறு வயதில் எமக்கு ஊட்டப்பட்டது போல இப்போது இந்த உலகமில்லை. ஆசிரியர் ஊதியம் பெறும் ஒரு பணியாளர் அவ்வளவு தான். எம் குழந்தை எத்தனையோவில் ஒன்று அவர்களுக்கு. இறந்து போனால் ஒரு செய்தி. அவ்வளவு தான். அறங்கள் பற்றி இப்போது யாரும் அறிந்து கொள்ளக் கூட முயற்சிப்பதில்லை என்றே நான் இந்த உலகைக் கணிக்கிறேன்.
குழந்தை தான் இயங்கும் சூழல் தனக்குப் பாதகமானதென அறியத்தரும் போது அவர்கள் அதற்கான பதிலைத் தீர்வைத் தர வேண்டிய கட்டாயமான இடத்தில் இருப்பவர்கள்.அதன் நாளாந்த சிறிய வட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்கும் பெற்றோர், மற்றும் ஆசிரியர்.
பாடசாலையில் உளவதை நிகழ்கின்றது என ஆசிரியர்களுக்கு அறியத்தரும் போது அதற்கான சரியான தீர்வை ஆசிரியர்களோ நிர்வாகமோ ஏற்படுத்தாத போது,அதற்காக அழுத்தம் கொடுக்கும் கடமை பெற்றோர்களுக்கானது. கூடவே தன் குழந்தைக்குப் பாதகமான விளைவு ஏற்படும் போது எந்த எல்லைக்கும் இழுக்கக் கூடியவர்கள் இந்தப் பெற்றோர் என்ற எண்ணம் பாடசாலை நிர்வாகத்தின் பதிவில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளல் எம் குழந்தைக்கான பாதுகாப்புகளில் ஒன்று.
தூரதிர்ஷ்ட வசமாக வெள்ளையின நிர்வாகங்களுக்கு முடிந்த வரை. முகங்கொடுக்கப் பின்னிற்கும் மனோநிலை யிலும், அப்படியே அவர்கள் அழைப்புகளை ஏற்றுச் சமூகமளித்தாலும் அவர்கள் கூறுவதற்குத் தலையாட்டு பவர்க்களுமாகவே எம்மவர்கள் பலர் இருக்கிறார்கள். இங்கும் மொழியறிவும் தெளிவின்மையும் அவசியமற்ற பணிவுமே அதிகமாக ஆட்சி செய்வதால் சமாதானங்களால் அவர்கள் எங்கள் குற்றச் சாட்டுகளைத் துடைத்து விட்டு தம் நிர்வாகங்கள் மீது படரும் கருமையை மறைத்துக் கொள்கிறார்கள்.
குழந்தைகளின் இப்படியான உளவியற் பிரச்சனைகள் பற்றிப் பேசுகையில் பாடசாலையில் உளவாற்றுகை வசதி உண்டு என்ற அவர்கள் கூறும் மேலோட்டமான பசப்பல்களை நம்பி விடுகிறோம்.அதே நேரத்தில் குழந்தையின் உண்மையான பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்ட தாகவும் எண்ணிக் கொள்கிறோம்
சமூகம் கொடுக்கும் அழுத்தங்களுக்கு மன உளைச்சல் இன்றி இலகுவில் தீர்வு கண்டு விட முடியாது. என்பதை வாழ்க்கை எமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் அனுபவங்களிலிருந்து பிள்ளைகளுக்கு வாழக் கற்றுக் கொடுத்தல் வளர்ப்பின் ஒரு பகுதி என்பதை உணர்ந்தோமானால், அவர்கள் மனம் திறந்து பேசும் பெற்றோராக, அவர்களைப் புரிந்து கொள்வது எவ்வளவு தூரம் எம் கடமையோ அதேயளவு முக்கியமானது சமூகம் பற்றிப் பிள்ளைகளுக்குப் புரிய வைத்தாலும்.
பிள்ளையின் சூழலை அது ஏற்படுத்தும் அழுத்தங்களை மாற்ற முயன்றோமானால் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் சூழலில் தாக்கத்துக்குப் பயந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.. ஆனால் பிள்ளைகளின் மனதைச் சூழலியள் சமூகத் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்கும் நிலைக்குத் தயார்ப்படுத்தி வைத்தோமானால் அந்த வாழ்முறை குழந்தைக்குப் பலமான மனத்தளத்தை உருவாக்கும்.
நாய் குரைக்கிறதா அதற்கெனக் கல்லெடுத்து எறியும் நேரம் கூடச் செலவு செய்யாமல் உன் பாட்டில் போ. குரைக்கும் அதன் குணத்தை மாற்ற முடியாது என்பது எவ்வளவு நிச்சயமோ அதேயளவு நிச்சயம் உன் மன உறுதியை எவராலும் குலைக்க முடியாது. என உறுதியாக நம்ப வைத்து விட்டால் ….. பதின்மம் கடந்து விட்டால் போதும் இந்த வாழ்வின் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கும் கலையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கி விடுவார்கள்.
419 total views, 6 views today