காத்திருக்கிறேன் கண்ணம்மா!
வாழ்வியல் வசந்தங்களில் அரிய பெரிய வரமாய் அமையக்கூடியது யாதென வியக்கும் போது???
ஊனுளம் உருக நம் மெய்யன்பை காதலன் ஃ காதலியிடம் வாரியிறைக்கும் உறவில், அவர்களால் நாம் காதலிக்கப்படுவதை தவிர, அவர்கள் காதலை நாமும் அனுபவிப்பதை விட வேறு எதுவாக அமையமுடியும் என ஊர்ஜிதமாகின்றது.
அவ்வாறு இவ்வுடலைச் சுமந்து வந்த ஆன்மாவின் தேவதாகம் இதுவென எண்ணும் வண்ணம் நயாகராவின் எழுச்சி போல் தூய நேய அன்பினால் அணையற்று அணைக்கும் கண்ணம்மாவின் காதலாழியுள் வீழ்கிறார் பாரதி.
“சுட்டும் விழிசுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரோ?
இரவு பகல் இயக்கமாய் சகல காரியங்களின் மூலமாய் துணையானவை சூரியனும், சந்திரனும் என் வாழ்வின் இயக்கமே நின் விழியசைவோ எனக் கருதியோ? இல்லை சிவபிரானின் வலக்கண் சூரியனாயும் இடக்கண் சந்திரனாயும் அமைவது போல் என் சிவமே, இறையே நீதான் கண்ணம்மா எனக் கடவுளிலும் காதலைப் பெரிதாய் மதிக்கும் நிலை கருதியோ? கண்ணம்மாவின் இரு கண்களையும் சூரியன், சந்தரின் என ஒப்பிடுகிறார்.
பெருஞான வெளியின் உயர் தடமாய் காதலைக் காணும் பாரதி, இரு விழிகளில் ஞானஒளி வீசுவதாலும், அகத்தினுள்ளாடும் காதல் தீ கண்களில் தெறிப்பதாலும், ஞாயிறும், திங்களும் இரு கண்களென உவமை சொன்னதாலும் விழி சுடர் எனக் கூறுகிறார். அதிலும் தன் புலன்களை அறியும் அறிவு கொண்டதாயும் குறிப்பறிந்து செயல்படக்கூடிய கண்கள் என்பதாலும் சுட்டும் விழிச்சுடர் என மேலும் மேன்மை சேர்க்கிறார்.
“வட்டக் கரிய விழி கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
விழியழகிலிருந்து விடுபட முடியாதவராய் இன்னமும் விழிமேல் தஞ்சம் புகுந்து வட்ட வடிவிற்கு உருவகப்படுத்த முயற்சிக்கிறார். ஒரு பெண்ணின் கண் உரு கொண்டு அவள் குணம் கூறும் வித்துவத்தன்மையில் வட்ட வடிவக் கண்கள் ஈர்ப்பின் முதலிடமாய், தேசுலவும் தெளிவிடமாய் அமையலா ஏலவே இவ்வடிவை மனத்திருத்தி சூரிய, சந்திரரை வட்ட உருவென வெளியிருப்படுத்தி உவமித்துள்ளார்.
விரிந்த வானம் போலான எல்லையற்ற என் காதல், இந்த சிறு வட்ட விழிக்குள் அடக்கம் என்று வானத்தோடு விரிவுபடுத்தும் பாரதி கருமை நிறத்தின் அழகிற்கும் துணையாகிறார்.
“பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல்லாயிரம்
நட்ட நடு நிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி”
அகக் கண்களுள் கண்ணம்மாவின் எழில் காணும் கற்பனைத் திரையில் அவளைப் பட்டு கருநீலப் புடவையில் காண்கிறார். ஆங்காங்கு தெரியும் அவள் அங்கச் செறிப்பை நடுநிசியில் தெரியும் நட்சத்திரம் என்கிறார்.
“சோலை மலரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்”
ஓர் சோலையின் எழில் அத்தனையும் ஒவ்வொன்றாய் அனுபவிக்கக்கூடிய பேரானந்த அழகு அங்கு தேனுண்ண வரும் வண்டிற்கு காத்துக் கிடந்து மொட்டவிழ்ந்த மலர்களை காணுமிடம் கண்ணம்மாவின் இதழ்கள் நினைவு மழையில் தூறலாகிறது. நம் அன்புணர்வின் ஒளியைப் புன்னகையால் மொழி பெயர்க்கும் அவள் சுந்தரப் புன்னகையை எண்ணுகிறார். அவை தன் வாழ்விற்கு மென்மையானவை, காதலிற்கு ஒளியூட்ட வல்லன என்பதனால் மலர் ஒளியிற்கு உவமிக்கிறார்.
“நீல கடலலையே – உனது
நெஞ்சின் அலைகளடி”
விரிந்து கிடக்கும் கடலுக்கு பேரழகு தந்து பெருவோலம் கூட்டி மெல்லக் கலை பயிலும் அலையழகிற்கு விலை ஏது? தொலைவிலிருந்தே ஆரவாரம் கூட்டி கரை தொட்டதும் அடங்கும் நீலக்கடலலை போல் எனைத் தீண்டினால் அடங்கவல்லன கண்ணம்மாவின் நெஞ்சலைகள் எனக் கூற முயற்சிக்கிறார்.
“கோலக் குயிலோசை உனது
குரலினிமையடி
வாலைக் குமரியடி – கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்”
ஒலிக்கும் ஓசைக்கும் இடையான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவராய், தன் செவிகளில் சுருதி சேர்த்து வரும் நாதமான ஓசை கூடி நின்ற அழகிய குயில்களின் பரிபாஷையல்ல உன் குரலின் இனிமையது. நாம் கூடும் வேளை நிசப்த வெளியில் சப்த சிருங்காரம் செய்யும் ஓசையது கண்ணம்மா. நீ குமரியல்ல வாலைக்குமரி இளங்கன்னி உனைத் தழுவிப் புணரக் காதல் கொண்டுள்னே என்கிறார் வாலைக்குமரி என்பதில் வயதைக் குறித்ததாகவின்றி அன்பினால் ஆனந்தம் வழிந்தோடவல்ல உறவினைப் பரிசளிக்கமு; காதலி காதலன் பாரதியின் கண்களில் என்றும் செல்லமாய் குழந்தையாய் இளமையாய் ப்ரியமாகிறாள்.
“சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி?”
பன்னெடுங்காலமாய் செய்யத்தக்கன, செய்யத்தகாதன என யாரோ போட்டு வைத்த வாய்ப்பாடுகளுள் முடங்கி பவித்திரமான ப்ரியங்களைப் புடவைக்குள் மறைத்து வழங்கங்களோடு துவைத்துப் போடும் சாத்திரம் ஏதுக்கு? அன்பின் தீரம் அறிந்தோர்க்கு உன்னத உறவு இற்றைக்கு ஏற்பட்டதல்ல முற்பட்ட பிறவிகளின் தொடர்தேடல் என்றுணர்ந்தோர்க்கு இந்த சாத்திரமும் சம்பிரதாய வழக்கங்கள் உண்டோ?
ஆன்ம பந்தமாய், கர்ம சம்பந்தமாய் இணையும் இரு ஆன்மாக்களை எந்த சாத்திர சக்தியுமாய் கட்டிப்போட்டு காவல் செய்ய விடலாமோ? என்று உறுதியாய் தம் உயிறுறவில் உண்மை கொண்டு கூறுகிறார்.
“மூத்தவர் சம்மதியில் வதுவை
முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனடி இதுபார்
கன்னத்தில் முத்தமொன்று”
இருமனம் இணைந்த ரகசிய சுகத்தை பரகசியப்படுதத்தும் திருமண முறைகளை நம்பி நாணாதே. ஆவற்றை நியமித்த நம் முற்பட்ட சந்ததியான மூத்தோர் சம்மதியில் பின்பு ஒரு காலத்தில் அவ்விதிகளை செய்வோம். அது நம் தூய பந்தத்திற்கான தேவையும் அல்ல. இத்தருணம் சருகான ஊரெனில் சிறகான எண்ணச் சுவையெனலாம் ஒன்றே ஒன்று தான்.
காத்திருக்கிறேன்…………… கண்ணம்மா!!
காத்திருக்கிறேன்
க-ன்-ன-த்-தி;-ல் மு-த்-த-மொ-ன்-று!!! முத்து முத்தாக எத்தனை கோடி இன்பம் வைத்தாய்.
329 total views, 3 views today