தீதும் நன்றும் பிறர் தர வாரா”
—பொலிகையூர் ரேகா
இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் நாம் அனுபவிக்கின்ற இன்ப துன்பங்களுக்கான காரணங்கள் நாம் மட்டுமே என்பதை உணர்தலே நம் வாழ்க்கைப் பாதையைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். நாம் வாழ்வில் நடக்கின்ற அனைத்துமே நம் முடிவுகளுடன் தொடர்புபட்டவைதான்.அதை மறந்துவிட்டு நம் துன்பங்களுக்கான காரணத்தை யாரோ ஒருவர் மீது சுமத்திவிட்டு நாம் பரிதாபத்திற்குரியவர்களாக முயற்சிக்கிறோம்.
எப்போது நம் தவறுகள்பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றோமோ அன்றுதான் நம் முயற்சிகளுக்கான சரியான முடிவுகள் கிடைக்கும்.எடுத்துக்காட்டாக நம் காலில் முள்ளைக் குத்திக்கொண்டால் என்ன சொல்வோம். “காலில் முள் குத்திவிட்டது” என்கின்றோம். நாம் இருக்கும் இடம் தேடி வந்து காலில் முள் குத்தியதா ; முள் இருக்குமிடத்தில் சென்று முள் குத்துவதற்கு நாம் காரணமாக இருந்தோமா என்பதில்தான் விடை உள்ளது. வேண்டுமென்று நீங்களாக முள்ளை எடுத்துக் குத்திக்கொள்ளவில்லை என்றாலும்; முள் குத்துவதற்குக் காரணமாக இருந்தது நீங்களோ, முள் இருக்குமிடம் குறித்த உங்கள் அறியாமையோ ஆகும்.
உங்களுக்கு நடக்கின்ற தீமைகள் நீங்கள் வலிந்து வாங்காவிட்டாலும் உங்கள் கவனக்குறைவாலோ, சரியான திட்டமிடலின்மையாலோதான் நடக்கின்றது. மற்றவர்கள் யாரும் வந்து துன்பத்தை ஏற்படுத்துவதில்லை. யாரோ ஒருவர் உங்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதற்கான வாய்ப்பை நீங்கள்தான் வழங்கியிருக்கின்றீர்கள் என்பதை உணர்தலில்தான் உங்கள் வாழ்க்கை பற்றிய புரிதல் தொடங்கும்.
ஆடை வடிவமைப்பதில் சிறந்த ஒருவர் பல நிறுவனங்களுக்கு வேலை கேட்டுச் சென்றுகொண்டே இருந்தார். அவருக்கான வாய்ப்பு பல ஆண்டுகளாக அமையவில்லை. பின்னர் பல இன்னல்களகத் தொடர்ந்து தானே சொந்தமாக ஆடை வடிவமைக்கத் தொடங்கிப் பல தோல்விகளின் பின் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் வாழ்க்கைப் பாடத்திலிருந்து நாம் பார்ப்போமானால் அவரின் திறமையைக் கண்டுகொள்ளத் தெரியாத நிறுவனங்களிடம் அவர் தொடர்ந்து வேலைக்கு முயற்சி செய்தமையே அவரின் தோல்விகளுக்குக் காரணமாய் அமைந்தது.
தன் திறமைக்கு மதிப்பளிக்காதவர்களை நாடிச் சென்று தன் தோல்விகளைத் தேடிக்கொள்வதற்கு அவரே காரணமாக இருந்திருக்கிறார். தோல்விகளிலிருந்து தனக்கான உத்வேகத்தைப் பெற்று பல முயற்சிகளின் பின்னர் வெற்றியும் கண்டுள்ளார். அவரறியாமல் அவர் தேர்ந்தெடுத்த தோல்விகளே இறுதியில் அவருக்கான வெற்றிக்கான வழியையும் கொடுத்தது.அவருக்கான தோல்வியையும், வெற்றியையும் அவராகவேதான் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் அவர் நேர்முகத்தேர்வு நடத்தியவர்களைக் குறை கூற முடியாது.ஏதோவொரு வகையில் அவர்கள் இவரை மதிப்பிடாமல் இருக்க இவரேதான் காரணமாக இருந்திருக்கப் போகிறார். அல்லது தன் வெற்றிக்கு அவர்கள் தேர்ந்தெடுக்காகதுதான் காரணம் என்று கூறவும் முடியாது. அவர்கள் தேர்ந்தெடுக்காத அனைவருமே சொந்தமாகத் தொழில் தொடங்கவில்லை. அந்தத் தனிப்பட்ட நபரின் முயற்சியே அவருக்கான வெற்றிக்கான வாய்ப்பை வழங்கியது. அவரது வெற்றியையும் தோல்வியையும் அவரேதான் வடிவமைத்துள்ளார்.
இந்த வாழ்க்கை அழகானது. நாம் நம்பும் மனிதர்கள் ஏமாற்றுவதையை, எம் முடிவுகள் பிழைத்துப்போதலையோ கொண்டு நாம் அடுத்தவர்களை ஒருபோதும் குறைகூறிவிட முடியாது. ஒருவர் ஏமாற்றும் அளவுக்கு அவர்களைப் பற்றிய உண்மை அறியாது நம்பியது எம் தவறாகும். எம் முடிவுகள் குறித்த அதீத நம்பிக்கையில் சிலவற்றைத் தொடங்கிவிட்டு முழிப்பதற்கும் நம் மீதான நம்பிக்கைதான் காரணமாகிறது. நன்மையோ,தீமையோ எல்லாம் நாமாகத் தேடிக்கொள்வதுதான். அது எம் அறியாமையாகவோ விதிப்பயனாகவோ இருக்கலாம். ஆனால் நாம் சரியாகச் சிந்தித்துச் செயலாற்றுவதன் மூலமே அதை வெல்ல முடியும்.
நன்மையில் முடிவதை அளவோடு கொண்டாடலாம். தீமையில் முடிவதை நம் அனுகுமுறைகளால் கையாளலாம்.ஆம்! தீதும்நன்றும் பிறர் தர வாரா.
653 total views, 12 views today