அன்று வந்ததும் இதே நிலா
அன்று வந்ததும் இதே நிலா
- கௌசி . சிவபாலன் யேர்மனி
துன்பங்களும் துயரங்களும் இன்பங்களும் நாம் கேட்டு வருவதில்லை. அவை இல்லாத வாழ்க்கையும் சுவைப்பதில்லை. ~~அன்று வந்ததும் இதே நிலா. இன்று வந்ததும் இதே நிலா|| என்று கண்ணதாசன் எழுதியதுபோன்று பூமி சுழல்கின்ற தளத்திலே அனைத்தும் அன்றும் இன்றும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், நாம் வாழ்கின்ற காலத்தில் அறியப்படாது நடந்தன என்பதே உண்மை. பிரச்சினைகளும், நோய்களும், துன்பங்களும், மனக்கவலைகளும் வேறுவேறு வடிவங்களில் இருந்தன என்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை.
இல்லையென்றால், ஒளவையும்
~~உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம்
உடன்பிறந்தே கொல்லும் நோய்.. .. .. ||
என்று நோய் எம்மோடு கூடவே இருந்து கொல்லும் என்று பாடியிருக்க மாட்டார். உடன்பிறந்தாரினால் வருகின்ற வலிகள் பற்றியும் பாடியிருக்க மாட்டார்.
கவலைகள், மகிழ்ச்சிகள் மனிதர்களுக்கு மட்டுமேயுள்ள பண்பல்ல. அனைத்து உயிரிங்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன. முதலிலே நோய்களை எடுத்துப் பார்த்தால், இரமண மகரிசிக்கும் புற்றுநோய் வந்து இறந்தார் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், இக்காலத்தில் பொலித்தீன் பாவனையில் இருப்பதனாலும், சிகரெட் புகைப்பதனாணேயுமே புற்றுநோய் வருகின்றது, அக்காலத்தில் அயோடின் உப்பில்லாத காரணத்தில் தைரோயிட் பிரச்சினை வரவில்லை என்று இக்காலப் பயன்பாடுகளினால் நோய்கள் வருகின்றன என அடுக்கிக் கொண்டு போகமுடியாது. முற்காலத்திலும் நோய்கள் ஏற்பட்டன. ஆனால், இதுதான் என்று அறியாது ஒரு காரணத்தை எடுத்துக் காட்டினார்கள். மாரடைப்பால் ஏற்பட்ட இறப்பே அன்றைய பேய் அடித்து ஏற்பட்ட இறப்பு. சிறுகுழந்தை இறப்பு அக்காலத்தில் மிதமிஞ்சிக் காணப்பட்டன. மருத்துவ வளர்ச்சியானது இறப்பு வீதத்தைக் குறைத்தது.
1330 இலே ~~கருப்புச்சாவு|| என்று அழைக்கப்பட்டு தௌ;ளுப்பூச்சிகளில் வாழுகின்ற எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பற்றுயிரியினால், ஆசியா, ஐரோப்பா, வட ஆபிரிக்கா, என்று பரவி 7.5 – 20 கோடி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 1520 இல் மெக்ஸிக்கோ நோக்கிப் புறப்பட்ட ஸ்பானியக் கடற்படை வீரர்களில் ஒருவரான ஃபிரான்சிஸ்கோ த எக்வியா என்பவர் சுமந்து வந்த பெரியம்மை நோயால் மெக்சிக்கோவில் 2.2 கோடி மக்கள் இறந்தனர். முதலாம் உலகப் போரின் போது 1918 ஆம் ஆண்டு பதுங்கு குழியிலிருந்த போர்வீரர்களும், போர் முடிந்த வீரர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் சென்ற போது 50 கோடி மக்கள் நச்சுயிரியால் பாதிக்கப்பட்டு இறந்தனர். உலகப்போரில் 4 கோடி மக்கள் இறந்தனர். 2019 இல் வந்த உயிர்கொல்லி மட்டுமே உயிர்களைக் கொன்றன என்று சொல்ல முடியாது.இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் உலகத்திலிருந்து உயிர்கள் பறித்தெடுக்கப் படுகின் றார்கள். பறித்தெடுக்கப்பட வேண்டிய அவசியமும் இருக்கின்றது.
நோய், இறப்பு மட்டுமல்லாமல் மனக்கவலையை வெளியே சொல்லமுடியாத பலர் ~~ஒரு மனிதன் எவ்வளவு பிரச்சினைகளைத் தான் தாங்குவது|| என்று மனந் நொந்து வாழ்வதை நாம் காணமுடிகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை. நூலாசிரியர்கள் தமது நூல்களை யாருமே வாங்குவதில்லை. வாசிப்பதில்லை என இக்காலகட்டத்திலே புலம்புவதைக் காணக் கூடியதாகவுள்ளது. யாருமே நூல்களை எழுதுங்கள் என்று யாரிடமும் அடம்பிடித்ததில்லை. எழுதியதை யாரும் வாங்கவில்லை என்று கவலை கொள்ளத் தேவையில்லை. இத்தகைய கவலை தற்கால எழுத்தாளர்களை மட்டுமே வாட்டவில்லை. இதனை அழகாக விளக்குகின்றார் சீர்காழி அருணா சலக்கவிராயர்.
கால்வீழ்ந்து நம்மைக் கவிபாடச் சொன்னானோ
மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் – நூலறிந்து
தந்தக்காற் றந்தான் றராக்கா னமதுமனம்
நொந்தக்கா லென்னாகு மோ ?
எமது காலிலே விழுந்து ஒரு கவிதை பாடுங்கள் என்று எவராவது செல்வம் படைத்தவர்கள் வந்து கேட்டார்களா? இல்லையே நாமாகவே விரும்பிப் பாடினோம். அப்படிப் பாடிய பாட்டிலுள்ள நயத்தை அவன் அறிந்திருந்தானேயாகில் வெகுமதி கிடைத்திருக்கும். ஆனால் அவன் அப்படித் தராத போது நீ வருந்தி என்ன பயன் என்று பாடுகிறார். இராமச்சந்திர கவிராயர்
வஞ்ச கர்பா னடந்தலைந்த காலிற்புண்ணும்
வாசறொறு முட்டுண்ட தலையிற் புண்ணுஞ்
செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணுந்
தீருமென்றே சங்கரன்பாற் சோர்ந்தே னப்பா
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலா லுதைத்தபுண்ணுங் கோபமாகப்
பஞ்சவரி லொருவன்வில்லா லடித்த புண்ணும்
பாரென்றே காட்டிநின்றான் பரமன் றானே
என்று ஏமாற்றிப் பழக்கப்பட்டவர்களிடம் உதவி கேட்டு அயராது அலைந்து கால் நோ ஒருபுறம், ஒவ்வொரு வீட்டின் தலைவாசலுக்கும் சென்ற போதெல்லாம் தலை அடிபட்ட நோ ஒருபுறம், நான் எழுதிய கவிதைகளை யாருமே ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனாலே ஏற்பட்ட மனநோயைத் தீர்த்து வைக்க சிவன் கோயிலுக்குச் சென்றால், அங்கு இருந்த ஒருவர், பரமசிவன் பிரம்படியால் பட்ட நோவும், பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும், கண்ணப்பநாயனார் தன்னுடைய காலால் கண்ணைப் பொத்தியதால் ஏற்பட்ட புண்ணும் எனக்கு இருக்கிறது பார் பார் என்று காட்டியதாகச் சொன்னார் என்று பாடுகிறார். பரமனுக்கே இந்த நிலை என்றால், கவலைகளும், மனக்கசப்புக்களும், நோயும் சாதாரண மனிதர்களுக்கு வருவது ஒன்றும் புதுமையில்லையே.
உணவு சேர்க எறும்பும் ஓடும், தேனியும் பறக்கும், ஒருவேளை உணவுக்காகப் புலியும் அலையும். சிவனுக்கும் பார்வதிக்கும் குடும்பப் பிரச்சினை இருந்தது. சீதையால் இராமனும், இராமனால் சீதையும் பல கஷ்டங்களைக் கண்டார்கள். உடற்குறைபாடுள்ள இரட்டையர்கள் பாடல்களைக் கொண்டு அலைந்தார்கள். பல கோடீஸ்வரர்களும், பிரபலங்களும் மண்டை வீங்கிய பிரச்சினைகளைக் கொண்டு வாழுகின்றார்கள். எனவே மண்ணில் விழுந்த மனிதர்கள் மண்ணுக்குள் போகும் வரை வருவது எதுவானாலும் வாழ்ந்த பார்க்க வேண்டியதே அவசியம்.
287 total views, 3 views today