கொஞ்சம் நான், கொஞ்சம் கலை
-கவிதா லட்சுமி .நோர்வே.
………………………………
நாட்டியமும் நடனமும் என் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நான் சில வருடங்களிற்கு முன்புவரை நினைத்திருக்கவில்லை. எனது 17வது வயதிற் தான் முறையாக நாட்டியம் கற்கத் தொடங்கினேன். பரதநாட்டியம் கற்பதிற் பயனில்லை. நாட்டியக்கலை மதம் சார்ந்த சடங்குகளாகவே இருக்கிறது என்பதால் வீட்டில் மாமாக்களுக்கு நாட்டியத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்கவில்லை. கராத்தே கற்றுக்கொடுத்தாற் கூட பயனுண்டு என்ற வாதமும் உரையாடலும் வீட்டில் நடைபெற்றது.
நான் நாட்டியம் கற்றது எனது தனிப்பட்ட விருப்பின் பேரிலேயே.
மாமாக்கள் இடதுசாரி சிந்தனைவாதிகள். அம்மா கொஞ்சம் எனது பக்கம் நின்றார். கற்கத் தொடங்கி மூன்று வருடங்களிலேயே அரங்கேற்றம் நடாத்த எனது ஆசிரியர் முன்வந்தார். நான்காவது வருடமே எனது சார்பில் நடனக்கலைக்கூடம் ஒன்றும் தொடங்கியாயிற்று. கலைக்கூடம் தொடங்குவதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. அது அம்மாவின் வேண்டுகோள்.
மாமாக்கள் அப்போதும் எனது நாட்டிய அரங்கேற்றத்தாலோ,எனது கலைக்கூடத்தாலோ ஒன்றும் பெருமிதப்பட்டு விடவில்லை.கிண்டலும் கேலியும் வீட்டில் நடக்கும்.
அரங்கேற்றத்தில், – பரத நர்த்தகி, நாட்டியக் கலாமயூரம், நாட்டியக் கலாஜோதி போன்ற பட்டங்கள் எனக்கு அளிக்கப்பட்டன. கலாவித்துவான்களின் காலில் விழுந்து பெற்ற பட்டங்கள் தானே என்ற கிண்டல்தான் வீட்டிலிருந்து வந்தன. அந்தப் பட்டங்கள் எதனையும் நான் பயன்படுத்துவதுமில்லை, எனது அறிதலுக்கு உட்பட்டு எவரையும் பயன்படுத்த அனுமதிப்பதுமில்லை.
அரங்கேற்றம் நடந்ததையிட்டும் யாரும் வீட்டில் அலட்டிக்கொள்ளவில்லை. அம்மாவுக்குக் கொஞ்சம் பெருமை. அது அப்பா இல்லாமல் தான் தனியே மகளுக்கு அரங்கேற்றம் செய்ததில் வந்த பெருமிதம்.
ஓரிரு வார்த்தைகள்தான் எனினும் வீட்டிலில் இருந்து வந்த கிண்டல்கள் என்னை சிந்திக்க வைத்தன. காலில் விழுந்து தொழுதல் ஏன் என்ற விடயத்தைப் பற்றிக் கொஞ்சம் தேடத் தொடங்கியிருந்தேன். கால் தொழுதல் பற்றித் தேடி அறிந்த விடயங்களின் பேரில் எந்தக் குழந்தைகளையும் எனது காலில் ஒருபோதும் விழவைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தேன். அன்றிலிருந்து நானும் யார் காலிலும் விழுவதில்லை.
சின்னச் சின்னப் பட்டாம் பூச்சிகளைப் போல இருக்கும் குழந்தைகளைக் காலில் விழ வைப்பதுதான் எத்தகைய மனநிலை? இம்மனநிலை எங்கிருந்து வருகிறது. உண்மையில் அது குழந்தைகளுக்கு எதைக் கற்றுக் கொடுக்கிறது? கற்றதைத் தக்கபடி எடுத்துச்செல்வதுதானே ஆசிரியர்களுக்கு மனத்திருப்தி கொடுக்கும் விடயமாக இருக்கமுடியும்.
நோர்வே மண்ணில் முதற் தலைமுறையினரே நடன நிகழ்ச்சிகளும், அரங்கேற்றங்களும் நடாத்தி வந்த காலத்தில், நடன நிகழ்வு ஒன்றினையும் அரங்கேற்றம் ஒன்றினையும் 2006ஆம் ஆண்டு எமது கலைக்கூடம் நடாத்தியது. இது இரண்டாம் தலைமுறையின் முதல் முயற்சியாகும்.
நாட்டிய நிகழ்வுகள் எப்போதும் கடவுளரின் புராண இதிகாசக் கதைகளும் பக்தி மார்க்கங்களும் அச்சுப்பிசகின்றி மேடைகளை வலம் வந்து கொண்டிருந்த நிலையில் எமது முதலாவது அரங்கேற்றம்- ‘போதும் இந்தப் பூமியிலே போர்க்கோலம்’ என்ற கருத்தை எடுத்துக் கையாண்டது. ‘கண்ணகி, கண்ணம்மா’ என்ற இரு பாத்திரங்களுக்குமான உரையாடல் ஒன்று நடன நாடகமாகவும் எழுதப்பட்டு நிகழ்த்தப்பட்டது.
சடங்குகளைப் போர்த்திக்கொண்டிருக்கும் நாட்டிய வடிவத்தை நான் ஒரு மொழி வடிவமாகப் பார்க்கத் தொடங்கினேன். வாசிப்பும் தேடலும் நாட்டியத்தின் மேல் இருந்த விருப்பும் புதிய படைப்புகளை நோக்கி என்னை நகர்த்தின.
கலை – மொழி
நாட்டியத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு இருக்கின்றது. இன்றைய பெரும்பான்மை நாட்டியக் கலைஞர்கள் ஏறத்தாழ நூறுவருட கால வரலாற்றில் இருந்தே நாட்டிய வரலாற்றைக் கணித்தும் உள்வாங்கியும் வைத்திருக்கின்றனர். பக்தி சார்ந்த சடங்குகளாகவும், புனிதம் என்ற போர்வைகளுக்குள்ளும், கூறியது கூறலே அதன் மரபாகவும் ஆகிவிட்ட நாட்டியத்திற்குப் பின்னால் அரசியல் உண்டு. வர்க்கப்பாகுபாடு உண்டு. நாட்டியம் சமபாதத்தில் உறைந்துவிட்ட கலைவடிவமாக இருப்பதும் துயரே.
நாட்டியத்தின் கருப்பொருளையும், கட்டுமானத்தையும் பிரித்தறிய முடியாத நிலைக்குள் சிக்குண்டு கிடப்பது ஒரு நூற்றாண்டுக் காலம்தான். அதன் பின்னணியும் வரலாறும் மிக நீண்டது. இக்கலை வடிவத்தை நான் ஒரு மொழி வடிவமாகவே பார்க்க விளைந்ததனால் கூறியது கூறல்களைக் கடந்து ஓர் இலக்கியப் படைப்பை உருவாக்குதல் போலவே நாட்டியம் செய்ய விளைந்தேன். பேசப்படாத பக்கங்களை நாட்டியத்தினூடு காண விளைந்தேன்.
புதிதாக, சுயமாக ஒன்றைக் உருவாக்காத ஒன்றில் இருந்து படைப்புகள் வருமா? கூறியது கூறல் படைப்பாகுமா? தேடலும், வாசிப்பும், கற்றுக்கொள்தலும் இன்றி படைப்புகள் சாத்தியமன்று. எமது காலங்களை கொடுத்தாக வேண்டும்.
அதன் விளைவே இந்நடன நாடகங்கள்:
• கண்ணகியும் கண்ணம்மாவும் – அறம் சார்ந்த உரையாடல்
• குருசேத்திரம் – இன்றைய அரசியல்
• பறை – ஒடுக்குமுறைகள், வர்க்கப் பாகுபாடும், கலைகளில் ஏற்றத்தாழ்வும்
• சிற்பியின் நரகம் – கருத்திழந்து போன கடவுட் கோட்பாடும் , ஒரு கலைஞனின் துயரும்.
• ஞானரதம் – ஐந்து வேறுபட்ட உலகங்களும், மனித மனமும்
• உயிர்மிகும் ஓவியங்கள் – இரவிவர்மர் ஓவியத்தினூடாக இந்தியக் கலைமரபின் பல்வகைமையின் வெளிப்பாடு
• சூர்ப்பணகை – சொல்லப்பாடாத கம்பனின் வரிகளும், பெண் நிலையும்: நிலைபெற்ற பாத்திரங்களின் மறுபக்கம்.
தமிழ்ச் சமூகத்தில் கலைஞர்கள்
…
தமிழ்ச் சமூகத்தில் படைப்பாளியாய் இருப்பது அத்தனை சுலபமன்று. இரண்டாம் மூன்றாந்தரக் கலைகளைக் கொண்டாடும் சமூகமே பெரும்பான்மையினர். இசையை மட்டும் முதலீடாகக் கொண்ட திரையிசைப் பாடல்கள், பெண்ணுடலை வியாபாரமாக்கிப் பொருளீட்டும் (பெரும்பான்மை) திரையுலகு. திரையுலகக் கலைஞர்களை வைத்து மக்களைத் திரட்டும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் என தமிழ்க் கலையுலகு மிகக் குறுகிய மனமுடையது.
வளர்முக நாடுகளில் பல விடயங்கள் சமாந்திரமாக நகர்ந்துகொண்டிருக்கிறன. தமது நுண்கலைகளை ஊக்குவிக்கவும், நிகழ்த்தவும், பாதுகாக்கவும்,ஆய்வு செய்யவுமான அரசின் பங்களிப்பு அந்நாடுகளில் முதன்மை யானவை. அதேபோலப் பொழுதுபோக்குக் கலைகள் போன்றவையும் கூட தேசிய அளவில், தொலைக்காட்சிகளில் தனது இடத்தைத் பிடித்திருக்கும். தனக்கென்று ஒரு நாட்டை தளமாகக்கொண்டு இயங்கும் கலைகளுக்கும், மொழிக்கும் இத்தகைய தொடர்ச்சியும் வளர்ச்சியும் சாத்தியப்படுபவை.
தனக்கென்று ஒரு அரசைக் கொண்டிராத தமிழ்ச் சமூகத்திற்கு வியாபார இலக்கற்ற கலைப்படைப்புளை நகர்த்திச் செல்வது சாத்தியமற்றது. வளர்முக நாடுகளிற் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அந்த அரசின் சில வளங்கள் கிடைத்தாலும் அவை குறிப்பிட்ட சில கருப்பொருட்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கும் அரசியல் உண்டு, எதை மக்கள் கலையாக்க வேண்டும் என்பதைப் பொறுத்தே வளங்களும் அளிக்கப்படுகின்றன. அந்தந்த நாட்டின் கொள்கைகள், பார்வைகள், கலைகண்ணோட்டங்கள் என்பவை சார்ந்தே புலம்பெயர் சமூகங்கள் பயணிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளன. காலனியத்துவத்தின் இன்னொரு ஆதிக்க வடிவம் என்றே இந்நகர்வைப் பார்ககமுடிகிறது.
தற்போதய காலங்களில் எமது சமூகத்திலும் யாரும் ஆழமான படைப்புகளைத் தேடுவதில்லை. விற்கப்படும் பொருட்களைத்தானே கடைகளும் இட்டு நிரப்பும். தமிழ் அமைப்புகளும், தனிநபர் நிறுவனங்களும் ஊக்குவிப்பதும் இத்தகைய விற்கத்தகுந்த மேலோட்டமான விடயங்களையே. சொல்லப்போனால் திரையிசையும் திரைநடனமும் மட்டுமே புலம்பெயர் சமூகத்தின் பெருங்கலைவடிவங்களாக மாறியிருக்கின்றன. தமிழ் அமைப்புகளின் கலையரங்கங்கள், தமிழர் விழாக்கள், தனிநபர் கொண்டாட்டங்கள் என்று அனைத்தும் ஒருவகையான மாதிரிகளாவே காணக்கிடைக்கின்றன. இணையத்தளங்களும் இதன் குறுகிய வடிவத்தையே ஊக்குவிக்கின்றன.
புலம்பெயர் நாடுகளில் அடுத்த தலைமுறைகளின் கல்வி மற்றும் தொழில் என்பவைகள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. அடுத்தகட்ட நகர்வாகத் தமிழ்ச் சமூகம் செயலாற்றும் கலைவடிவங்கள் இரண்டு. ஒன்று திரையிசையும், திரை நடனமும். மற்றயது கொண்டாட்டங்களுக்கான ஆடை அலங்கார ஒப்பனைக் கலை. இயல் இசை நாடகம் தமிழர் கலை என்பர். இதில் இசை மட்டுமே கடத்தப்படுகிறது. அதுவும் திரையிசை மட்டுமே. இது புலம்பெயர் தமிழச் சமூகத்தின் பெருமிதமா? பெருந்துயரா?
அர்ப்பணிப்பும் ஆத்மார்த்தமான தேடலும் சமூக அக்கறையும் கொண்டு நகரும் நதிகளாக சில கலைஞர்களும் அமைப்புகளும் உண்டு. தளமோ, வளமோ அற்ற இந்நதிகளுக்கு தம் அகமே கடல்.
562 total views, 9 views today