தொழிலாளர் தினம்
விடுமுறைகள் அர்த்தம் தெரியாமலே கழிந்துபோகின்றன!
- வெற்றி மைந்தன்;
மேதின விடுமுறையில் இரண்டு நண்பர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் ?
“டேய் மச்சி.. எப்படிடா இருக்கே ?” என்பது முதல் கேள்வி. “என்னடா பண்றே” என்பது இரண்டாவது கேள்வி.
இந்த இரண்டு கேள்விகளைத் தாண்டித்தான் பெரும்பாலான உரையாடல்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்லும்.
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்” என்றார் பாரதியார்.
நமக்கு தொழில் என்பது வருமானத்தை ஈட்டும் ஒரு விஷயம் மட்டுமல்ல. அது நமது அங்கீகாரம். நமது வாழ்வின் ஒரு அடையாளம். வேலையில்லாமல் இருப்பது என்பது நமது பொருளாதாரத்தோடு மட்டும் சம்பந்தப்பட்டதல்ல, அது நமது சுயத்தையும் சார்ந்தது.
இது இன்று நேற்று தொடங்கியதல்ல. தானே ஒரு தொழிலாளியாய் மாறி உலகத்தை உருவாக்கினார் கடவுள். ஆதாமைப் படைத்து சர்வமும் நிரம்பியிருந்த ஏதேன் தோட்டத்தில் வைத்தவர், கூடவே “இந்தத் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும்” என ஒரு கட்டளையையும் கொடுத்தார். உழைப்பின் தேவை கடவுளிடமிருந்து ஒரு கட்டளையாகவே மனிதனுக்கு வந்தது. இயேசுவும் தனது இளமைக் காலத்தில் ஒரு தச்சுத் தொழிலாளியாக பணியாற்றினார்.
இந்து மதமும் உழைப்பின் மகிமையைப் பேசுகிறது. இறைவனே இங்கு விஸ்வகர்மா எனும் முதல் தொழிலாளியாக பரிமளிக்கிறார். “உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும்” என்றார் நபிகள் நாயகம். இப்படி உழைப்பு என்பது ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிணாமத்தையும் பெற்று விடுகிறது.
உழைப்பு தான் உலகின் வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. ‘உழைக்காதவன் உண்ணலாகாது’ என்பதன் காரணம், உழைப்பு என்பது நமது கடமையாய் மாற வேண்டும் என்பது தான். நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் தொழிலாளிகளில் வியர்வையும், கலையும், பெருமூச்சும், கண்ணீரும் கலந்திருக்கிறது.
ஒரு தொழிலாளி சிரிக்கும் போது இறைவன் சிரிக்கிறார். ஒரு தொழிலாளி கண்ணீர் விடும்போது அவர் கண்ணீர் விடுகிறார். தொழிலாளிகளின் வியர்வையைச் சுரண்டி அதில் மெத்தை அமைத்துத் தூங்கும் ஏகாதிபத்ய சிந்தனைகளை எதிர்த்து நின்ற வரலாறு ஏராளம் உண்டு. அந்த எதிர்ப்புகளின் நினைவலைகள் தான் தொழிலாளர் தினமாக மிளிர்கிறது.
ஒரு நாளை மூன்றாகப் பிரியுங்கள். ஒரு எட்டில் உழையுங்கள். ஒரு எட்டில் ஆனந்தமாய் இருங்கள். ஒரு எட்டில் நிம்மதியாய் உறங்குங்கள். இது தான் ‘வேலை வாழ்க்கை சமநிலை’ பேணும் ஒரு நல்ல முறை. ஆனால் தொழிலாளர்களோ 12 முதல் 20 மணி நேரம் வரை கடுமையாக உழைத்து, களைத்து, போதிய வருமானமும் இல்லாமல் ஆனந்தத்தையும், உறக்கத்தையும் தொலைத்து வாழ்ந்தார்கள்.
1806ம் ஆண்டு இந்த நசுக்குதலுக்கு எதிரான முதல் குரல் அமெரிக்காவில் ஒலித்தது. ஒலித்த குரல்களில் குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. ஆனாலும் நீறு பூத்த நெருப்பு போல குரல்கள் வலுவடைந்தன. 1837ல் அமெரிக்காவில் ஒரு சட்டம் இயற்றினார்கள். இனிமேல் பத்து மணி நேரம் தான் வேலை. ஆனால் அது அரசுப் பணியாளர்களுக்கு மட்டும் என அந்த அறிவிப்பு பிரகடனம் செய்தது. மற்றவர்கள் உதாசீனம் செய்யப்பட்டார்கள். 1956ம் ஆண்டில் தான் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் விடியல் கிடைத்தது. அந்த தினம் மே1! தொழிலாளர் தினம் !!
வியர்வையும், ரத்தமும், கண்ணீரும் கலந்த வரலாறு தொழிலாளர் தினத்துக்கு உண்டு. ஆனால் இன்று பெரும்பாலும் இந்த தினம் மறக்கப்பட்ட ஒரு தினமாக மாறிவிட்டது. “தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என மீண்டும் ஒரு குரல் ஒலிக்க வேண்டிய தேவை இன்று உண்டு.
முதலாளிகளின் கார்களுக்குக் கீழே கம்பளம் விரிக்கும் இன்றைய நிறுவனங்களும், ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் ஏழைகளின் நலனையோ தொழிலாளர்களின் நலனையோ கருத்தில் கொள்வதில்லை. ஆலைத் தொழிலாளி அழிந்தால் என்ன நான் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆடையை இறக்குமதி செய்வேன் எனும் சிந்தனை தான் அவர்களுக்கு.
விவசாயி பட்டினியின் ஆடையை உடுத்திக் கொண்டு, எலிகளைத் தின்று வாழ்க்கை நடத்துகையில், பணப் பெருச்சாளிகளின் பாக்கெட்களில் அரசாங்கம் இளைப்பாறுகிறது. கிரிக்கெட் வீரர்களின் ஏழாவது காதலிக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட பட்டினியால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயியின் உயிருக்குக் கிடைப்பதில்லை.
ஏதோ ஒருவயலில் உழைத்து கண்ணீர் பாசனம் செய்து நெல் விளைவிக்கும் விவசாயி நமது சகோதரன் எனும் எண்ணம் நமக்கு வரவேண்டும்.
காய்கறி விலை ரொம்ப ரொம்ப மலிவு என குதூகலிக்கும் போது, ‘ஐயோ ஆண்டு முழுவதும் இதை பயிரிட்ட உழைப்பாளியின் வீட்டில் ஏதேனும் மிஞ்சியிருக்குமா ? அவனுக்கு கொள்முதல் விலையால் ஏதேனும் பயன் கிடைத்திருக்குமா ?” எனும் பதட்டம் வரவேண்டும்.
ஒரு தொழிலாளியின் குடும்பம் பட்டினியால் வாடும் போது நமது உணவு தொண்டைக்குழியில் ஒரு நங்கூரம் போல கனக்க வேண்டும். ஏனென்றால் தொழிலாளர்கள் என்பவர்கள் நம் உயிரின் நீட்சி, இந்த புவியின் மாட்சி.
தொழிலாளர்களுக்குத் தோள் கொடுக்க வேண்டாம். இதயங்களைக் கொடுப்போம்.
554 total views, 2 views today