கண்ணகி’ திரைப்படத்தை முன்வைத்து
கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்! சேர்ந்து வாழுதலில் இருக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு மோதிரத்தைக் கொடுத்து, மணம் புரியக் கேட்கிறான். வேண்டாம் என்றால் மறுத்துவிட்டு நகர்வதுதானே பண்பு. அதைவிடுத்து மோதிரத்தைக் காலால் உதைத்து வீழ்த்தி ஒரு குத்தாட்டம் போட்டு ஒருவனை அவமதிப்பது என்ன மனநிலை? திருமணம் செய்யக் கேட்ட ஒரு ஆண்மகனை இப்படியா நடாத்துவது என்ற கேள்வி இக் காட்சியைப் பார்த்தபோது எனக்கும் தோன்றியதுதான். ஆனால் யோசித்துப் பார்த்தால், இந்த சமூகத்தில் எத்தனை மனைவியர் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.எத்தனை பெண்களின் மேல் அசிட் ஊற்றப்படுகிறது.எத்தனை பெண்கள் ஆணவக்கொலை, சிசுக்கொலை என்று உயிர் பறிக்கப்படுகின்றனர். எத்தனை பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஒரு பெண்ணின் ஒரு உதை மட்டும் ஏன் எம்மை இத்தனை கோபப்படுத்துகிறது?
கதைக்கு உள்ளும் வெளியும்
எது கலை?
கலை என்பது என்ன? பெரும்பான்மை சமூகம் விரும்பவதெல்லாம் சிறந்த கலையாகிவிடுமா?நாயக முன்னிலைப்படுத்தல்கள், சமூகத்தை ஒடுக்கும் பஞ்ச் வசனங்கள், யதார்த்தமற்ற திரைக்கதைகள் தான் சிறந்த திரைப்படங்களுக்கான அடையாளமா அல்லது அளவுகோலா? பெண் உடலை வியாபாரப் பெருளாக்கும் காட்சிகளை, இலட்சியப்படுத்தப்பட்ட உடல்களை, பெண் ஆளுமையைச் சிதைத்து, நலிந்த மலினமான பாலினமாக்கும் உத்திகளை, எல்லா ஆணிகளையும் நாயகனே (ஆண்) பிடுங்குவான் என்ற பார்வையை, இரட்டை அர்த்தத்தில் வக்கிரத்தைக் கொட்டும் பாடல்களை, வசனங்களை, நகைச்சுவைகளைச்; சிறந்த கலையாக்கம் எனலாமா? ஆனால் இவைதான் இன்றைய சமூகத்தில் நிலவும் ‘பெருங்கலை வளர்ப்புப்’ போக்காக இருக்கின்றது. தமிழக அரசும் தமிழ் ஊடகங்களும் தமிழ் அமைப்புகளும் எதிர்காலச் சந்ததிக்காய் வளர்த்தெடுத்துக்கொண்டிருப்பது இந்த வக்கிரங்களைத்தான்.
இத்தகைய திரைப்படங்கள் எமது சமூகத்தை உயர்ந்த சிந்தனைக்குள் எடுத்துச் செல்லாமல், ஒருவித மயக்கத்திற்குள்ளும் மந்தநிலைக்குள்ளும் வைத்திருக்கும் காலத்தின் பெரும் போதை. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வரை மலினமாகவும் வலிந்தும் கொடுக்கப்படும் போதை இதுதான். இப்படியான திரைப்படங்கள் தொழில்முறையையோ,பாடசாலைக் கற்கைமுறையையோ நேரடியாகப் பாதிப்பதில்லை. ஆனால் ஒரு மனிதனினுடைய,ஒரு சமூகத்தினுடைய ஆழந்த தேடலையும் பெறுமதிகளையும் விழுமியங்களையும் சிதைத்து விடுகின்றன.இதற்கு விதிவிலக்கான திரைப்படங்கள் உண்டு. ஆனால் அவை கவனம் பெறுவதே இல்லை.
கண்ணகி கவனம் பெறவேண்டிய திரைப்படம்!
கண்ணகி என்ற பாத்திரத்தின் பின்னால் இருக்கும் சமூகத்தின் பொதுவான கருத்தைத் தொடக்கத்தில் இருந்தே உடைத்துப்போடுகிறது இந்தத் திரைப்படம். கண்ணகி என்ற தலைப்பு மிகப் பொருத்தமானதும் சரியானதுமான தேர்வுதான். கண்ணகியும் சிலப்பதிகாரம் கூறும் கூற்றுக்களும்! -கவிதா லட்சுமி நோர்வே
606 total views, 2 views today