காணலை! காணலைக்!! கண்டான்!!!
-மாதவி
பேரப்பிள்ளைகள் வீடு வருகிறார்கள் என்றால், தாத்தா அம்மம்மா பாடு கொண்டாட்டம்தான்.
அவர்கள் வளர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு விரும்பிய உணவு செய்வதில் காலை விடியும்.
குழந்தைகள் என்றால் ஆர்ப்பாட்டம் வேறு விதமாக இருக்கும்.கைக்கு எட்டிய தூரம் எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தொலைபேசி றிமோட் முதல் உடையும் பொருட்கள் வரை.முக்கியமாக ரீப்போ விழும்பு குத்தாமல் சுவரோடு ஒட்ட வைக்கவேண்டும்.கண்டதையும் வாய்க்குள் எடுத்து வைக்கும் வயது. எழும்பி பிடிப்பதற்கு முன் முயல் மூன்றுகால் பாய்ச்சலில் ஓடிவிடும்.
கதவு காற்றுக்கு பூட்டுப்படாமல் இருக்க ஒரு பாரமான யானைக்குட்டி கதவோடு எப்பவும் இருக்கும். பேரன் வந்தால் அந்த யானை அவன் வாயுக்குள் குளிக்கும், எப்படியும் பறிக்க முடியாது.
நிலத்தில் இருப்பதால் அது அசுத்தம் என்று கொடுப்பதில்லை.ஆனால் அவனோ சுத்தித்தி சுத்தித்தி தேடி எடுத்திடுவான்.
நேற்று வந்தான். வந்ததும் யானையைப்பார்த்தான், யானை இல்லை.அம்மம்மா பெரும் புத்திசாலி என்ற நினைப்போடு கண்ணுக்கு எட்டாத இடத்தில் ஒளித்து விட்டா.குசினியும், கோலும் ஒன்றான வீடு எமது.
பேரன் ஒரு சுற்று எங்கும் தவழ்ந்துவிட்டு தாத்தா மடிக்கும் வந்து இருந்து றீமோட் கேட்டான். அதற்கிடையில் கடைக்கு போன மகள் வந்து பேரனை அழைத்துபோனா.
மதியம் இரசம் வைக்க அம்மம்மா குட்டி கருங்கல் உரலை எடுத்தால் குட்டிக் கருங்கல் உரலின் உலக்கையைக் காணோம். வீடு எங்கும் தேடியும் காணவில்லை.இரசம் அன்று சடுதியாய், சொதியாக மாறியது. உரலும் வெறிச்சோடிக்கிடந்தது.
மறு நாள் பேரன் மீண்டும் வந்தான், குட்டி கருங்கல் உலக்கையை காணவில்லை என்று மகளிடம் கூற பேரனை உடன் நிலத்தில் இறக்கிவிட்டா.
அவசரம் அவசரமாக முயல் பாய்ச்சலில் குசினிக்குள் யாரும் போபாத ஒரு இடைவேளிக்குள்,போனான், கையைவைத்தான்.
அம்மம்மா முகத்தில் சந்தோஷம், சம்பல் அரைத்தது. ஆம் கருங்கல் உரலின் குட்டி உலக்கையை நேற்று ஒளித்தவன் பேரன்தான்.
திரும்பி பார்த்தால் இப்ப கதவுக்கு அடியில் மிண்டுக்காய் இருந்த யானையைக் காணவில்லை.
இதுவும் ஒரு வகை காணலை! காணலைக்!! கண்டான்!!! விளையாட்டுத்தானோ.
308 total views, 3 views today