அழகுக்கும் அறிவிற்கும் உத்தரவாதம் மனித முட்டைகள் விற்பனையில்

அமரர் பொ.கனகசபாபதி (12 வருடங்களுக்கு முன் கனடாவில் இருந்து வெற்றிமணிக்கு எழுதிய கட்டுரை)
உலகிலேயே மிகப் புதிய தொழில் ஒன்று பெண் களுடன் சம்பந்தப்பட்டதாய் வந்துள்ளது. அத் தொழில் இன்னொரு வருக்காகப் பிள்ளை பெற்றுக் கொடுப்பதை ”Surrogate Mother’ என்பார்கள் ஆங்கிலத்தில். தமிழிலே அத்துர்ப்பாக்கிவதியை ‘ஈன்றாள்’ எனலாம். துர்ப்பாக்கியவதி என நான் குறிப்பிடு வதற்குக் காரணம் உண்டு. இதற்கு ஊதியமாகக் கிடைக்கும் தொகை வெறும் 15,000-00 முதல் 20,000-00 டொலர் என்றே சமூக வியலாளர் கூறுகின்றனர். ஆனால், 6720 மணித்தியாலம் (280 ஒ24) அடை காப்பதற்காகப் பெறும் தொகை மணித்தியாலம் ஒன்றினுக்கு மூன்று டொலர் கூட வரமாட்டாது.
எனினும், கனடாவிலே ஏறக்குறைய 60 பெண் மணிகள் இத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். இதிலேயும் ஒரு அனுகூலம் உள்ளதாக அவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். வீட்டிலே இருந்து பிள்ளைகளையும் பராமரித்து இதனையும் செய்கிறோம். எனவே இது ஓர் மேலதிக வருமானம் தானே என்பது அவர்களுடைய வாதம்.
பழைய இலக்கியப் பாடல் ஒன்று ஞாபகம் வருகிறதா? காகத்தின் கூட்டிலே குயில் தன் முட்டையை இட்டுச் சென்று விட, காகம் தன் முட்டை போலக் குயிலின் முட்டையையும் அடைகாத்துப் பொரிப்பதை வாடகைத் தாய்மார் களான ‘ஈன்றாள்’ களினது நிலையும் காகம் போன்றதே. ஓரு வித்தியாசம். காகம் தான் அடைகாப்பது குயிலினது முட்டை என அறியமுடிய இயலாமையால் ஏமாற்றப்படுகிறது. ஈன்றாளோ தனது கருப்பையில் தான் சுமப்பது தனது முட்டை இல்லையென்பது தெரிந்தும் இயலாமையாலோ அல்லது பெருந்தன்மையாலோ இன்னொருவரின் முட்டையயை அடைகாக்கின்றார்.
இப்போது அடுத்த கட்டத்துக்கு நிலமை வந்துள்ளது. கூடு இரவல் எடுத்த நிலையின் தொடர்ச்சியாக முட்டையையும் இரவல் எடுக்கும் நிலை எய்தியுள்ளோம். முட்டை வியாபாரம் பழைய தொழில் மனித முட்டை வியாபாரம் மிகப் புதிய தொழில். பிரமாதமாக ஊதியம் கொட்டும் தொழில் போலத் தெரிகிறது. ஒரு முட்டைக்கு 10,000-00 டொலர் வரை கிடக்குமாம். 25,000 டெலர் கூடப் பெற முடியும் என்ற பேச்சு. மாத ஊதியம் 10,000-00 டொலர் பெரிய தொகை தானே. கிடைக்கக் கூடிய முட்டைகளின் எண்ணிக்கை தேவையை ஈடு செய்ய முடியாமல் இருப்பதே விலை இவ்வளவு அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்கிறார்கள்.
மனித முட்டை வியாபாரத்திற்கு இணையத்தளம்களிலே விளம்பரம் போடத் தொடங்கி விட்டார்கள். விரைவில் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி, வானொலிகளிலும் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. வருகிற வருடம் கனடிய அரசு மனித முட்டை விற்பதற்குத் தடை விதிக்கவுள்ளதாம்.தடையை மீறி விற்பவர்கள் 10 வருடச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் அல்லது 500,000-00 டொலர் அபராதம் செலுத்த வேண்டும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது தானே. கிம்பர்லி குவார்டியோலா ( Kimberly Guardiola) எனும் கலிபோர்னியா வாசியான பெண் இது வரை இருமுறை முட்டைகள் விற்றுள்ளார்.அவரின் விளம்பரமே அலாதி. கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடும் விளம்பரம் போல இருக்கிறது. 5அடி 11 அங்குல உயரமுடைய பச்சைக் கண்ணழகி, பார்ப்போரைக் கவரக் கூடிய கட்டான உடல் வாகு,அங்க வனப்பு மாத்திரமல்ல புத்திக் கூர்மையும் கச்சிதம்.புத்திக் கூர்மைத் திறன் 152. பெண்மணி முட்டை வாங்குவோருக்கு மறைமுகமாக உத்தரவாதம் ஒன்றினை அளிக்கிறார். “எனது முட்டையில் இருந்து உற்பத்தியாகவுள்ள பிள்ளை அழகுடைய புத்திக் கூர்மையுடைய பிள்ளiயாகவே இருக்கும்.
எனவே எனது முட்டையை நீங்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம்” என்பதே அவர் கொடுக்கும் உத்தரவாதம்.
இந்த முட்டை விருத்தியுறுவதற்கு விந்து ஒன்றுடன் இணைய வேண்டும.; எனவே, பிறக்கப் போகின்ற பிள்ளையினுடைய அழகின் விஸ்தாரத்தையோ அறிவின் பரிமாணத்தையோ தாயினை வைத்துக் கொண்டு தீர்மானிப்பது சாத்தியமில்லை. இதனை அந்த அம்மையார் தெரிந்து கொள்ளவில்லையோ அல்லது ஏனைய வியாபாரிகள் போன்று அம்மையாரும் பாவனையாளரின் அறிவுத் தெளி வின்மையைத் தனக்குச் சாதகமாக்க முனைந்தாரோ தெரியவில்லை. ஜோர்ஜ் பேர்னார்ட் ஷோ ( George Bernard Shaw) என்னும் மிகப் பிரபலமான எழுத்தாளர் ஒருவர் இங்கிலாந்தில் வாழ்ந்தவர். அழகில் கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான். அக்காலத்திலே பிரபலமாயிருந்த ஒரு திரைப்பட நடிகை, நல்ல அழகி;. அதனாலே அவருக்குக் கர்வம் அதிகம். அவர் ஒரு முறை பேர்னார்ட் ஷோவினை அணுகி ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்னைப் போல் அழகும் உங்களைப் போல் புத்திக் கூர்மையும் உள்ள பிள்ளை பிறக்குமே! என்றாராம். ” கேட்பதற்கு நல்லாய்தான் இருக்கிறது அம்மணி!
ஆனால், பிறக்கின்ற பிள்ளைக்கு எனது அழகும், உனது மூளையும் இருந்தால் என்ன செய்வது” என்றாராம் பேனார்ட் ஷோ.. பதில் சொல்வதற்குப் பெண்மணி அங்கே நிற்பதற்கு அவருக்கென்ன பயித்தியமா?.
முட்டை விற்பதற்குரிய காரணத்தை தத்துவார்தமான விளக்கம் தந்து நியாயப் படுத்தப் பார்க்கின்றார் கிம்பர்லி. ‘வீணே சிதைந்து போகப் போகின்ற முட்டைதானே! அது ஒருவருக்கு உதவட்டுமே” என்கிறார். இதில் நியாயம் இருப்பது பேலவே தெரிகிறது. ஒவ்வொரு மாதமும் பெண்ணின் சூலகம் உருவாக்கும் முட்டை கருக்கட்டப்படாவிட்டால் சிதைந்து அழிந்து விடுகிறது என்பது உண்மையே. வீணாகப் போகின்ற முட்டை இன்னொரு குடும்பத்திற்கு வாரிசை உருவாக்க உதவுகிறது என்பது பாராட்டப்பட வேண்டிது ஒன்றுதான். ஆனால் அது வியாபாரமாகும் பொழுதுதான் வாழ்வின் விழுமியங்கள் நொறுங்கிப் போவதைக் காணமுடிகிறது.
‘மண்தின்பதை ஒரு மனிதன்தின்னட்டுமே”என்றே தனது செயலை ஒரு விபசாரியும் நியாயப் படுத்துகிறாள்.
முட்டையைவிலைக்கு வாங்குபவர்கள் உண்மையிலேயே அநுதா பத்துக் குரியவர்கள். அவர்களுக்கு முட்டை உருவாக்கும் திறன் இயற்கையாகவே இருக்கவில்லை. வளம்படுத்தும் மருந்துகள் (Fertility Drugs) எனப்படும் முட்டை உற்பத்தியைத் தூண்டும் மருந்துகள் எடுத்தாலும் முட்டைகள் உருவாகாத நிலை. எனவே, அவர்கள் வாரிசு ஒன்றினை உருவாக்கும் நோக்கிலே முட்டையை விலைக்கு வாங்குகிறார்கள். இவ்வியாபாரத்திலே முட்டையை விற்றவர் வாங்கியவர் இருவருமே சில கருமங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். முட்டை சாதாரணமாக 28 நாட்களிலே சூலகத்திலிருந்து உதிர்க்கப் பட்டு விடுகிறது. எனவே, முட்டை உதிர்க்கப் படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரேயே அதனை ஊசி உறிஞ்சி மூலம் வெளியே எடுத்து வளர்ப்புக் கரைசலில் வளர்க்க வேண்டும். பின்னர் முட்டையை வாங்கியவருடன் சம்பந்தப் பட்ட ஆணினது விந்துவினால் கருக்கட்டவைக்கப்பட வேண்டும்.
524 total views, 2 views today