ஊகங்களால் தப்பிக்கக் காரணம் தேடிக் கொண்டு உண்மையிடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
இது இப்படித்தான் எம்மைத் துரத்துகிறது
-மாலினி மாலா.(யேர்மனி)
வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வாசலில் காரை நிறுத்தி, காருக்குள்ளிருந்து, இன்று உனக்கு ஒரு அலுவலும் இல்லைத் தானே வா வெளியே போய் வரலாம் எனத் தகவல் அனுப்பினாள்.
மழை கொட்டுகிறது இதற்குள் எங்கே வெளியே. உள்ளே வா என பதில் அனுப்பினேன். மழைக்குள் வெளியே போகாத ஆள் தானே நீ. நடிக்காமல் வா என்றாள்.
அடைமழையில் தாரில்லா சாலையில் காரை நிறுத்திப் பேசிக்கொண்டிருப்பது சுகம் பலமுறை பேசியிருக் கிறோம்.
இரண்டு கப்கள் மூடிய சுடுதண்ணிப் போத்திலுக்குள் கோப்பியுடன் போய் காரில் ஏறினேன். மோட்டாரை இயக்கினாள். கொப்பியைப் பார்த்து இது எதற்கு. கோப்பி குடிக்கத்தான் போகிறோம் என்றாள். முறைத்தேன்.
காரை, இயற்கைப் பூங்காவும் செயற்கைக் காடும் அமைந்த இடத்தில் நிறுத்தினாள். அங்கே இருக்கும் காப்பிக் கடைக்கு நிலத்துக்குச் சீமெந்து இருக்காது சுவர்கள் இருக்காது நான்கு பக்கமும் மரத்தூண் நாட்டி மேலே மூடியிருப்பார்கள்.
முன்னே ஒரு நீர் நிலையும் சூழக் காடும் இருக்கும். சூடான காப்பியைப் பருகிக் கொண்டே, நீர்நிலைக்குள் விழும் மழைத்துளிகளை ரசித்துக் கொண்டு மெல்லிய குளிர் உடலை வருட அமர்ந்திருப்பது சொர்க்கம். அமர்ந்தோம் காப்பி வந்தது.
எனக்கென விலை கூடிய ஆசைகள் எதுவுமில்லை, ஊரோய்ந்த நேரத்தில் நிலாக்கால இரவில் நடக்க வேண்டும், ஜன்னல் கரையில் அமர்ந்து மழை ரசிக்க வேண்டும், ஏதாவது ஒரு குளக்கரையில் அமர்ந்து கொண்டு நீருக்குள் மழை விழும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.
ஆனாலும் காலம் அவைகளை என் வாழ்வில் விலைமதிப்பானவையாக்கி விட்டது. தாத்தா இறந்த பின் இரவில் நடக்க வாய்க்கவில்லை. இங்கு வந்த பின் எதுவுமே……
வாழ்வின் விலைமதிக்க முடியா விடயமே அது தான் மாலினி. விரும்பினவைகளை ரசித்து வாழத்தெரியாதவர்களுடன் காலங்கழிக்க நிர்ப்பந்தமாவது என்றவள் பின் வந்த ஒரு பிறந்தநாளில், மாலை உன் குடும்பத்துடன் கொண்டாடிக் கொள் இப்போது என்னுடன் வா என கட்டாயப்படுத்தி அழைத்துப் போய் அமர்த்திய இடம் இது.
பின் பல மழைகளை இககோப்பிக்கடையில் இருந்து மணிக்கணக்காக ரசித்திருக்கிறோம் வழமையை விட நீண்ட நேரம் சிரிக்கச் சிரிக்கப் பேசினாள். முகத்தில் நிறையச் சோர்விருந்தது. இயல்பிலேயே இரத்தச் சோகை கொண்டவள் அரைவருடத்துக்கு ஒரு முறை உடலில் இரும்புச் சத்து ஏற்றிக் கொள்பவள்.
பீரியட்ஸ் நாளில், மற்றப் பெண்களை விட அதிக சோர்வும் உதடு வெடிப்பும் முக வெளிறலும் அவளிடம் அதிகமாக இருக்கும் ஆதலால் இன்றும் அந்த நாட்களில் ஒரு நாளாக இருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்.
நிறைய நேரம் கதைத்து வழமையை விட ஏராளமாய் சிரிப்புக் கதைகள் சொல்லி. பலமுறை எனக்கும் அவளுக்கும் வந்த சண்டைகளும் பின் ஆளுக்காள் தன்னிலை விளக்கம் கொடுத்து ஒன்றுமே இல்லாத துக்கு புரிதலற்றுச் சண்டையிட்ட முட்டாள்தனங்கள் எல்லாம் சொல்லிச் சிரித்த பின் சொன்னாள்
இப்போது சொல்லப் போவதைக் கேட்டு அதிராதே. அழாதே. என எனக்கு மனது அதிர்ந்தது. பீடிகை அவளது வழக்கமல்ல.
என் கர்ப்பப்பை வெளியே எடுக்கவேண்டும் என்றாள் இறுகிய குரலில். மாதாமாதம் அதிக இரத்தப் போக்காக இருக்கிறது என சில மாதங்களின் முன் சொல்லியிருந்தாள். அதனாலா என நான் கேட்பதற்கு முன்பே, மூன்றாம் படிநிலையையும் கடந்து விட்டேன் போன வருடத்தைய உடற்பரிசோதனையின் போது எதுவு மேயில்லை. பதினொரு மாதங்களில் வேகவளர்ச்சி கொண்டு பக்க உறுப்புகளிலும் பரவியிருக்கிறது.
இம்மாதம், இரு முறை வந்தது. இருமுறையும் பைப் திறந்து விட்டமாதிரி இரத்தம் ஓடத் தொடங்கியது.
முதலில் போனமாதங்கள் எண்ணியது போல மாதவிலக்கு நிற்கும் காலம் வருகிறது சிலருக்கு அப் போதும் அதிக இரத்தப் போக்கிருக்கும் என்பார்கள் அதனால் தான் என நினைத்தேன். ஆனால் கணவன் வலுக்கட்டாயமாக வைத்தியசாலையில் ஒப்படைத்தபின் தான் கண்டு பிடித்திருக்கிறார்கள். அப்போ போன வாரம் நீ சுகயீன விடுப்பெடுத்தது இரும்புச்சத்து ஏற்றிக்கொள்வதற்காக இல்லையா.
இல்லை வைத்தியர்களின் சந்தேகம் ஊர்ஜிதமாகட்டும் என உனக்குச் சொல்லாமல் இருந்தேன். நேற்றுக் கூப்பிட்டு விளங்கவைத்தார்கள். திங்கட்கிழமை அட்மிட் ஆகிறேன் செவ்வாய் அறுவை செய்வார்கள்.
பின் பேச இருவருக்கும் எதுவுமிருக்கவில்லை.
குணமாக்குதல் பற்றி உறுதியாக ஒன்றும் சொல்லவில்லை. முயற்சிப்போம் என்று தான் சொல்லியிருக் கிறார்கள்.
அழக்கூடாது என்றாலும் அழுகை வந்தது கோபம் வந்தது.
முட்டாள் அதிக இரத்தப் போக்கான போதெல்லாம் எத்தனை தடவை சொன்னேன் வைத்தியரிடம் போகும் படி. அப்போது போயிருந்தால் ஆரம்பக் கட்டமாகக் கூட இருந்திருக்கலாம்
ஊகங்களால் நாமே ஒவ்வொன்றுக்கும் காரணம் தேடிக் கொள்கிறோம். அதன் மூலம் அசட்டைப்படவும், அவலங்களில் இருந்து அன்றாடங்களில் தப்பிக் கொள்ளவும் முனைகிறோம் உண்மை எப்போதும் வேறாகவே இருந்து தண்டித்து விடுகிறது என்றாள் குளத்தை வெறித்தபடி.
நாமெல்லோருமே அனேகமாக அவள் போலத்தான். ஊகங்களால் தப்பிக்கக் காரணம் தேடிக் கொண்டு உண்மையிடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
பி.கு. எனக்காகவல்ல உங்களுக்காக. பெண்களுக்காகக்த் தான் எழுதியுள்ளேன். பச்சையா பெண்களை எழுதுறா என விமர்சனம் வைப்போர், உங்களுக்கு விரும்பின நிறம் பூசி வாசியுங்கள் கோபப்படமாட்டேன்.
353 total views, 6 views today