தொட்டவன் விட்டுப் போகத் தொடர்ந்தவன் தொடரக் காலம் நகர்கின்றது.
- கௌசி.சிவபாலன் (யேர்மனி)
வாழ்க்கையில் எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்?
ஒவ்வொரு மனிதனின் உடலும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உருவாகின்றன. உடலமைப்பும் உருவ அமைப்பும் அப்படியேதான் தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் செயற்பாட்டிலே திட்டமிடலிலே மாற்றங்களை ஏற்படுத்த மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும்,எலன்மாஸ்க் போன்ற தனவந்தர்களும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால், யார் நிரந்தரமாக உலகில் வாழுகின்றார்கள்?
எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்களும், இரவு பகலாகக் கண் விழித்துத் தொழிற்படுகின்ற ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பூமிப்பந்திலே காணாமலே போகின்றார்கள். அவர்கள் தாம் இழந்த பொழுதுகளை, அனுபவிக்கத் தவறிய வாழ்க்கையை இழந்துதான் போகின்றார்கள். பின் தொடர்பவர்கள் காணாமற் போனவர்களின் முயற்சிகளை அனுபவிக்கின்றார்கள்.
கண்ணன் எங்கே? புத்தர் எங்கே? கடவுளாக்கி அனுபவிக்கின்றார்கள். வள்ளுவர் எங்கே? பாரதி எங்கே? இளங்கோ எங்கே? தொடரும் எழுத்தாளர்கள் அவர்களின் கருத்துக்களை அனுபவிக்கின்றார்கள். காந்தி எங்கே? கலைஞர் எங்கே? எம்.ஜி.ஆர்.எங்கே? தொடரும் அரசியல்வாதிகள் அனுபவிக்கின்றார்கள். பூக்களிலே தேனெடுத்துத் தேனீக்கள் கூடுகளிலே தேன் சேமித்து வைக்கின்றன. ஆனால் அந்தத் தேனைத் தேனீக்களா அனுபவிக்கின்றன? அந்தத் தேனை யாரோ எடுத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். முத்தைச் சிப்பி காவல் காத்து வைத்திருக்கும். ஆனால்,அது யாராலோ அனுபவிக்கப்படுகின்றது. இவ்வாறு தொட்டவன் விட்டுப் போகத் தொடர்ந்தவன் தொடரக் காலம் நகர்கின்றது. உயிர்களை உதிர்த்துவிட்டுப் போகின்றது.
இந்தப் பூமிப்படுக்கையிலே இயற்கை அழகுக் குவியலைக் கொட்டி விட்டிருக்கின்றது. அதை அணுஅணுவாக அனுபவித்து வாழக் கற்றுக் கொள்ள மனிதனின் மூளை இடம் தருவதில்லை. உண்மையிலே புத்தி சுவாதீன முற்றவனே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றான். அவனுக்கு எவ்வித கடமையும் இல்லை. கட்டுப்பாடு களும் இல்லை, சோகமும் இல்லை, துக்கமும் இல்லை. பசித்த வேளை உண்பான், களைத்த வேளை உறங்குவான். மனிதனின் மூளையும், அனுபவங்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகளுமே அவளை உறங்கவிடாது சுறுசுறுப்பாக வைத்திருக்கின்றது.
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய் கட்டாயம் மனிதனுக்கு இருக்கின்றது. ஆனால், என்ற சந்தேகத்துடனேயே தொடர்கின்றேன். இரவு படுக்கையில் விழுகின்ற போது அழகான கனவு வருகின்றது. அதனோடேயே வாழுகின்றோம், அனுபவிக்கின்றோம். ஆனால் விடிந்ததும் இது கனவா! என்று ஆச்சரியத்துடன் சா.. … .. என்று கவலைப்படுகின்றோம். இதுபோலவே ஒரு விடுமுறைக்குச் செல்லுகின்றோம். கண்களுக்குள்ளும், புகைப்படக் கருவிக்குள்ளும் நாம் பெற்ற இன்பத்தை அள்ளிக் கொள்ளுகின்றோம். ஆனால், விடுமுறை கழிந்ததும் நாம் கண்டவை,அனுபவித்தவை அத்தனையும் கனவுபோலாகித் திரும்பவும்; வழமையான வாழ்க்கைக் குள் நுழைந்து விடுகின்றோம். அது கனவு போலவே காட்சியளிக்கும்.
இவ்வாறுதான் வாழ்க்கையும் மகிழ்ச்சி, கடமை, கட்டுப்பாடு, உறவு, பகை, இன்பம், துன்பம் என்று சிலர் நீண்ட வருடங்களும், சிலர் குறுகிய வருடங்களும் இந்தப் பூமிப்பந்திலே வாழ்ந்து மறைந்து போகின்றார்கள். அவர்கள் கனவு வாழ்க்கை கலைந்து போகின்றது. மீட்டிப் பார்க்க முடியாத நிலையில் கரைந்து போகின்றார்கள். மூளையைச் சுழற்றிப் பார்த்தால், எதுவுமே நிஜமில்லை, நிரந்தரமில்லை, சொந்தமில்லை. விசன்புரோ கமராவின் மூலமாக வீட்டுக்குள்ளே இருந்த வண்ணம் பூங்காவுக்குப் போவதும், விளையாடுவதும், கடைகளுக்குப் போவதும் போன்ற ஒரு உலகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
மரத்தில் இருந்து விழுந்த இலைகள் மீண்டும் மரத்துக்குச் செல்ல எத்தனிப்பது போல கடந்து போன காலத்துக்குத் திரும்ப நாம் நினைப்போம். நாம் நடந்து திரிந்த பாதைகளிலே திரும்பவும் நடக்க எத்தனிப்போம். நாம் நடந்து வந்த அந்தப் பாதையிலே எத்தனையோ பேர் நடந்து தேய்ந்த பாதைகளாக இருக்கும். திரும்ப நினைத்தாலும் அது தரும் அனுபவங்கள் வேறுபாடாகவே இருக்கும்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது என்று கீதை சொல்கிறது. பூமியே எமக்குச் சொந்தமில்லை. நாம் விலை கொடுத்து வாங்கும் வீடா எமக்குச் சொந்தமாகப் போகின்றது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெறுங்கையுடனேயே எரிதழலுக்குள் போகவிருக்கின்றோம் என்பதை அலெக்ஸாண்டர் தன்னுடைய மரண ஊர்வலத்திலே வெறுங்கை வெளியே தெரியத் தன்னைத் தூக்கிச் சொன்ன சொற்களின் மூலம் உணர்த்தினார்.
ஒருவனின் ஒரு நாள் உணவு ‘நாழி” யளவென்பாரகள்;. நாட்களை அளந்துண்ணுகின்ற இயமன் கூட சூரியனை நாழியாகக் கொள்கிறான். மனிதனின் வாழ்நாளாகிய தானியத்தைத் தினம் தினம் அளந்து உண்ணுகிறான். உண்ண உண்ண மனிதனின் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது. இயமன் ஒரு மனிதனை உண்டு முடித்து விடுகிறான். இதனை
நாலடியாரிலே இந்த ஆழமான வரிகள்
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் – ஆற்ற
அறஞ்செய்து அருளுடையீர் ஆகுமின் யாரு
பிறந்தும் பிறவாதார் இல்.
என எடுத்துக்காட்டுகின்றன.
இதுதான் நிஜமென்றால், அக்கண மகிழ்ச்சியை மனிதன் சொல்லிச் சொல்லித் தீரா வார்த்தைகளின் மூலமும், புகைப்படக் காட்சிகளின் மூலமும் வெளிப்படுத்தி மகிழ்கின்றான். இவைதான் பயணக்கட்டுரைகளாகவும், காணொளிகளாகவும், நூல்களாகவும் மீண்டும் தொடர் வோருக்குத் தந்து போகின்றன. அதனால், எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்? அக்கண மகிழ்ச்சி மட்டுமே.
401 total views, 6 views today