இது உறங்க விடாத சுடலைமாடன் கதை
- பேராசிரியர் சி.மௌனகுரு
கந்த கெட்டிய கண்டியிலுள்ள ஓர் தேயிலைத்தோட்ட மலையாகும்.. 150 வருடங்களுக்கு முன்னர் அங்கு கொண்டுவரப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தம்மோடு தம் பண்பாட்டையும் கொண்டு வந்தனர்.கால ஓட்டங்கள் அவற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தினும் இன்றுவரை தொடர்ச்சியாகச் சிலவற்றைப் பேணியும் வருகின்றனர் அதனுள் ஒன்றுதான் சுடலை மாடன் வழிபாடு.
கந்தகெட்டிய மஹாவித்தியாலய அதிபர் ராஜகோபால்அர்ப்பணிப்புமிக்க அதிபர்,மலையக அடிமட்ட மக்கள்மீதும், அவர்களின் கலைகள் மீதும் அனுதாபமும் ஆர்வமும் கொண்டவர் அவர் தனது பாடசாலை நாடக விழாவுக்கு விருந்தினராக என்னை அழைத்து இருந்தார்.’சேர் சுடலை மாடன் வில்லுப்பாட்டு நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும’; என்றார். ஏற்கனவே காமன் கூத்து அருச்சுனன் தபசு பொன்னர் சங்கர் ஆகிய மலையக நிகழ்த்துகைக் கலைகளைப் படித்தும் பார்த்தும் இருந்த நானும் அதனைப்பார்க்க விரும்பினேன். சுடலை மாடன் வில்லுப்பாட்டு பார்க்க் காகல மடவல டிவிசன் நலந்தன்ன எனும் மலைக்கு அழைத்துச் சென்றார்.வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையூடாகச் சென்ற வேன் ஓரிடத்தில் நின்றது நின்ற இடத்திலிருந்து மேல் நோக்கிச்சென்ற படிக்கட்டுகளூடே ஏறிச் சென்று மிகச் சிறிய ஒரு கோவிலை அடைந்தோம்.அக்கோவில் ஒரு பெரிய அகன்ற வாகை மரத்தின் கீழ் அமைந்திருந்தது.அது ஒரு மிகசிறியதோர் கிராமியக் கோவில்.அக்கிராமச் சனங்கள் எங்களை எதிர் நோக்கிக்க் காத்திருந்தனர். கோவில் விக்கிரகங்களாகக் கன்னங்கரேல் என்ற இரு உருவங்கள் இருந்தன..
அது ஒரு மாடசாமி கோவில்.
கோவிலின் முன் வில்லுப்பாட்டுக்குரிய ஒரு பெரிய வில் இருந்தது. மக்கள் எங்களுக்கு வணக்கமுரைத்தார்கள் வில்லுப் பாட்டுப் பாடப்போகும் பாடகர்களும் வாத்தியக் காரர்களும்முதலில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருநீறு சந்தணம் வழங்கப்பட்டது.
‘சுடலைமாடன் பிணம் தின்னும் ஒரு தெய்வம். சுடலைக்குச் சென்று புதிய பிணங்களைத் தோண்டியெடுத்து அப்பிணங்களின் உடலைப் பிழந்து பிணத்தின் குடலை மாலையாகப் போட்ட படியும் பிணத்தின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்க் கொண்டும் வந்து தன்னை அது மக்கள்மத்தியில் நிரூபித்துக்கொள்ளும்’ என ஒருத்தர் கூறினார்.’21 வகையான மாடன்கள் இருக்கிறார்கள்’என்று சுடலை மாடன் பற்றி எனக்கு விளக்கம் அளித்தார். என்னருகில் இருந்த இன்னொரு பெரியவர். ‘பல மாடன்கள் உண்டு சப்பாணி மாடன் நொண்டிமாடன்,சுடலை மடன் என மாடன் வகையியினை ஒரு பட்டியல் தந்தார் இன்னொரு பெரியவர.;
‘முன்னாளில் எங்களின் இந்த ஊரில் மாடன் திருவிழா ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஒரு பிணம் கட்டாயம் விழும் அப்புதுப் பிணத்தின் குடலைத்தான் மாலையாகப் போட்டுக்கொண்டும் பிணத்தின் உள்ளுறுப் புக்களைச் சாப்பிட்டுக்கொண்டும் மாடசாமி இக்கோவிலுக்கு வருவார்’ என்றார்’
இன்னொருவர் ‘மாடனை இந்த மடச் சனங்கள் அன்று கேள்வி கேட்கப்போய் இந்த ஊருக்கு ஒரு பெரும் கொள்ளை வந்தது. நிறையச் சனம் செத்தது. பின் தமது தவறை உணர்ந்து மக்கள் மாடசாமியிடம் மக்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள அப்பெரும் கோள்ளை நோய் நீங்கியது’என்று இன்னொருவர் கூறினார். ‘பின்னாளில் மக்கள் பக்தியுடன் மாடசாமியிடம் பிணத்தின் குடலை மாலையாகப் போட்டுக் கொண்டு வருவதைக்காணப் பெண்களும் பிள்ளைகளும் பயங் கொள்கிறார்கள். எனவே பிணத்த்தின் குடலோடு வர வேண்டாம் என வேண்ட பிணத்திற்குப்பதிலாக மாடசாமி கோழியின் குடலை போட்டுக்கொண்டு வருவதும் கோழியின் உள்ளுறுப்புகளைச் சாப்பிட்டுக்கொண்டு வருவதும் வழக்கமாயிற்று’ என்றார் இன்னொருவர்.
மாடசாமிபற்றி மக்கள் நம்பிக்கையின் புற உரு இவ்வாறு எனக்கு அவர்களால் தரப்பட்டது.
அச்சாமி பற்றி எனக்குள்ளும் ஒரு படிமம் உருவாகியது. மாடசாமி வில்லிசைக் குழு பற்றி அங்கிருந்த ஒருவரும் நிகழ்த்தினர்.வில்லுக்கு பக்தியோடு தூப தீபம் காட்டப்பட்டு அதுவும் ஒரு தெய்வநிலையில் வைத்துப் பூஜிக்கப் பட்டது. பங்கு கொள்ளும் அனைவருக்கும் வில்லுப்பாட்டுக்குழுத் தலைவர் திருநீற்றை நெற்றியில் இட்டார்.பக்தியோடு அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டனர். நம்பிக் கையும்,பக்தியுமே அங்கு மேலோங்கி நின்றது. மதம் என்பது நம்பிக்கைதானே.
வில்லிசைக் குழுவினர் பெரிய வில்லைச் சுற்றி அமர்ந்தனர்.உடுக்கடிக்கலைஞர்கள் இருவர்,குடம் வாசிப்போர் ஒருவர், தபேலா வாசிக்க ஒருவர்,பிரதான பாட்டுக்காரர் அவருடன் பாடப் பக்கப்பாட்டுக்காரர்கள் சிலர் என ஒரு பெரும் குழாம்.சுடலை மாடன் கதை கதை வில்லுப்பாட்டு ஆரம்பமாகியது. பிரதான கதை சொல்லி மருதை என்பவரின் குரல் ஓங்கி ஒலித்தது. பாக்கியநாதன் என்பவர் தன் முழு உடலையும் அசைத்து அசைத்து ஆடியபடி உடுக்கு அடித்தார்.14 பேர் வில்லைச் சூழ அமர்ந் திருந்து பக்கப்பாட்டுப் பாடினர்.பிரதான பாடகர் பாடகர் பாட இவர்கள் ஆம் ஐயா,ஆம் ஐயா என்றுதொடர் குரல் எழுப்பினர்அனைவரின் இணைவும் குரல் ஓசையும்,உடுக்கு ஒலியும்பாடல் மெட்டும் ஒருவித லய உணர்வைத் தந்து கொண்டிருந்தன..அந்த லயத்துக்குள் நாம் அனைவரும் ஈர்க்கப் பட்டோம்
.எமது உடல்களும் தாள லயத்துக்கு அசைந்தன.திடீரென ஒருவருக்கு பெரும் உரு வந்து விட்டது.இரண்டு கைகளையும் தரையில் அடித்து புரண்டு தவழ்ந்து ஆடியபடி அவர் கோவிகுக்குள் சென்று மாடசாமி உடை அணிந்து வெளியில் வைத்திருந்த மணிகட்டிய பெரும் தண்டமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, நீண்ட சாட்டைக் கயிறொன்றைத் தனது தோழைச் சுற்றிப் போட்டுக்கொண்டு தாளத்துக்கு ஏற்ப காலடி வைத்து ஆடியபடி கோவில் வீதியில் கம்பீர நடை பயில ஆரம்பித்தார்.
” மாடன் வந்துவிட்டான்” ‘என்றார்கள்.
346 total views, 6 views today