எதில் முழுமை?
-பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து)
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையின் நிறைவு தொடர்பாக மாறுபட்ட கருத்துகள் இருக்கும். ஒருவர் தம் வாழ்வின் குறிக்கோள் இதுவெனக் கொள்ளுகையில் அது வேறொருவருக்கு ஒன்றுமேயில்லாததாகவோ, முட்டாள்தனமாகவோ, பெரிய பற்றியமாகவோ தோன்றலாம்.
யாருக்கும் பாரமாக இல்லாதவரை, யாரையும் எம் முடிவுகளும் செயல்களும் துன்புறுத்ததாவரை, எம் எண்ணங்கள் தீயவழியில் செல்லதாவiர் அவரவர் தேர்ந்தெடுக்கும் சரியான பாதையே அவர்கள் வாழ்வை முழுமையடைய வைக்கிறது.
சிலருக்குப் பயணங்கள், சிலருக்கு வேலை, சிலருக்கு குடும்பத்தின் மகிழ்ச்சி, சிலருக்குத் தனிமை, சிலருக்குத் தேடல் என ஒவ்வொருவரது வாழ்வும் ஏதோவொன்றை நோக்கியே பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. எதில் அவர்கள் வாழ்வை முழுமை பெறுகிறது ,எதில் அவர்கள் திருப்தியடைகிறார்கள் என்பது அவரவர் எதிர்பார்ப்பைப் பொறுத்தது.
கட்டமைக்கப்பட்ட சமூக அமைப்பில் கல்வி, வேலை,திருமணம், குழந்தைகள், சொத்து என்பனவே முழுமையான வாழ்வாகப் பார்க்கப்படுகின்றது. குறிப்பிட்ட வயதிற்குள் இதையெல்லாம் அடையாதவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்களாகவே இந்தச் சமுதாயம் எண்ணிக்கொண்டிருக்கிறது.
இத்தகைய நெருக்கடிகளில் சிக்கித் தம் வாழ்வை முழுமை பெறவில்லை என எண்ணித் தவிப்போருக்காகவே இதை எழுதுகிறேன்.வாழ்வின் முழுமையென்பது உங்கள் சிந்தனையிலும் செயலிலுமே பிறக்கின்றது.நீங்கள் நினைக்கும் எட்டாக்கனியான முழுமை மற்றொருவருக்கு உயிர் குடிக்கும் நச்சுக் கனியாகிறது.
சிலருக்குத் திருமணம் கனவாக இருக்கும்போது சிலருக்கு அந்த பந்தத்தை முடிப்பதுவே கனவாகிறது. உறவுகளோடு வாழ்தல் சிலருக்குக் கனவாகும்போது தனிமையில் வாழ்தலே சிலருக்கு வரமாகிறது.சிலருக்குப் பணம் சேர்த்தலே கனவாகும்போது; சிலருக்குப் பயணங்களே கனவாகிறது. சிலருக்குக் கல்வி கனவாகவிருக்கும்போது சிலருக்குக் கல்வி தாண்டிய கற்கைகள் கனவாகின்றது.
இதில் எது குறித்து நீங்கள் வருந்துகிறீர்கள். இந்தச் சமூகம் வாழ்க்கை குறித்துக் குத்தியிருக்கின்ற முத்திரை உங்கள் வாழ்வில் செல்லுபடியாகவில்லையென்றா அல்லது நீங்கள் உங்களுக்காகச் சுமந்தலையும் முத்திரை உங்கள் வாழ்வில் குத்தப்படவில்லையே என்பதற்காகவா? இந்தச் சூழலும் மனிதர்களும் உங்கள் வாழ்க்கை பற்றிய புரிந்துணர்வின்றித் தேடல்களிலும் தேர்வுகளிலும் கருத்துச் சொல்ல முயற்சிக்கும்போதெல்லாம் கவலை கொள்வதிலிருந்து உங்களை விடுவித்துவிடுங்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளோ விமர்சனங்களோ உங்களை முழுமையடைய வைக்கிறதா உங்கள் வாழ்க்கை குறித்த தேர்வுகளை முழுமையடைய வைக்கிறதா என்பது குறித்து நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள்.
உங்கள் உள்ளம் கூறும் பாதையின் மேல் கால்களைப் பதியுங்கள். சமூகக் காரணங்களுக்காக உங்களில் வலிந்து சுமத்தப்படுவனவற்றை நனைத்துச் சுமக்காதீர்கள். இவை ஒருபோதும் உங்கள் நிம்மதியை அழகாக்கப்போவதில்லை.
யாரோ ஒருவர் கூறும் வார்த்தைகள் உங்கள் கனவுகளைக் கலைக்குமாயிருந்தால் அவர்களை உங்கள் வாழ்வும் தோட்டத்தின் களையாக எண்ணி விலக்கிவிட்டு உங்கள் கனவுகளைத் தொடருங்கள். என்றேனுமொரு நாள் உங்கள் வாழ்வை முழுமை பெறட்டும்.
397 total views, 6 views today