ஐரோப்பாவில் 30 வருடங்களைக் கடந்து ஒலிக்கும் ஒரே பத்திரிகை வெற்றிமணி.
நேர்காணல்.நேர்கண்டவர்: மர்லின் மரிக்கார்
யாழ்ப்பாணம், குரும்பச்சிட்டியைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் மு.க. சுப்ரமணியத்தினால் 1950 இல் சிறுவர் சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட ‘வெற்றிமணி’, 1980 இல் அவரது மறைவோடு நின்று போனது. என்றாலும் அவரது மகனான மு.க.சு. சிவகுமானின் முயற்சியினால் நின்று போயிருந்த வெற்றிமணி, 1994 ஜுன் முதல் ஒரு ஜனரஞ்சக பத்திரிகையாக ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது. இப்பத்திரிகையின் ஆசிரியர் சிவகுமாரன் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த சமயம் வெற்றிமணியின் 30 வருட நிறைவு குறித்து தினகரன் வாரமஞ்சரிக்கென விஷேட பேட்டியொன்றை வழங்கினார். அப்பேட்டியை இங்கு தருகிறோம்.
கேள்வி: உங்களது எழுத்துலக் பிரவேசம் குறித்து சுருக்கமாகக் கூறுங்கள்?பதில்: நான் குரும்பச்சிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். அது இயல்பாகவே தமிழ்வாசனை மிக்க மண். அத்தோடு எனது தந்தை ஒரு ஆசிரியராவார். அவர் நாவலப்பிட்டியில் ஆசிரியராகக் கடமையாற்றிய போது மாணவர்களை மையப்படுத்தி வெற்றிமணி என்ற பெயரில் சிறுவர் சஞ்சிகையொன்றை ஆரம்பித்து நடாத்தி வந்தார். அச்சஞ்சிகைக்கு எனது சிறுபராயம் முதல் பங்களிப்பு செய்தேன். இதன் ஊடாக எழுத்துலக பிரவேசம் குறித்த ஆர்வமும் ஊக்கமும் எனக்கு கிடைக்கப்பெற்றது.
இவ்வாறான பின்புலத்தில் நான் எழுதிய ‘காலம் கடந்த கண்ணீர்’ என்ற தலைப்பிலான முதலாவது சிறுகதை 1970 இல் தினகரனில் வெளியானது. அச்சிறுகதைக்கு தினகரன் நிறுவனத்தினர் 20 ரூபாவை கொடுப்பனவாக அனுப்பி வைத்திருந்தார்கள். அன்றைய காலகட்டத்தில் எனது சிறுகதை தினகரனில் பிரசுரமானதை எனது சிறுகதைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதினேன். அதன் பின்னர் நான் எழுதிய பல சிறுகதைகள் தினகரனில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றையும் வெற்றிமணியில் வெளிவந்த ஒரு குறுநாவலையும் தொகுத்து ‘ஒரே ஒரு தெய்வம்’ என்ற பெயரில் சிறுகதைத் தொகுதியாக எனது 19 வது வயதில் வெளியிட்டேன். அவற்றில் பெரும்பாலானவை தினகரனில் வெளிவந்த சிறுகதைகளாகும்.
மேலும் 1990 இல் சித்திர சிற்ப கண்காட்சி சிறப்பு மலரான ‘புதிய வடிவங்கள்’ நூலினையும், 2000 இல் ‘வெற்றிமணி’ பொன்விழா மலரினையும், 29 வருடங்கள் நீண்ட இடைவெளியின் பின் மாதவி என்ற புனைபெயரில் ‘இடைவெளி’ என்ற 32 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பினையும், 2003 இல் மாதவி என்ற புனைபெயரில் ஓவியங்களுக்கு முக்கியத்துவம் தரும் ‘அது என்பது இதுவா’, தாய்நில ஏக்கத்தினை விளக்கும் ‘என் காதல் கிராமத்தின் சாளரம்’ கவிதை நூலினையும், நிலாம்கள் எனும் பெயரில் ‘தமிழே காதல்’ எனும் குறும்பா வகை கவிதைத் தொகுப்பினையும், 2007 இல் எட்டு உட்பிரிவுகளோடு வெளியான அறிவியல் கட்டுரைத் தொகுப்பான ‘அதிசய உலா’ ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளேன்.
கேள்வி: வெற்றிமணி குறித்து சுருக்கமாக அறிமுகப்படுத்த முடியுமா?பதில்: ஆம். எனது தந்தையான மறைந்த ஆசிரியர் மு.க. சுப்ரமணியம் 1950 இல் நாலப்பிட்டியில் வெற்றிமணியை சிறுவர் சஞ்சிகையாக ஆரம்பித்தார். மாணவர்களை மையப்படுத்தி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சிறுவர் மாத இதழ் இதுவாகும். 1979 வரை வெற்றிகரமாக வெளிவந்த இச்சஞ்சிகை தந்தையின் மறைவோடு நின்றுபோனது.
நான் 1981 இல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தேன். அங்கு என்னை ஒரளவுக்கு நிலைப்படுத்திக்கொண்டு தந்தையால் ஆரம்பிக்கப்பட்டு நின்று போயிருந்த வெற்றிமணி சஞ்சிகையை 1994 இல் இடத்துக்கும் காலசூழலுக்கும் ஏற்றாற்போல் ஒரு ஜனரஞ்சக பத்திரிகையாக மீண்டும் தொடங்கினேன். இதன் முதலாவது இதழ் 1994 ஜுன் முதலாம் திகதி ஜேர்மனியில் வெளிவந்தது. அன்று முதல் இன்று வரையும் வெளியாகி 30 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது வெற்றிமணி.இது மின்னிதழ் அல்ல அச்சில் வெளியிடப்படும் பத்திரிகையாகும். கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் கூட தொடராக வெளிவந்த பத்திரிகையாக வெற்றிமணி விளங்குகிறது.
ஜேர்மனியில் வாழும் இளம் சந்ததியினரின் சாதனைகள், வெற்றிகள் என்பன வெற்றிமணி ஊடாக கடந்த 30 வருடங்களாகக் வெளிக்கொணரப்படுகின்றன. அவற்றில் கலை, இலக்கியம், கல்வி என்பன குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.கட்டுரை, சிறுகதை, தொடர் கதை உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கி வெளியிடப்படும் இப்பத்திரிகையில் சர்வதேசம், மருத்துவம், சமூகவியல், தொழில்நுட்பவியல், பாரம்பரியம் உள்ளிட்ட விடயங்களிலான கட்டுரைகள், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகள், சினிமா துணுக்கள் அடங்கலாக பல்சுவை அம்சங்களும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. கேள்வி: புலம்பெயர் நாடொன்றில் இருந்தபடி தமிழ் மொழியில் பத்திரிகை வெளியிடுவது தொடர்பில் குறிப்பிடுவதாயின்?பதில்: ஜேர்மனி தமிழ் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படக்கூடிய நாடல்ல. அதனால் வெற்றிமணி ஆரம்பிக்கும் போது அச்சகத்தில் பல சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. அங்குள்ள அச்சகங்களில் பணிபுபவர்கள் ஜேர்மனி மொழிப்பரீட்சயம் மாத்திரம் கொண்டவர்களாவர். அவர்களால் தமிழ்மொழி அச்சுப் பணிகளை மேற்கொள்வது சிரமமான காரியமாக இருந்தது. அப்படியிருந்தும் வெற்றிமணியை வெளியிட வேண்டும் என்பதில் நான் உறுதியாக செயற்பட்டேன்.
இதற்கு நான் பெற்றுக்கொண்ட பட்ட படிப்பு பெரிதும் உதவியது. களனி பல்கலைக்கழகத்தில் நுண்கலை துறையில் ஒவியம் தொடர்பில் கற்று பட்டம் பெற்ற எனக்கு இப் பத்திரிகை யை வெளியிட இக்கற்கை பெரிதும் உதவியது. 1994 காலப்பகுதியில் இப்போது போன்று கணினி வசதி இருக்கவில்லை. அச்சயம் எனது ஒவிய அறிவைப் பயன்படுத்தி பத்திரிகையை சீராகவும் ஒழுங்கமைப்புடனும் வெளிக்கொணர முடிந்தது
அதேநேரம் அன்றைய காலப்பகுதியில் ஜேர்மனியிலுள்ள அச்சகங்களில் ஜேர்மனி மொழி அல்லாத வேறுமொழியில் சஞ்சிகையொன்றை அச்சிட்டு வெளியிடுவது பாரிய சவாலுக்குரிய விடயமாக இருந்தது. வெற்றிமணி தமிழ் மொழியில் வெளியிடப்படும் பத்திரிகையாக இருந்ததால் அவர்கள் நீல நிறத்தில் சதுரப் பெட்டி போட்ட அட்டையை வழங்குவார்கள். அதில் தமிழ் மொழியில் எழுதி அதைப் பிரதிபண்ணி தலையங்கத்தைக் பெரிதாக்கி அதில் ஒட்டி அவர்களிடம் வழங்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் அதனைப் படம் எடுத்து அதனைச் செய்வார்கள்.
அத்தோடு எந்தப் பக்கம் மேல் நோக்கி இருக்க வேண்டும்? எந்தப் பக்கம் கீழ் நோக்கி இருக்க வேண்டும் என்பதை சரியாகக் கண்டறிவதிலும் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.
அச்சமயம் தான் தமிழ் எழுத்துக்கு மேல் குத்து இருந்தால் அது மேல் நோக்கி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்து அதற்கு ஏற்ப செயற்பட்டார்கள். அவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் வளர்ந்த வெற்றிமணி ஊடாக ஜேர்மனி மொழி மாத்திரம் தெரிந்த அவர்களுக்கு கடந்த 30 வருட காலப்பகுதியில் தமிழ் மொழிப் பரீட்சயம் ஏற்பட்டுள்ளது. கேள்வி: தமிழ் மொழி பரவலாகப் பயன்படுத்தப்படாத நாடொன்றில் இவ்வாறான பத்திரிகையை 30 வருடங்களாக தொடராக வெளியிடுவது என்பது இமாலயச் சாதனை தான். அது தொடர்பில் கூறுங்கள்?பதில்: வெற்றிமணி முழு வர்ணப் பதிப்பாகத் தொடராக வெளிவர ஜேர்மனியிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இலங்கையில் ஒரு காலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவருவதற்கு பிரதேச மட்டத்திலுள்ள வாசிகசாலைகள், கிராம முன்னேற்ற சங்கங்கள் பெரிதும் உதவி வரக்கூடியனவாக இருந்துள்ளன. அதேபோன்று ஜேர்மனியில் வர்த்தக நிறுவனங்கள் உதவுகின்றன. குறிப்பாக பத்திரிகைகள், கலை நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் தங்களது ஒத்துழைப்பையும் ஆதரவையும் முன்முகத்துடன் நல்கி வருகிறார்கள். அவர்களது ஆதரவும் ஒத்துழைப்பும் என்றும் மறக்க முடியாதவையாகும்.
499 total views, 6 views today