நமக்கு ஏன் வீண் வம்பு!

சேவியர்


ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு தந்தை தனது மகனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார், “இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்பா” என்று ! உண்மையில் இன்றைய சமூகத்தின் ஒட்டு மொத்தப் பிரதிபலிப்பாய் அந்த ஒற்றை வசனத்தை நாம் கருதிக் கொள்ளலாம்.


இன்றைய சமூகத்தில் ‘கொடுமை கண்டு பொங்குதல்’ ரொம்ப ரொம்ப குறைந்து விட்டது. காலப்போக்கில் இதெல்லாம் அப்படியே மழுங்கி இல்லாமலேயே போய்விடுமோ எனும் கவலை கூட உண்டு. முன்பெல்லாம் ஒருவர் இலஞ்சம் வாங்கி பிடிபட்டால் அது பெரிய அவமானமாகக் கருதப்படும். ‘அவன் இலஞ்சம் வாங்கி பிடிபட்டானாம்டே.. இனி அவன் எப்படி மானங்கெட்டு நடப்பான் ?’ என பேசிக்கொள்வார்கள். இப்போதெல்லாம் அத்தகைய குற்றச்சாட்டுகளை புறங்கையால் தட்டி விட்டு, அடுத்த இலஞ்சத்துக்காய்க் கை நீட்டுகின்றனர் அதிகாரிகள். இலஞ்சத்தைப் புடிக்க வரும் அதிகாரிகளுக்கே இலஞ்சம் குடுக்கலாம் எனும் நிலமையும் உண்டு என்கின்றனர்.

இன்னும் ஒரு படி போய், ‘என்னப்பா.. அவன் அவன் ஆயிரம் கோடி, இலட்சம் கோடின்னு அடிக்கிறான்.. இவன் என்ன அம்பதாயிரம் ரூபா இலஞ்சம் வாங்கியிருக்கிறான். இதைப் போய் பெருசா பேசறியே’ என இலஞ்சம் வாங்கியதையே பொதுமக்கள் நியாயப்படுத்தக் கூடிய நிலமைக்கு உலகம் இன்றைக்கு சென்று விட்டது.
இன்னொரு உதாரணமாக, சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படம் இலஞ்சம் வாங்குபவர்களைத் தண்டிப்பதாய் அமைந்திருந்தது. பிரமாண்டப் பொருட்செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் படு தோல்வியைச் சந்தித்தது. அந்த திரைப்படம் குறித்து ஒரு பிரபல விமர்சகர் பேசும்போது, ‘இந்தக் காலத்துல இலஞ்சம் எல்லாம் நார்மலாயிடுச்சு.. அதைப் பற்றி பேசினா எவன் பாப்பான்’ என வெகு யதார்த்தமாகப் பேசினார். ஒரு பெரிய பாவச் செயலாய் இருந்தது, சமூகத்தின் சாதாரண நிகழ்வாய் எல்லோரும் கடந்து போகின்ற நிகழ்வாய் மாறியிருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய செய்தி.


இன்னும் சில காலம் போனால் இந்த இலஞ்சத்தைப் போல, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இவையெல்லாம் சகஜமாகலாம். சில பல ஆண்டுகளுக்குப் பின், ‘என்ன ஒரு பாலியல் வன்கொடுமை தானே அதைப் போய் பெருசா பேசறீங்க’ எனப் பேசும் காலம் வரலாம்.

எந்த ஒரு சிக்கலையும் துவக்கத்திலேயே களையாவிடில் அது முள்மரமாய் வளர்ந்து ஊரையே அழித்து விடும். ரொம்ப நாட்கள் முள்காடைப் பார்த்துப் பழகிவிட்டால் ‘ஆமா முள்ளு.. சோ வாட்.. நீ கொஞ்சம் தள்ளு’ என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவோம்.
சின்னச் சின்ன பிரச்சினைகள், சவால்கள் நிகழும் போதே எதிர்க்கப் பழகிவிட்டால் பெரிய பெரிய பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க முடியும். ஒரு சிறுவன் ஒரு சின்னப் பொருளைத் திருடும்போதே தடுத்தால் பிற்காலத்தின் அவன் பெரிய கொள்ளைக்காரன் ஆவதிலிருந்து தடுக்கலாம். அதே போல தான் ஒரு சமூகமும் தன்னுடைய அறத்தை விட்டு விலகும்போது தடுத்தால், அது மிகப்பெரிய அழிவில் விழுவதிலிருந்து தப்பலாம்.
ஆன்மிக விஷயத்திலும் இதை நாம் பொருத்திப் பார்க்கலாம். ஒரு மனிதன் தன்னுடைய பாவ சிந்தனைகளையும், செயல்களையும் தொடக்கத்திலேயே களைய ஆரம்பித்தால் அவனுடைய மனம் தூய்மையாகிக் கொண்டே இருக்கும். அவன் பிற்காலத்தில் பாவத்தை விலக்கிய ஒரு நல்ல மனிதனாய் வாழ அது அவனுக்கு துணை செய்யும்.


இன்றைக்கு மனிதர்கள் பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காததன் முக்கிய காரணம் அவர்கள் தனி மனிதர்கள் என்பதால் தான். பிரச்சினைக்கு எதிராய்க் குரல் கொடுத்தால் வருகின்ற பின் விளைவுகளை அவர்கள் மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதால் தான். இன்றும் கிராமங்களில் எல்லோரும் ஒன்றாய் நின்று சண்டை போடுவதைப் பார்க்கலாம். உள்ளூர்க்காரரை வெளியூர்க்காரர் எதிர்த்தால் ஊரே சேர்ந்து உள்ளூர்க்காரரைக் காப்பாற்றும். ஆனால் நகர்புறத்தில் அந்த நிலமை இல்லை. ஓட ஓட ஒரு அப்பாவியை நடுத்தெருவில் வெட்டிக் கொன்றால் கூட ஆயிரம் பேர் வேடிக்கை பார்ப்பார்களே தவிர, யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். காரணம் பயம் ! அவர்களுக்கும் அந்த அரிவாள் வெட்டு விழும் எனும் பயம். ஒரு பத்து பேர் எதிர்த்துக் குரல் கொடுத்தால் அருவாளுடன் நிற்பவன் பின்வாங்குவான் என்பதே உண்மை. ஆனா நமது அச்சம் அதை அனுமதிப்பதில்லை.
நம் அச்சத்தின் இன்னொரு காரணம், நம்முடைய ஆளும் அரசு நமக்குத் துணையாய் நிற்குமா எனும் சந்தேகம் தான். சமூகமும் துணையில்லை, அரசும் துணையில்லையேல் எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் மட்டுமே அவஸ்தைப்படும் நிலமை உருவாகும். அவர்களுடைய குடும்பம் மட்டுமே பாதிக்கப்படும் நிலை உருவாகும். அப்படி ஒரு சூழல் வந்தால் நாமும் சொல்வோம், ‘கண்டும் காணாம போயிடுவோம்பா… ‘.


இன்னொரு காரணம் நமது மனநிலை. ஏதோ ஒரு தேவதூதன் விண்ணிலிருந்து இறங்கி வந்து எல்லோரையும் காப்பாற்றுவான் என நாம் நம்புகிறோம். சமூகத்தைத் திருத்துவதோ, சமநிலையைப் பாதுகாப்பதோ நமது கடமையல்ல, ஏதோ ஒரு மூன்றாவது நபரின் கடமை என நினைக்கிறோம். நம்ம சினிமாக்களும் அதைத் தானே கற்றுத் தருகின்றன. எல்லோரையும் போட்டு அடி அடி என வில்லன் அடிக்க, மக்கள் எல்லாரும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, கடைசியில் ஸ்லோ மோஷனில் வரும் ஹீரோவின் கால்கள் தான் நீதியை நிலைநாட்டுகின்றன. தொடர்ந்து சினிமா பார்த்துப் பார்த்து அப்படி யாரோ வந்து. காப்பாற்றுவார் என்றே பாவம் தமிழன் நம்பிக் கொண்டிருக்கிறான்.


அதையும் தாண்டி, ஒரு பிரச்சினை எந்த அளவுக்கு என்னைத் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கிறது என்பதும், நான் எந்த அளவுக்கு அந்தைப் பிரச்சினையில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், என்பதை நிர்ணயிக்கிறது. எனது வாழ்க்கைத் துணையை, எனது பிள்ளைகளை, எனது பெற்றோரை, எனது வீட்டை நேரடியாகத் தாக்கும் பிரச்சினைகள் தான் முதன்மை இடத்தைப் பெறுகின்றன. அதைத்தாண்டி பக்கத்து வீட்டு சன்னலில் விழுகின்ற பிரச்சினைகளுக்குக் கூட நான் கதவுக் காதுகளைப் பொத்தித் தான் அமர்ந்திருக்கிறேன். அதனால் தான் பொதுவான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
கைகள் இணைந்தால் தீர்வுகள் உருவாகும், ஆனால் இணையாதபடி நமது வாழ்க்கை நம்மை இதயத்தால் விலக்கி வைத்திருக்கிறது. நமது வீடுகள் சுவரோடு சுவர் சேர்த்து எழுப்பப்படுகின்றன. ஆனால் நமது இதயங்கள் மைல்களுக்கு அப்பால் தான் மையம் கொண்டிருக்கின்றன.


‘நீ மட்டும் ஓட்டுப் போட்டு என்ன மாறப் போவுது ?’ , ‘நீ மட்டும் லஞ்சம் வாங்கலேன்னா நாடு திருந்திடுமா ?’, ‘நீ மட்டும் எதிர்த்து பேசினா எல்லாம் சரியாயிடுமா ?’ எனும் சிந்தனைகளை நமது சமூகம் நமக்குள் விதைத்துக் கொண்டே இருக்கிறது. அதனால் நாமும் நினைப்போம், ‘நான் மட்டும் பேசி என்ன ஆவப் போவுது.. அப்புறம் என்ன,.. பேசாமலேயே இருந்துடுவோம்’. இப்படி நம்மால் எதையும் மாற்ற முடியாது என நம்புகின்ற மனநிலை சமூக மாற்றத்துக்கான விதையைத் தூவ விடுவதில்லை.
அப்படியே ரொம்ப கஷ்டப்பட்டு சமூகத்தில் குரல் கொடுப்பவனை சாதீய ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடையாளப்படுத்தி அவனுடைய சிந்தனையை நீர்த்துப் போகச் செய்யும் பணியை முதலாளித்துவ அமைப்புகள் கன கட்சிதமாய்ச் செய்து முடிக்கின்றன. அதனால் களம் புகும் மனிதர்களுக்கு கெட்ட பெயர் வந்து சேர்கிறது. ‘சும்மா இருந்திருந்தா மானத்தோட இருந்திருக்கலாம்.. ‘ எனும் விரக்தி மனநிலையில் மனிதர்கள் வந்து சேர்கின்றனர்.
இன்னொரு விதத்தில் பார்த்தால், இன்றைய டிஜிடல் யுகம் நம் முன்னால் செய்திகளை குப்பை லாரி போலக் கொண்டு கொட்டுகிறது. அதில் சரி எது தவறு எது என பளிச் என கண்டுபிடிக்கவே முடியாது. நாம் கொண்டிருக்கின்ற அனுமானம் சரியா, நாம் எடுக்கின்ற முடிவு சரியா எனும் குழப்பத்தில் நாம் மிக எளிதாய் விழுந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதுவும் ஒரு வகையில் மக்கள் களத்தில் இறங்குவதைத் தடுக்கிறது எனலாம். கூடவே, டிஜிடல் உலகம் நம்மை நாலு கால் பாய்ச்சலில் தானே ஓட வைக்கிறது ! காலையில் எழுந்து நள்ளிரவில் தூங்கும் வரை ஏதோ ஒரு அலுவல் நம்மை அழுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் சமூகத்தைச் செப்பனிட நமக்கெங்கே நேரம் !
இப்படி இருக்குமிடம் தெரியாமல் இருந்தால், கடைசியில் நம் சமூகம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் போய்விடும். இந்த சூழலில் என்ன செய்யலாம் ?


நமது பிள்ளைகளுக்கும், சக மனிதர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மனுக்குலம் எப்படி இணைந்து வாழவேண்டும், அதன் தேவை என்ன என்பதை சிறு சிறு இயக்கங்கள் வாயிலாக புரிய வைக்க வேண்டும்.
சமூகத்தில் நல்லிணக்கத்தைக் காக்கவும், தனி மனித ஒழுக்கத்தைப் பேணவும், தவறுகள் நடக்கும் போது அதை தட்டிக் கேட்கவும் மக்களோடு அரசு, காவல்துறை போன்றவையும் கைகோர்க்க வேண்டும். கூடவே தனியார் அமைப்புகள், இயக்கங்கள், நிறுவனங்கள் போன்றவையும் இணையலாம்.
தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்பவர்களுக்கான பாதுகாப்பை சமூகமும், காவல் துறையும் அளிக்கும் எனும் நிலையை உருவாக்க வேண்டும். அப்படி முன் வரும் நபர்களுக்கு அங்கீகாரங்களும், பரிசுகளும் கொடுக்கும் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம், யூ டியூப், எக்ஸ், ஃபேஸ்புக் எல்லா இடங்களிலும் சமூகத்தின் நன்மைக்குப் பாடுபடுபவர்களைக் குறித்த பதிவுகளும், நாம் அவற்றைப் பின் தொடர வேண்டும் எனும் அறைகூவலும் தொடர்ந்து இடம் பெற வேண்டும்.

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பாடசாலைகள் – எல்லா இடங்களிலும் ஏட்டுக் கல்வியைப் போல நாட்டுக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூகத்தின் வீதிகளில் செல்லும் போது செய்ய வேண்டிய கடமைகள் என்னென்ன என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.
இத்தகைய பணிகளுக்கும், விழிப்புணர்வுக்கும் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோரை பயன்படுத்தலம். அது அதிக பயனளிக்கும்.
இது நம் சமூகம் எனும் சிந்தனை கொள்வோம். நமது மானுட தோழர்கள் வாழவேண்டும் எனும் ஆசை கொள்வோம். நமக்கென்ன என ஒதுங்காமல், நமக்கென போராடக் களம் புகுவோம்.
*

சேவியர்

684 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *