யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! – சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்



எம்.நியூட்டன்)
தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார்.
தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில் தி.பாலசுப்பிரமணியம்  நினைவாக அவரது குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லம் புனரமைக்கப்பட்டு சிவபூமி தேவார மடமாக, கடந்த மாதம் (14.07.2024) திறந்துவைக்கப்பட்டது. 
இதில் பிரதம விருந்தினராக வருகைதந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்,   சிவபூமி தேவார மடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 
இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்கவைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது. 
சைவத்துக்கும் தமிழுக்கும் சேவை செய்ய  கலாநிதி ஆறுதிருமுருகன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவேண்டும்.
சாதாரண தொண்டு செய்பவர்கள் விளம்பரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விளப்பரத்துக்காகவே தொண்டு செய்கிறார்கள். ஆனால் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகளை மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார். இது இறைவனின் அருள் இல்லாமல் செய்யமுடியாது. இறைவனின் அருள் இவருக்கு உள்ளது. 
சைவமும் தமிழும் எல்லோரையும் வாழவைக்கும். அத்தகைய பணி செய்பவரை யாழ்ப்பாணம் பெற்றுள்ளது. இத்தகைய பணி  தமிழகத்தில் இல்லையே. காலமாற்றத்தால் சுருங்கிப்போயுள்ளது. ஆறுதிருமுருகனின் பணி உலகில் பல இடங்களுக்கும் தேவையாக உள்ளது. 


இன்றைய தேவார மடம் திறப்பு விழா அவசியமான ஒன்றாகும். எனது பதவி நிலை காரணமாக பல இடங்களுக்கு அழைப்பார்கள். அங்கு சென்றால் பல மொழிகளை பேசுவார்கள்.  தேவாரங்கள் பாடுவார்கள். அவை சிலவே. ஆனால் இங்கு திருமுறை ஆடல் ஆற்றுகை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மடத்தில் தேவாரத்துடன் ஆடல் ஆற்றுகையும் நடைபெறவேண்டும். இந்த தேவார மடத்தை இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.நன்றி. வீரகேசரி, படங்கள். வெற்றிமணி

433 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *