நோர்வேயில் கலாசாதனா மாணவிகளின் ‘தீதும் நன்றும்- Good and evil’ ஆடல் அரங்கேற்றம்!
- ரூபன் சிவராஜா (நோர்வே)
நடன ஆசிரியரும் கலாசாதனா கலைக்கூட இயக்குநனருமான கவிதா லட்சுமியின் மாணவிகள் ஹர்ணி நகுலேஸ்வரதாஸ் மற்றும் தீபிகா மகேசன் ஆகியோரது ஆடல் அரங்கேற்றம் கடந்த 17.08.25 நோர்வே ளுயனெஎமைய வுநயவநச அரங்கில் இடம்பெற்றது.
‘தீதும் நன்றும்’ எனும் கருப்பொருளில் (Thematic Presentations) இந்த ஆடல் அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது.
கருப்பொருள்
வழமையான (சடங்கு ரீதியான) பரத நாட்டிய அரங்கேற்றங்களைக் கலாசாதனா கலைக்கூடம் நிகழ்த்துவதில்லை. 2014ஆம் ஆண்டிலிருந்து நடன மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்வுகளை கருப்பொருள் சார்ந்தவையாகவே வடிவமைத்து வருகின்றது. இதற்குமுன் (2018) சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினோராடல், பாரதியின் தமிழிசை (2015), தமிழ் இலக்கியத்தில் பெண் (2014) எனும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த அரங்கேற்றங்களை நிகழ்த்தியது. அவை பார்வையாளர்களிடத்தே வரவேற்பைப் பெற்றிருந்தன.
இம்முறை கவிதா கண்டடைந்த கருப்பொருள் ‘தீதும் நன்றும்’
புனைவுகள் மற்றும் காப்பியங்களின் கிளைக்கதைகள், எதிர்மறைப் பாத்திரங்கள் குறித்த வியாக்கியானங்கள், மறுவிசாரணைகளை நிகழ்த்துகின்ற வகையில் இந்த அரங்கேற்றத்தின் வெளிப்பாடாக அமைந்தன.
பாத்திரச் சித்தரிப்புகள் குறித்த புதிய பார்வை தொடர்பான தேடலாகவும், கதைசொல்லாகவும், பாத்திரங்களின் உளவியலைக் கண்டடைவதாகவும் இம்முயற்சியைக் கொள்ளமுடியும்.
தீதும் நன்றும்
கம்பராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களில் எதிர்மறைப் பாத்திரங்களாக – அதாவது தீய சக்திகளாகச் சித்தரிக்கப்பட்ட பல பாத்திரங்கள் உள்ளன. இலக்கியங்களை வாசிக்காதவர்கள்கூட அப்பாத்திரங்களை மேலோட்டமாகவேனும் அறிவர். அவை காலம்காலமாகக் கதைசொல்லல்கள், இலக்கியத் தழுவல்கள், மேற்கோள்கள், உவமைப்படுத்தல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டன.
அவற்றின் மறுபக்கத்தையும் அப்பாத்திரங்களின் நியாயங்களையும் கருத்திலெடுக்காத வகையில் அவை பரவலாக நிலைபெற்றும்விட்டன.
மனித மனம், குண இயல்பு, வாழ்வின் அநுபவங்களையும் உணர்வுகளையும் செயற்பாடுகளையும் வெறுமனே கருப்பு- வெள்ளையாக, தீயது – நல்லது என்ற இருமைப் பார்வைக்கு ஊடாக மட்டும் பார்த்துவிட முடியாது. அப்படி அணுகிவிடவும் முடியாது.
தீதும் நன்றும் இரண்டறக் கலந்ததே மனமும் வாழ்வும்.
எதிர்மறைப் பாத்திரங்களின் கதைகள்
இந்த அரங்கேற்றத்தில் பரத நாட்டிய அரங்கேற்ற உருப்படிகளுக்கான கட்டமைப்புக்குள் தாடகை, இராவணன், சூர்ப்பணகை, கூனி, சிகண்டி, சகுனி, பாஞ்சாலி ஆகிய புனைவிலக்கியப் பாத்திரங்களின் கதைகளும் – சித்தரிப்புகளும் – மறுபக்கங்களும் – வியாக்கியானங்களும் எடுத்தாளப்பட்டிருந்தன.
தாடகை,கூனி ஆகிய பாத்திரங்களுக்கான பாடல்கள், உரையாடல்களை நான் எழுதியிருந்தேன்.. இராவணன், சகுனி பற்றிய பாடல்களை உமாபாலன் சின்னத்துரை எழுத, சிகண்டி, பாஞ்சாலி குறித்த பாடல்களைக் கவிதாவும் எழுதியிருந்தார். அருணாசலக் கவிராயர் படைத்த ஒரு பாடல் சூர்ப்பணகை காதலைச் சித்தரிக்கவும் எடுத்தாளப்பட்டிருந்தது. பரதநாடடிய அரங்கேற்றத்திற்குரிய வடிவம் அப்படியே இருக்க, அதாவது அலாரிப்பு, கவித்துவம், வர்ணம், பதம், கீர்த்தனை, தில்லான எனவான ஆடல் வடிவங்களுக்கு ஊடாகவே புதிய பேசுபொருட்கள் பேசப்பட்டன. கவித்துவம் என்ற உருப்படிக்குள் மகாபாரத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான அரக்கியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கும் – பரவலாக அறியப்படாத தாடகையின் கதை சொல்லப்பட்டது.
கதை சொல்லல் வடிவத்திற்கு ஊடாக கூனியின் கதை நிகழ்த்தப்பட்டது.
கர்ணன் மீதான பாஞ்சாலியின் காதலும் இராமன் மீதான சூர்ப்பணகையின் காதல் பதமாக தனித்தனியாக தீப்பிகா மற்றும் ஹர்ணி ஆகியோரால் ஆடப்பட்டன. சிருங்கார ரசம் நிறைந்தவை இவ்விரண்டு உருப்படிகளுக்கான ஆற்றுகை அமைந்தன. இராவனனின் கதையையும் அப்பாத்திரத்தின் பல்பரிமாணப் பக்கங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ‘வர்ணம்’ வடிவமைக்கப்பட்டிருந்தது. சிகண்டியின் கதையும் சகுனியின் கதையும் ‘கீர்த்தனை’ உருப்படிகளாக நிகழ்த்தப்பட்டிருந்தன.
காட்சிப்படுத்தல்
ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு பாத்திரங்களினதும் செயல்களுக்கும், இயல்புகளுக்கும் காரணமாக அமைந்த அவர்களின் தரப்பு நியாயங்களும் உளவியல்களும் வெளிப்படுத்தப்பட்டன. கருப்பொருளின் தலைப்பிற்கு அமைய பாத்திரங்களின் குணாம்சங்களும் அவற்றின் அக-புறச் சூழல்களும் பாடல்வரிகள், காட்சிப்படுத்தல், பாத்திரச்சித்தரிப்புகளிற் பிரதிபலித்தன. அதில் அழகியல், நேர்த்தி, கலைத்துவம் மிளிர்ந்தது. நடன அமைப்பில் மெய்ப்பாடுகள், உடல்மொழி, நடன அசைவுகளின் அழகியல் நேர்த்தியோடு, காட்சிப்படுத்தல்கள், நிகழ்த்திக்காட்டல்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பாத்திரங்களும் பின்னணிகளையும் தனித்துவ இயல்புகளையும் கொண்ட வலுவானவை. எனவே அவற்றையும் அவற்றின் கதைகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்துவதற்கு காட்சிப்படுத்தல்கள் அவசியம். அதனைக் கவிதா சிறப்பாக வடிவமைத்து நெறிப்படுத்தியிருந்தார். அரங்கேற்ற நாயகிகளும் பாத்திரங்களின் தனித்துவங்களை உணர்ந்து மெய்ப்பாடுகளையும் உடல்மொழியையும் வெளிப்படுத்தியிருந்தனர். ஆற்றுகைக்குரிய (Performance) வெளி மிகப்பெரியதாக இருந்தது. அதனை இருவரும் தனித்துவமாகவும் நுணுக்கமாகவும் வெளிப்படுத்தியிருந்தனர்.
ஒவ்வொரு பாத்திரங்களின் கதைகளும் நிகழ்த்தப்பட்டன. ஒவ்வொரு உருப்படியும் ஒவ்வொரு நடன நாடகம் எனச் சொல்லக்கூடியவை. அன்றைய அரங்கேற்றத்தில் பல நடன நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன என்று சொல்வதுகூட ஒருவகையிற் பொருத்தமானது. அரங்கேற்றப் பேபொருளும், கதைகளும் ஆற்றுகையும் அற்புதமான பார்வை அனுபவத்தினை வழங்கியிருந்தது.
வடிவம் – கட்டமைப்பு – பேசுபொருள்
அலாரிப்பு – விருத்தம் என்ற உருப்படிகளுக்கு நடுவுநிலமை அதிகாரத்திலிருந்து மூன்று திருக்குறள்கள் பயன்படுத்தப்பட்டன. அரங்கேற்றக் கருவுருவுக்குக் கட்டியம் கூறுவதாக அவை அமைந்தன. முடிவில் தில்லானவில் கணியன் பூங்குன்னாரின் தத்துவார்த்த, மானிட சமத்துவ, இயங்கியல் குறித்த ஆழமான கவித்துவ வரிகளைக் கொண்ட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தமை உகந்த நிறைவுரைப் பாடலாகவும் அமைந்திருந்தது.
அரங்கேற்ற நிகழ்விற்கு ஆற்றல் மிக்க பக்கவாத்தியக் கலைஞர்கள் இசையால் உயிர்கொடுத்தனர். குரலிசை ஹரிகரன் சுயம்பு, மிருதங்கம் பிரசாந்த் பிரணவநாதன், வயலின் அதிசயன் சுரேஸ், வீணை சௌமியா இராமச்சந்திரன்.
ஒரு கலை வடிவத்தின் கட்டமைப்புக்குள் நின்று – அதன் இலக்கணத்திற்கு நின்றபடியே – பல்வேறு புதிய பேசுபொருட்களை பேச முடியும் என்பதனை நிறுவுகின்ற அல்லது அதனைப் பழக்கப்படுத்துகின்ற ஒரு முனைப்பாகவும் கவிதாவின் கலை படைப்பாக்க முயற்சிகளை நாம் நோக்க முடியும். ஒரு கலை வடிவத்தின் ஊடாகத் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான பொருளையே பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற கட்டுடைப்புச் சிந்தனையும் செயற்பாடும் இத்தகு கருப்பொருள் சார்ந்த பரத அரங்கேற்றப் படைப்பு உருவாக்கங்களில் வெளிப்படுகின்றன. Pஊ: வுhநநியn புயநௌh
269 total views, 6 views today